Published:Updated:

பிளவுற்ற தமிழ்க் கட்சிகள் 3-ல் 2-ஐ குறிவைக்கும் ராஜபக்சே!

இலங்கைத் தேர்தலின் இறுதி நிலவரம்...
பிரீமியம் ஸ்டோரி
News
இலங்கைத் தேர்தலின் இறுதி நிலவரம்...

இலங்கைத் தேர்தலின் இறுதி நிலவரம்...

கொரோனா காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது. எப்படி இருக்கிறது நிலவரம்?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மொத்தம் 2.17 கோடி மக்கள்தொகை கொண்ட இலங்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் வெறும் 2,815 பேர் மட்டுமே. அவர்களில் 2,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ராணுவ நடவடிக்கையின் மூலம் கொரோனாவை வெற்றி கண்ட ராஜபக்சே சகோதரர்கள், அதே சூட்டோடு தேர்தலிலும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளனர். 225 உறுப்பினர்களை உள்ளடக்கிய இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. சமூக இடைவெளியுடன் மக்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வாக்களிக்கும் நேரத்தையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரசாரத்தில் ராஜபக்சே சகோதரர்கள்...
பிரசாரத்தில் ராஜபக்சே சகோதரர்கள்...

பெரும்பான்மையான தொகுதிகள் சிங்களர் பகுதிகளிலேயே இருப்பதால், சிங்களக் கட்சிகளுக்குள்தான் பிரதான போட்டி இருக்கும். போட்டி கடுமையாக இருந்தாலும்கூட இந்த முறை, ராஜபக்சேவின் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப் படுகிறது. காரணம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுற்றிருக் கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவிவகித்த சஜித் பிரேமதாசா, `ஐக்கிய மக்கள் சக்தி’ என்ற பெயரில் தனி அணியாகி, சிறுபான்மை முஸ்லிம் மற்றும் தமிழ்க் கட்சிகளுடன் கூட்டணியை உருவாக்கி, தேர்தலைச் சந்திக்கிறார். சிங்களக் கட்சிகள் மட்டுமல்ல, தமிழ்க் கட்சிகளும் பல பிரிவுகளாகவே தேர்தலைச் சந்திக்கின்றன. தமிழ்த் தேசிய கொள்கையைக்கொண்ட கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என மூன்று அணிகளாகப் பிரிந்து தேர்தலைச் சந்திக்கின்றன.

‘‘தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்குக் கிடைக்கும், தமிழர்களுக்கு இந்தத் தேர்தல் எத்தகையதாக இருக்கும்?” என்பவை குறித்து யாழ்ப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் முனைவர் கணேசலிங்கத்திடம் பேசினோம். ‘‘வட கிழக்கு பிரதேசம் முக்கியமான அரசியல் தீர்மானத்துக்கான காலத்தில் உள்ளது. தமிழ் வாக்காளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமீது அதிருப்தியுடன் இருக்கின்றனர். அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் பெரிய அளவில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், மாற்று அணிகளுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேவேளையில், மாற்றுத் தரப்பினரும் ஒன்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் தமிழ் மக்களிடம் இருக்கிறது.

பிரசாரத்தில்  சஜித் பிரேமதாசா
பிரசாரத்தில் சஜித் பிரேமதாசா

தமிழர் பகுதிகளில் தென் இலங்கை அரசியல் கட்சிகளின் செல்வாக்கு கடந்த தேர்தல்களைவிட அதிகரித்துள்ளது. ஆனால், அந்தச் செல்வாக்கு வாக்குகளாக மாறுமா என்பது சந்தேகம்தான். வாக்குகளைச் சிதறடித்து, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நோக்குடன் ஐந்து சுயேச்சைக் குழுக்கள் திட்டமிட்டுக் களமிறக்கப்பட்டுள்ளன. அதேசமயம் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் மீதான ராணுவக் கெடுபிடி, அவரது செல்வாக்கை உயர்த்தியிருக்கிறது. கிழக்கு மாகாணத்திலும் அவரது அணி போட்டியிடுவது வடக்கு கிழக்கு தழுவிய அணியாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் வெற்றியைக் கடந்து, வடக்கு கிழக்கு என்ற தமிழர் தாயகக் கோட்பாட்டை பலப்படுத்தும் அணியாக அது மாறியுள்ளது. இது தமிழரின் எதிர்கால அரசியலுக்கு அடித்தளமாக அமையும்’’ என்றார்.

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனிடம் பேசினோம். “போருக்குப் பிறகு 2005-ல் ஈழத்தில் நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் எமது மக்கள் வரலாறு காணாத வகையில் வாக்களித்தனர். 2009-ம் ஆண்டுக்குப் பிறகான தேர்தல்களிலும் ஈழ மக்கள் தங்களின் வாக்குகளை ஆயுதமாகத்தான் உபயோகித்துவருகின்றனர். எங்கள் மக்களின் தீர்ப்பு மிகச் சரியாக இருக்கும்.

என்னைப் பொறுத்தவரையில், இனப்படுகொலை புரிந்த ராஜபக்சே தரப்பினர் மற்றும் சிங்களப் பேரினவாதக் கட்சிகளின் ஊடாக வடக்கு கிழக்கில் போட்டியிடுபவர்கள் முழுதாக தோற்கடிக்கப்படுவர். இனப்படுகொலை யில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு வாக்குகூட விழக் கூடாது. அவர்களுக்கு வாக்களித்தால், அது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்குச் செய்கிற பாவம். இந்தமுறை தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகின்ற மூன்று கட்சிகள் தமிழர்களின் தாயகத்தில் போட்டியிடுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணத்தின் விமர்சனமாகவும் இந்த தேர்தல் முடிவுகள் அமையக்கூடும்’’ என்றார்.

கணேசலிங்கம் - தீபச்செல்வன்
கணேசலிங்கம் - தீபச்செல்வன்

பெரும்பான்மை என்பதைத் தாண்டி, `மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெற்றுவிட வேண்டும்’ என்பதே இந்தத் தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அப்போதுதான் ஜனாதிபதிக்கு இருந்த அளவு கடந்த அதிகாரத்தைக் குறைக்க, மைத்திரிபால சிரிசேனா ஆட்சியில் செய்யப்பட்ட 19-வது சட்டத் திருத்தத்தை மாற்றி, பழையபடி ஜனாதிபதிக்கு அளவு கடந்த அதிகாரத்தை வழங்க முடியும். அது மட்டும் நடந்துவிட்டால், தமிழர் பகுதிகளில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலங்கையும் ராஜபக்சே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.