`முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதா?!' -சேகர் ரெட்டி அலுவலகத் தீ விபத்தால் சர்ச்சை
தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருப்பது, சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான நான்கு மாடிக் கட்டடம் ஒன்று, சென்னை தி.நகர் விஜயராகவா சாலையில் உள்ளது. இதன் நான்காவது மாடியில் ஜெ.எஸ்.ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்கிற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை அலுவலகத்தின் ஜன்னல் வழியாகப் புகை வெளிவருவதைக் கண்ட காவலாளிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட நான்காவது தளத்தை அடைய படிகள் வழியாகச் செல்ல முடியவில்லை என்பதால், கிரேன் உதவியுடன் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.


2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. இதில், 34 கோடி ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. கைப்பற்றப்பட்ட பணத்தில் 24 கோடி ரூபாய் அளவுக்குப் புத்தம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாகவும் சேகர் ரெட்டி மீது வழக்கு பாய்ந்தது. அப்போது ரெய்டு நடத்தப்பட்ட அலுவலகங்களுள் ஜெ.எஸ்.ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அலுவலகமும் ஒன்று.
தமிழகப் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் ஒப்பந்தங்களைக் கையாளும் ஜெ.எஸ்.ஆர். இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அலுவலகத்தில், சேகர் ரெட்டி தொடர்புடைய ஆவணங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், சேகர் ரெட்டி அலுவலகத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் தீ விபத்தை சி.பி.ஐ அதிகாரிகளும் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

சி.பி.ஐ-க்குக் கிடைத்துள்ள தகவலின்படி, இந்தத் தீ விபத்தில் சேகர் ரெட்டியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் தீக்கிரையானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
`தீயை முழுமையாக அணைத்த பின்னர்தான், எப்படி தீ விபத்து ஏற்பட்டது, தானியங்கி தீயணைப்பு அணைப்பான் இல்லாமல் எப்படிக் கட்டடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.. முக்கிய ஆவணங்கள் ஏதும் தீக்கிரையானதா என்பதெல்லாம் தெரியவரும்' என்கின்றனர் சி.பி.ஐ வட்டாரத்தில்.