Published:Updated:

முகவரி கொடுத்த முதல் வெற்றி!

டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க)
பிரீமியம் ஸ்டோரி
டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க)

அரசியல்

முகவரி கொடுத்த முதல் வெற்றி!

அரசியல்

Published:Updated:
டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க)
பிரீமியம் ஸ்டோரி
டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க)
அரசியல் கட்சிகளில் பயணம் செய்பவர்களுக்கு, `ஒருமுறையாவது எம்.எல்.ஏ-வாகவோ, எம்.பி-யாகவோ ஆகிவிட வேண்டும்’ என்ற லட்சியம் நிச்சயம் இருக்கும். அந்த லட்சியத்தைச் சிலரால் மட்டுமே அடைய முடிகிறது. அப்படிப் பலமுறை வெற்றிபெற்று அரசியலில் முக்கியமானவர்களாக வலம்வரும் சிலரிடம், அவர்களின் 'முதல் தேர்தல் அனுபவம்' குறித்துக் கேட்டோம். அவர்கள் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே...
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க)

``நான் 1982-ம் ஆண்டிலிருந்து அம்மாவின் தீவிர விசுவாசி. 1984, 1989 தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்திருந்தேன். ஆனால், இரண்டுமுறையும் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்பட்டுவிட்டது. மனம் தளராமல், 1991-ம் ஆண்டிலும் தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பம் செய்திருந்தேன்.

அம்மாதான் வேட்பாளர் நேர்காணல் நடத்தினார். கிட்டத்தட்ட முப்பது பேருக்கு மேல் விண்ணப்பம் செய்திருந்தார்கள். அம்மா ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து மிக விரிவாகப் பேசினார். என்னுடைய முறை வந்தது. ஒவ்வொருவரும் விதவிதமான, பிரமாண்டமான நினைவுப்பரிசுகளை வாங்கிக்கொண்டு வந்து அம்மாவுக்குக் கொடுத்தார்கள். நான் ஒரேயோர் ஆப்பிள் மட்டும் வாங்கிக்கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்தேன். அம்மா சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார். என்னிடம் வெகு நேரமெல்லாம் பேசவில்லை. `ஜெயக்குமார்... உங்களின் சர்வீஸ் எனக்குத் தெரியும். போட்டியிட்டால் வெற்றிபெறும் வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?' என்று மட்டும் கேட்டார். `கடவுளின் அருளாளும், அம்மாவின் ஆசியாலும் நிச்சயம் வெற்றிபெற்றுவிடுவேன்’ என்று சொன்னேன். `சரி நீங்கள் கிளம்புங்கள்’ என்று சொன்னார். நான் உடனடியாக வெளியே வந்ததைப் பார்த்த மற்ற நிர்வாகிகள் எனக்குச் சீட் கிடைக்காது என்றே அப்போது சொன்னார்கள். ஆனால், எனக்குச் சிறிது நம்பிக்கை இருந்தது. என்னை நேர்காணல் செய்யும்போது அம்மாவின் முகத்திலிருந்த புன்னகை எனக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்திருந்தது.

முகவரி கொடுத்த முதல் வெற்றி!

தற்போது இருப்பதுபோல மொபைல், தொலைக்காட்சி வசதிகளெல்லாம் அப்போது கிடையாது. பேப்பரில் பார்த்துத்தான் நான் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் விஷயத்தையே தெரிந்துகொண்டேன். தேர்தலில் மக்கள் என்னை வெற்றிபெற வைத்தனர். முதன்முறையே அமைச்சராகும் வாய்ப்பும் கிடைத்தது. 31 வயதிலேயே நான் அமைச்சர். அம்மாதான் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். அதற்குப் பிறகு ஒரேயொரு முறையைத் தவிர, ஆறுமுறை நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அடாவடி அரசியலில் ஈடுபடாமல், மக்களில் ஒருவனாக இருந்ததால் இந்த வெற்றி எனக்குச் சாத்தியமானது.''

எ.வ.வேலு (தி.மு.க)

``திருவண்ணாமலை அருகேயுள்ள சே.கூடலூர் என்ற குக்கிராமம்தான் என் சொந்த ஊர். நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். முதன்முதலாக 1984-ல் நடைபெற்ற தேர்தலில், தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அப்போது, கட்சியில் மிகப்பெரிய பொறுப்பு எதிலும் நான் இல்லை. ஆனாலும், என் கட்சிப் பணியைப் பார்த்து எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

அந்தத் தொகுதியில், டவுன் பஞ்சாயத்து ஒன்றுகூட இல்லை. முழுவதுமே கிராமப் பஞ்சாயத்துதான். மிகவும் பரந்து விரிந்த, முழுக்க முழுக்க கிராமங்களால் ஆன தொகுதி அது. அந்தத் தொகுதியிலிருக்கும் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள்கூடக் கிடையாது. நான் அவற்றை மையப்படுத்தித்தான் மக்களிடையே பிரசாரம் செய்தேன்.

முகவரி கொடுத்த முதல் வெற்றி!

பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே சொந்தமாகக் கதை, பாட்டெல்லாம் எழுதும் அனுபவமிருந்ததால், மக்கள் பிரச்னைகளைக் கலைவடிவில் கொண்டு சென்றேன். மக்கள் மத்தியில் என்மீது மிகப்பெரிய ஈர்ப்பு உண்டானது. அதனால், மக்கள் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்தனர். நான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பித்தேன். நடுவில் 10 வருடங்கள் திரைப்படத்துறைக்குச் சென்றுவிட்டு, 96-ல் தி.மு.க-வில் இணைந்தேன். 2001-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை கலைஞர் வழங்கினார். எம்.எல்.ஏ ஆனேன். 2006-ல் வெற்றிபெற்றபோது உணவுத்துறை அமைச்சராக்கியதும் கலைஞர்தான். ஐந்துமுறை வெற்றிபெற்றாலும் அந்த முதல் வெற்றி கொடுத்த மகிழ்ச்சி அளவிட முடியாததுதான்! ''

சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)

``1977-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், அறந்தாங்கித் தொகுதியில் போட்டியிட பலர் வாய்ப்பு கேட்டிருந்தனர். நானும் கேட்டிருந்தேன். ஆனால், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் போட்டியிடுவதாகப் பட்டியலிலிருந்த இரண்டு தொகுதிகளில் அறந்தாங்கியும் ஒன்று. `அருப்புக்கோட்டையா, அறந்தாங்கியா... எங்கே எம்.ஜி.ஆர் போட்டியிடுகிறார்?' என்பதுதான் அப்போது தினசரிகளில், காலை, மாலை தலைப்புச் செய்தியாக வந்துகொண்டிருந்தது. அந்தநேரத்தில், எம்.ஜி.ஆர் அறந்தாங்கியில் போட்டியிட்டால் நான்தான் மாற்று வேட்பாளர் என்பதால், கட்சியின் தலைமைக் கழகத்தில் என்னை சென்னையிலிருந்து அறந்தாங்கிக்குப் போகச் சொன்னார்கள். ஆனால், அன்று மாலை பேப்பரில் அருப்புக்கோட்டையில் எம்.ஜி.ஆரும், அறந்தாங்கியில் நானும் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்தது.

முகவரி கொடுத்த முதல் வெற்றி!

தேர்தல் பிரசாரத்தின்போது, புதுக்கோட்டையின் மற்ற தொகுதிகளுக்குப் பிரசாரத்துக்கு வந்த எம்.ஜி.ஆர்., என்னுடைய தொகுதிக்கு மட்டும் வரவில்லை. அதற்குக் கட்சியின் உட்கட்சிப் பிரச்னைகள்கூட காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், நான் சோர்வடைந்துவிடவில்லை. 27 வயது. திருமணமாகவில்லை. ஊர் ஊராக, ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தேன். `தொகுதியை வளப்படுத்துவேன், உங்களில் ஒருவனாக இருப்பேன்...’ என நான் கொடுத்த உறுதிமொழி மக்கள் மத்தியில் எடுபட்டது. புதுக்கோட்டை தொகுதியில் என் தொகுதியைத் தவிர, மற்ற நான்கு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால், அறந்தாங்கியில் மட்டும் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின் சார்பாக நான் வெற்றி பெற்றேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்னை அழைத்து பாராட்டினார். தவிர, அந்த மாவட்டத்தில் ஒரே ஆளாக நான் வெற்றிபெற்றதால், கூடுதலாக நான் வழக்கறிஞராகவும் இருந்ததால், எனக்குத் துணை சபாநாயர் பதவி கொடுத்தார்.

1977-1996 வரை அந்தத் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றேன். கட்சி, சாதி பேதமின்றி, அறந்தாங்கித் தொகுதியிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் என்னுடைய குடும்பமாகவே கருதி, அவர்களின் இன்ப, துன்பங்களில் கலந்துகொண்டு, என்னால் முடிந்த உதவிகளைச் செய்ததே என் வெற்றிகளுக்குக் காரணம்.''

கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்)

``எங்கள் கட்சியில் மற்ற கட்சிகளைப்போல, `தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்...’ எனக் கடிதம் கொடுப்பதோ, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோ கூடாது. இயக்க வாழ்க்கை அனுபவங்களை முன்வைத்து வாய்ப்புகள் வழங்கப்படும். யார் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதை, 31 பேர் கொண்ட நிர்வாகக்குழுதான் முடிவு செய்யும். அப்படி நான் முதன்முறையாக, 1984 தேர்தலில், தி.மு.க அணியில் திருப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக எங்கள் கட்சியால் தேர்வு செய்யப்பட்டேன். பிரசாரத்தின்போது, ஆரத்தி எடுப்பவர்களுக்குப் பணம் கொடுப்பது, வாக்குக்குப் பணம் கொடுப்பது போன்ற எந்த வேலையையும் நான் செய்யவில்லை. தேர்தல் செலவையும் கட்சிதான் பார்த்துக்கொண்டது.

முகவரி கொடுத்த முதல் வெற்றி!

1952-ல் தொடங்கி 1980 வரை, ஏழுமுறை ஆளும்கட்சி அணியைச் சேர்ந்தவர்கள்தான் திருப்பூர் தொகுதியில் வெற்றிபெற்றனர். முதன்முறையாக நான்தான் எதிர்க்கட்சி அணியிலிருந்து போட்டியிட்டு, சுமார் 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன்.

அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்னையால், மூன்று வருடங்கள், ஒரு மாதத்தில் ஆட்சி கலைந்தது. அதைத் தொடர்ந்து, 1996-ல் சட்டமன்ற உறுப்பினராகவும், 2004, 2019 ஆகிய தேர்தல்களில் இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். 1989 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் இரண்டுமுறை போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியிருந்தாலும், அதற்காக நான் கவலைப்பட்டதில்லை. அதற்குத் தவறான அணி சேர்க்கைதான் காரணம்.

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் மக்களுக்காகக் களத்தில் நின்று என்னால் ஆன உதவிகளைச் செய்வேன். மக்களுக்காக நாம் களத்தில் நின்றால், அவர்கள் நம்மைக் கைவிட மாட்டார்கள். அதேபோல மக்களுக்காகத் தொடர்ந்து நாம் உழைக்கவும் வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தலுமே எனக்கு முதல் தேர்தல்போலத்தான். அப்படி ஓர் உழைப்பைக் கொடுத்துக்கொண்டுதான் இருப்பேன்!''