Published:Updated:

முதல் குரல்... புதுக்குரல்!

எம்.ஆர்.காந்தி
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஆர்.காந்தி

`உன் வீட்டுக்காரரு வீட்டுக்கு வீடு பிரசாரம் செஞ்சிக்கிட்டு இருக்காரு. சாந்து சட்டிய தூக்கிக்கிட்டு நீ நூறு நாள் வேலைக்கு வந்துகிட்டுக் கெடக்கே’

முதல் குரல்... புதுக்குரல்!

`உன் வீட்டுக்காரரு வீட்டுக்கு வீடு பிரசாரம் செஞ்சிக்கிட்டு இருக்காரு. சாந்து சட்டிய தூக்கிக்கிட்டு நீ நூறு நாள் வேலைக்கு வந்துகிட்டுக் கெடக்கே’

Published:Updated:
எம்.ஆர்.காந்தி
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஆர்.காந்தி
அரசியல் என்றாலே பணபலமும் பந்தாவுடன் கூடிய படைபலமும்தான் என்பதை மாற்றி எளிய பின்னணியில் இருந்துவந்து முதல்முறை எம்.எல்.ஏ ஆனவர்கள் இவர்கள். ஜனநாயக வலிமையின் சாட்சியங்களாக விளங்கும் இந்த முதல்முறை எம்.எல்.ஏக்களைச் சந்தித்தோம்.
முதல் குரல்... புதுக்குரல்!

சின்னதுரை, கந்தர்வக்கோட்டை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

கந்தர்வக்கோட்டை அருகே புனல்குளம் கிராமத்தில் ஆங்காங்கே விரிசல் விழுந்த ஓட்டு வீட்டுக்குள் வசிக்கிறது சின்னதுரை எம்.எல்.ஏ-வின் குடும்பம். சின்னதுரையின் மனைவி இப்போதும் நூறு நாள் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார். தேர்தலின்போது சின்னதுரை குறிப்பிட்ட சொத்து விவரங்கள்: மனைவி ராஜாத்தி அணிந்திருக்கும் தாலி, தோடு எல்லாம் சேர்த்து 1 பவுன், 4 ஆட்டுக்குட்டிகள், கையிருப்பு 2,000 ரூபாய். குடியிருக்கும் ஓட்டு வீடும், அந்த மூன்று சென்ட் இடமும் மகன் ஜோதிபாசு பெயரில் இருக்கிறது. சின்னதுரை பெயரில் துண்டு நிலம்கூட இல்லை.

எம்.எல்.ஏவாகப் பதவியேற்றுத் தொகுதிக்கு வந்த நாளே பொதுமக்களைச் சந்தித்துக் குறை கேட்க ஆரம்பித்துவிட்டார் சின்னதுரை. அவரிடம் பேசினோம்.

‘`பத்தாம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சிருக்கேன். குடும்ப வறுமையால மேற்கொண்டு படிக்க முடியலை. அப்பவே வேலைக்குப் போயிட்டேன். நான் வேலை பார்த்த கம்பெனியில் பத்து ரூபா கூலி உயர்த்திக் கேட்டதால, எங்களை வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. அப்பதான் சி.ஐ.டி.யூ எங்களுக்காகக் குரல் கொடுத்தது. பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நாங்க கேட்டது கிடைச்சது. அமைப்பா இருந்தான் கஷ்டப்படுகிற மக்களுக்கு உதவ முடியும்னு தெரிஞ்சிக்கிட்டு, 1985-ல கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன். கிளைச் செயலாளரில் ஆரம்பிச்சு மாவட்டச் செயலாளர் வரை பொறுப்புகள்ல இருந்திருக்கேன்,

நான் பிரசாரத்துல இருந்த நேரத்துலயும் என் மனைவி நூறு நாள் வேலைக்குப் போயிக்கிட்டிருந்தாங்க. `உன் வீட்டுக்காரரு வீட்டுக்கு வீடு பிரசாரம் செஞ்சிக்கிட்டு இருக்காரு. சாந்து சட்டிய தூக்கிக்கிட்டு நீ நூறு நாள் வேலைக்கு வந்துகிட்டுக் கெடக்கே’ என்று பெண்கள் எல்லாரும் கிண்டல் செஞ்சிருக்காங்க. ‘சொல்றவங்க சொல்லிட்டுப் போகட்டும். அதையெல்லாம் காதுல வாங்காம எப்பவும் போல நீ வேலைக்குப் போ’ன்னு சொன்னேன். எங்களுக்குக் கூலி வேலைதான் குடும்ப வருமானம். அதை விடமுடியுமா?

இந்தக் கொரோனா காலம் ரொம்பவே கஷ்ட காலம். சவால் நிறைந்தது. மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க. நம்மால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும். மொதல்ல தொகுதியில் சுகாதாரக் கட்டமைப்பை வலுவாக்கணும். என்னைப் பொறுத்தவரை இந்த எம்.எல்.ஏ என்பது பதவி இல்லை. கூடுதல் பொறுப்பு. சாகுற வரைக்கும் மக்களுக்கு சர்வீஸ் பண்ணணும்’’ என்கிறார் சின்னதுரை.

முதல் குரல்... புதுக்குரல்!

எம்.ஆர்.காந்தி, நாகர்கோவில் (பா.ஜ.க)

கசங்கிய வேட்டி, கதர் ஜிப்பா, செருப்பு அணியாத கால்கள் என எளிமையாக வலம் வந்துகொண்டிருக்கும் 75 வயது எம்.ஆர்.காந்தியை நாகர்கோவில் மக்கள் எம்.எல்.ஏ ஆக்கியுள்ளனர். பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஜன சங்க காலத்திலிருந்தே அரசியலில் இருப்பவர் காந்தி. ஈத்தாமொழி மாவிளை கிராமம்தான் இவரின் சொந்த ஊர். நாகர்கோவிலில் வசிக்கிறார்.

‘`பா.ஜ.க-வில மாவட்டத்தில இருந்து மாநிலம் வரை பல பொறுப்புக்கள வகிச்சிருக்கேன். எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடி ஒரு வருஷம் ஜெயில்ல இருந்தேன். 1980 தேர்தல்ல பா.ஜ.க சார்பில தமிழ்நாட்டுல பத்துப் பேரு போட்டியிட்டோம், அதில நானும் ஒரு ஆள்’’ என்கிற காந்தி, திருமணம் செய்யாமல் வாழ்ந்துவருகிறார்.

‘`பி.ஜே.பி., ஜனசங்கத்தில இருந்த வாஜ்பாய், நானாஜி தேஷ்முக் போன்ற பெரும்பாலான தலைவர்கள் கல்யாணம் பண்ணிக்கல. அரசியல் இயக்கத்துக்கு எனக்கு அவங்கதானே பரிச்சயம். அது அப்பிடியே என்னைக் கவர்ந்ததால, நானும் கல்யாணம் பண்ணிக்கல. இந்த மண்ணை பாரத மாதாவா பாக்கிறேன். அதனாலதான் தாய் மண் மேல் செருப்புப் போட்டுட்டு நடக்கிறதயும் விட்டுட்டேன்’’ என்கிறார்.

‘`நான் ஏற்கெனவே மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரா இருந்த காலத்தில, அதிகமா குடிநீருக்கான திட்டங்களைக் கொண்டுவந்தேன். தொகுதி மக்களுக்குக் குடிநீர் வழங்குறதுதான் நான் நிறைவேற்றும் முதல் திட்டமா இருக்கும்’’ என்கிற காந்தி, தொடர்ச்சியாக ஆறுமுறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர். ஏழாவது முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

‘`பா.ஜ.க தொடக்கக்காலத்தில தொண்டர்கள் கைக்காசைச் செலவு செய்து தீவிரமா தேர்தல் வேலை செய்வாங்க. இந்தத் தேர்தல்லயும் பலர் சொந்தச் செலவுல தேர்தல் வேலை செய்தது என்னை நெகிழ வச்சுது. கன்னியாகுமரிக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த பிரதமர் மோடி என்னைப் பார்த்து ‘நான் கன்னியாகுமரிக்கு எப்ப வந்தாலும் நீங்க இருக்கிறீங்க காந்தி’ எனச் சொல்லி தோளில தட்டிக்கொடுத்தது தேர்தல் சமயத்தில மறக்க முடியாத அனுபவம்’’ என்கிறார்.

எம்.ஆர்.காந்திக்கு சொந்தமாக வீடு இல்லை. நாகர்கோவில் சிதம்பரநாதன் தெருவில் ருக்குமணி இல்லம் என்ற வீட்டில் வாடகைக்கு வசிக்கிறார். அந்த வீட்டுக்குப் பூட்டே கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரைப் போய்ப் பார்க்க முடியும் என்கிற அளவுக்கு இரவு பகலாகத் திறந்தே கிடக்கிறது. ‘`என் வாழ்க்கை என்னைக்கும் இப்பிடித்தான் இருக்கும். எனக்குக் குடும்பமும் கிடையாது. சொத்து சேர்க்கணும்னு ஆசையும் கிடையாது’’ என்கிறார் காந்தி.

முதல் குரல்... புதுக்குரல்!

ஈ.ராஜா, சங்கரன்கோவில் (தி.மு.க)

சங்கரன்கோவில் தொகுதி, அ.தி.மு.க-வின் கோட்டை. ஜெயல லிதாவுக்கு எதிராக அலை வீசிய நேரத்திலும் இங்கு அ.தி.மு.க ஜெயித்தது. 1991 முதல் 2016 வரை ஏழு தேர்தல்களில் தொடர்ந்து அ.தி.மு.க வெற்றிபெற்ற தொகுதியில், இந்த முறை தி.மு.க-வின் ஈ.ராஜா வென்றுள்ளார்.

தென்காசிதான் ராஜாவின் சொந்த ஊர். விவசாயம்தான் நிரந்தரத் தொழில். பணபலமோ, அரசியல் பின்புலமோ கொண்ட குடும்பம் இல்லை. இந்த 35 வயது வழக்கறிஞர், மக்களுக்கான பிரச்னைகளுக்கு முதல் ஆளாகக் களத்தில் நிற்பவர்.

``போன தேர்தலில் கலைஞரைப் பக்கத்தில் போய்ப் பார்த்துப் பேசலாம் என்பதற்காக விருப்ப மனு கொடுத்திருந்தேன். இந்த முறையும் வழக்கம் போல விருப்ப மனு கொடுத்தேன். தலைவர் ஸ்டாலின் எனக்கு சீட் ஒதுக்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டார்.

தேர்தல் பிரசாரத்தில் மக்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்ததால் வாக்கு எண்ணிக்கையின்போது எனக்குக் கொஞ்சமும் பதற்றம் இல்லை. நான் வெற்றிச் சான்றிதழோடு வெளியே வந்ததும் எனக்காகச் சொந்த வேலையை விட்டு பிரசார வேலை பார்த்த இளைஞர்களைப் பார்த்ததும் கண்ணீர் வந்திருச்சு.

இப்பவும் காலையில் 5 மணிக்கு எந்திருச்சு வாக்கிங் போயிட்டு, விவசாய வேலையை முடிச்சுட்டு ஆபீஸுக்குப் போறேன். அதைப் பார்த்த ஒருத்தர், ‘யப்பா... எம்.எல்.ஏ-வா ஆயிருக்க. நல்ல துணிமணிய உடுத்துப்பா. நான் வேணும்னா ரெண்டு செட்டு பேன்ட் எடுத்துட்டு வரட்டுமா’ என்றார். `நான் எப்பவுமே இப்படித்தாம்ணே இருப்பேன்’னு சொல்லி மறுத்துட்டேன்.

சங்கரன்கோவிலுக்கு 15 நாளுக்கு ஒருமுறைதான் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் வந்துச்சு. நான் எம்.எல்.ஏ-வானதும் அதிகாரிகளிடம் பேசி வாரத்துக்கு ஒருமுறை தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். அதையே நாள்தோறும் கிடைக்கச் செய்வேன். ஜவுளிப் பூங்கா, நறுமணத் தொழிற்சாலைன்னு வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடுவேன். கடந்த 30 வருடங்களாக ஒரே கட்சிக்கு வாக்களித்த மக்கள் என்மீதும் தி.மு.க மேலயும் வச்சிருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். அது எப்போதும் மனசுல இருக்கும்’’ என்கிறார்.

முதல் குரல்... புதுக்குரல்!

பண்ணாரி, பவானிசாகர் (அ.தி.மு.க)

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக பண்ணாரி அறிவிக்கப்பட்டபோது ‘யாரப்பா இந்த பண்ணாரி’ எனச் சொந்தக் கட்சியினரே தெரியாமல் தலையைச் சொறிந்தனர். ‘டாஸ்மாக் கடையில வேலை பார்த்த ஆளை வேட்பாளராகப் போட்ருக்காய்ங்க. ஜெயிக்கிறது சிரமம்தான்’ என அனைவருமே ஆரூடம் சொன்னார்கள். 16,008 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் பண்ணாரி.

எளிமையாக வலம்வரும் பண்ணாரியிடம் பேசினோம். “எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து அ.தி.மு.க கொடி பிடிச்சிக்கிட்டு மக்கள் கிட்ட ஓட்டு கேட்கப் போவேன். இன்னைக்கு அதே மக்கள் ஓட்டு போட்டு என்னை எம்.எல்.ஏ ஆக்கியிருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மூணு முறையாக சீட் கேட்டு வந்தேன். இந்தத் தடவைதான் வாய்ப்பு கிடைச்சது. வேட்புமனுத் தாக்கல் செய்யப் போனப்ப ரெண்டாயிரம் பேர் கூட வந்தாங்க. அதெல்லாம் பார்த்து நானே அசந்துபோயிட்டேன்.

பிரசாரத்துக்குப் போனப்பவும் நல்ல வரவேற்பு இருந்தது. செங்கோட்டையன், கருப்பணன் என மந்திரிங்களும் எனக்காக பிரசாரம் செஞ்சாங்க. அதையெல்லாம் பார்த்து நம்பிக்கை வந்துடுச்சு. ஒரு சாமானியனைக்கூட சட்டசபைக்கு அனுப்பி அழகு பார்க்க முடியும்னா, அது அ.தி.மு.க-வுல மட்டும்தான் சாத்தியமுங்க. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா எனப் பல பெரிய தலைவர்கள் நுழைஞ்ச சட்டசபைக்கு நான் போனதைப் பெரிய பாக்கியமா நினைக்கிறேன்.

ஜெயிச்சதும் எடப்பாடி ஐயாவைச் சந்திக்க சென்னை போனோம். ‘பவானிசாகர் தொகுதி வீக்கா இருக்குன்னு உளவுத்துறை ரிப்போர்ட்டில் சொல்லியிருந்தாங்க. அதை முறியடிச்சி ஜெயிச்சுக் காட்டிட்டீங்க’ன்னு சொன்னது ரொம்பப் பெருமையா இருந்துச்சு. மேள தாளத்தோட என் சொந்த ஊர் மக்கள் வரவேற்பு கொடுத்தப்போ நெகிழ்ந்து போயிட்டேன்.

எம்.எல்.ஏ ஆனாலும் நான் சாதாரண மக்களோட பண்ணாரிதான். நான் எம்.எல்.ஏ ஆனதை எங்க வீட்ல ஒரு பொருட்டாவே நினைக்கலை. என்னோட குழந்தை மட்டும் ‘வாங்க எம்.எல்.ஏ சார்’ன்னு சொல்லி கிண்டலா கூப்பிடுவாங்க. இத்தனை நாள் என் குடும்பத்துக்கு என்ன தேவையோ அதைச் செஞ்சுக்கிட்டு இருந்தேன். இனிமே பவானிசாகர் தொகுதிக்குத் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டிய பெரிய பொறுப்பு எனக்கு இருக்குங்கிறதை உணர்றேன்” என்கிறார்.

முதல் குரல்... புதுக்குரல்!

மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே காடுவாக்குடி கிராமத்தில் சிறிய குடிசை வீட்டில்தான் மாரிமுத்துவின் குடும்பம் வசிக்கிறது. விவசாயக் கூலித் தொழிலாளி மகனான மாரிமுத்து, கட்சியில் இணைந்து 27 ஆண்டுகள் ஆகின்றன. இவரின் மனைவியும் தாயும் இன்றைக்கும் விவசாயக் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், இவருடைய எளிமையான வீடு சோஷியல் மீடியாக்களில் வைரலாக, தொகுதி முழுவதும் இவருக்கு ஆதரவான அலை வீசியது. சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மாரிமுத்து.

‘`ஓட்டு கேட்டுப் போற வேட்பாளருங்க, மக்களுக்குப் பரிசுப் பொருள்களையும், பணத்தையும் வாரி வழங்குற காலம் இது. ஆனா, எங்க தொகுதி மக்கள் எனக்கு ஆயிரம், இரண்டாயிரம், பத்தாயிரம்னு நன்கொடை கொடுத்து நெகிழ வெச்சிட்டாங்க. சிங்களாந்தி, கொருக்கை, செல்லப்பிள்ளையார் கோட்டகம் கிராமங்கள்ல, ஏழைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சின்னப்பசங்க அவங்களோட உண்டியல் காசை என்கிட்ட கொடுத்தப்ப உடைஞ்சுபோயிட்டேன். சில்லறைக் காசுங்கதான். ஆனா, அந்தக் காசுக்கு எவ்வளவு மதிப்புன்னு கூலிக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு நல்லாத் தெரியும். வாக்கு எண்ணிக்கை முடிஞ்ச மறுநாளே, அந்தப் பசங்களோட வீட்டுக்குப் போயி நேர்ல நன்றி சொன்னேன். நான் ஜெயிச்சா, அவங்களுக்கு நல்லது பண்ணுவேன்ற நம்பிக்கைதான் அந்தக் காச எனக்குக் கொடுக்க வெச்சிருக்கு.

என் தொகுதி முழுக்க ஆயிரக்கணக்கான குடிசை வீடுங்க இருக்கு. பலருக்குப் பட்டா கிடையாது. இந்த நவீன காலத்துல, மக்கள் வசிக்கறதுக்கு சொந்தமா இடம் இல்லாமல் இருக்குறது எவ்வளவு வேதனையான விஷயம். இவங்களுக்கெல்லாம் பட்டா வாங்கிக் கொடுத்து, கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கணும். இதுதான் நான் நிறைவேத்தத் துடிக்கும் லட்சிய வாக்குறுதி.

நகரப் பேருந்துகள்ல பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்னு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிச்சிருக்கார், ஆனா, என் தொகுதியில கடந்த பத்து வருஷமா, ஒரு நகரப்பேருந்துகூட கிடையாது. போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பனைச் சந்திச்சு கோரிக்கை வெச்சேன். அவரோட உத்தரவால அதிகாரிங்க என்னைச் சந்திச்சு, நாலு நகரப் பேருந்துகளை இயக்க உடனடியாக ஏற்பாடு செய்றோம்னு உறுதியளிச்சிருக்காங்க. இப்பதான் முதல் அடி எடுத்து வச்சிருக்கேன். செய்ய வேண்டிய வேலையும் பயணமும் இன்னும் நிறைய இருக்கு’’ என்கிறார் எம்.எல்.ஏ.