Election bannerElection banner
Published:Updated:

Election: `ஓட்டுக்கு பணம் பெறுவது சரியா?’ - என்ன சொல்கிறார்கள் முதன்முறை வாக்காளர்கள்?

முதன்முறை வாக்காளர்கள்
முதன்முறை வாக்காளர்கள்

ஓட்டுக்குப் பணம் வாங்கும் விவகாரத்தில் முரணான கருத்துகள் நிலவினாலும், `வாக்குச்சாவடியில் நின்று வாக்களிக்கும்போது, அது எனது உரிமை, கடமை என உணர்ந்து செயல்படுவோம்’ என்பதே பெரும்பாலான முதல் வாக்காளர்களின் கருத்தாக இருந்தது.

தமிழகம் சந்திக்கவிருக்கும் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் புதுமையானதாகவும் இருக்கும்! அரசியல் சாணக்கியர் என்று கருதப்பட்டவர்களின் மறைவு, அதையொட்டிய அரசியல் குழப்பங்கள், புதிய அணிகளின் வருகை என அரசியல் வட்டாரத்தினரே குழப்பத்தில் இருக்கும்போது, புதிதாக வாக்களிப்பவர்கள், இளைஞர்களின் மனநிலை எப்படியிருக்கிறது என அறிந்துகொள்ள, தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களிலுள்ள மாணவர்களிடம் உரையாடினோம். அரசியல் கட்சிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள், ஓட்டுக்குப் பணம் கொடுப்பது பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

சாரு பிரியா - கல்லூரி மாணவி, மதுரை.
சாரு பிரியா
சாரு பிரியா

``இது நான் வாக்களிக்கும் முதல் தேர்தல் என்றாலும், சிறு வயதிலிருந்தே என் பெற்றோரிடம் ஒட்டுக்குப் பணம் வாங்க வேண்டாம் எனக் கூறிவருகிறேன். ஆனால் அவர்கள், `ஊரில் அனைவரும் ஓட்டுக்குப் பணம் வாங்கும்போது, நாம் மட்டும் வாங்காமல் இருப்பது பணம் தருபவர்கள் நம்மைத் தனியாக குறித்துக்கொள்ள வழிவகுக்கும்’ என அஞ்சுகிறார்கள். இப்போது எனக்கு ஓட்டு உரிமை வந்தபோதிலும், என் ஓட்டுக்குப் பணம் வாங்குவதும், வாங்காமல் இருப்பதும் என் கைகளில் இல்லை என்ற நிலை இருக்கிறது. நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். பணத்தைத் திணித்து என் ஓட்டை வாங்க முடியாது!’’

சிவ சங்கர்.எம் - கல்லூரி மாணவர், திருவாரூர்.
சிவ சங்கர்
சிவ சங்கர்

``ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் தவறுதான். ஆனால், அது நம் கைகளில் இல்லை. கொடுப்பவர்கள் நிறுத்தினால் மட்டுமே வாங்குபவர்கள் நிறுத்துவார்கள். ஏனெனில், வேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை மறுத்த பின் அவர் அதே தொகுதியில் வெற்றிபெறும் பட்சத்தில், பணம் பெறாத பகுதியில் நலத்திட்டங்கள் செயல்படுத்த மாட்டாரோ என்ற பயம் மக்களிடம் நிலவுவது இயல்பு. ஆனாலும் நான் வாக்களிக்கும்போது யாருக்கு வாக்களிக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியாது என்பதால் எனக்குப் பிடித்த வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பேன்!’’

நாக தேவி, கல்லூரி மாணவி, மதுரை.
நாக தேவி
நாக தேவி

``ஓட்டுக்குப் பணம் வாங்குறதும், வாங்காம இருக்குறதும் வேற விஷயம். ஓட்டு என்று வரும்போது யார் என் தொகுதிக்குச் சரியான வேட்பாளரா இருப்பாங்கன்னு பார்த்துதான் ஓட்டுப் போடுவேன்!’’

விக்னேஷ் - கல்லூரி மாணவர், தூத்துக்குடி
விக்னேஷ்
விக்னேஷ்

`` எங்க பகுதியப் பொறுத்தவர, பெரும்பாலும் ஓட்டுக்குப் பணம் வாங்கிக் கொண்டுதான் மக்கள் வாக்களிக்குறாங்க. அதுல என்ன தப்பிருக்கு. நம்ம கிட்ட கொள்ளையடிச்ச பணத்தை நமக்கே தராங்க. நான் எனக்குப் பிடிச்ச கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன்!’’

நாதன் - கல்லூரி மாணவர், திருச்செந்தூர்

``சட்டமன்றத் தேர்தலில்தான் முதன்முறையாக ஓட்டுப்போடப் போகிறேன். மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். நிச்சயமாக ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டேன். எப்போது மக்கள் பணம் வாங்காமல் வாக்களிக்கிறார்களோ, அப்போதுதான் அவர்கள் அரசியல் விழிப்புணர்வு அடைவார்கள். மக்கள் ஓட்டுக்குப் பணம் வாங்காமலிருந்தாலே, அரசியல் கட்சியினர் பணம் கொடுக்க மாட்டார்கள். எனவே, மக்கள்தான் பணம் வாங்க மாட்டேன் என உறுதி ஏற்க வேண்டும்.”

அபிநயா - கல்லூரி மாணவி, மதுரை
அபிநயா
அபிநயா

``எனக்கு ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறதும் வாங்கறதும் பிடிக்காது. வீட்டுல இருக்கிறவங்களையும் வாங்கவிட மாட்டேன். இதற்கு முந்தைய தேர்தல்களிலும் எனது வீட்டில் ஓட்டுக்குப் பணம் வாங்கியதில்லை. இனியும் வாங்க மாட்டேன். பணம் கொடுக்க முயலும் கட்சிகளை ஆதரிக்க மாட்டேன். நான் முடிவு செய்திருக்கு கட்சிக்குத்தான் வாக்களிக்கப்போகிறேன்.”

ஆர்த்தி வெங்கட் - மாணவி, மணப்பாறை.

``தேர்தல் தளத்தில் தற்போது தனிநபரின் ஓட்டுக்காகப் பணம் கொடுப்பதைவிட பரிசுப் பொருள்களாகக் கொடுக்கிறார்கள். வேண்டாம் என மறுக்கும் பட்சத்திலும் திணிக்கவே செய்கிறார்கள். எனவே, அதைத் தவிர்ப்பதில் மக்களுக்குச் சிக்கல் நிலவுகிறது. பணம் கொடுத்து என் முடிவை அவர்கள் மாற்ற முடியாது. எனக்கு யாரை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கத் தோன்றுகிறதோ அவருக்கே வாக்களிப்பேன்.‌”

பிரசாந்த் செல்வம் - அரக்கோணம்
பிரசாந்த்
பிரசாந்த்

``ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் எந்தக் கட்சியினருக்கும் என் வாக்கைச் செலுத்த மாட்டேன். தன் பணத்தைக் கொடுத்து வாக்குப் பெறும் எவரும் மக்கள் நலனுக்காக எதையும் செய்ய மாட்டார்கள். அவர்கள் பின்னால் பெறவிருக்கும் லாபத்துக்காகவே இவ்வாறு செய்கிறார்கள். எந்தக் கட்சி பணம் கொடுக்காமல் இருக்கிறதோ அந்தக் கட்சிக்கே என் வாக்கைச் செலுத்துவேன்.”

ஜெயசக்தி - ஒப்பனைக் கலைஞர், பொறையார்.
ஜெயசக்தி
ஜெயசக்தி

``எவ்வளவு பணம் கொடுத்தாலும் கண்டிப்பாக அதைப் பெற மாட்டேன். ஏனெனில், எங்கள் குடும்பத்தினர்கள், நான் என அனைவரும் ஒரே அரசியல் கட்சிக்கே வாக்களிப்போம். அந்தக் கட்சியினரே கொடுத்தாலும் நாங்கள் அதைப் பெற்றுக்கொள்ள மாட்டோம்.”

சிவ ஶ்ரீ, கல்லூரி மாணவி, திருவாரூர்

``பணம் வாங்கிட்டு ஓட்டு போடுறதுதான் தேர்தல் சம்பிரதாயம்னு ஆகிடுச்சு. அதேநேரத்துல யாரு நல்லவங்க, யாருக்குப் பதவி கொடுக்கணும்ன்னு நாமதான் யோசிக்கணும். நம்ம ஓட்டை நாமதான போடப்போறோம்.”

முதல் வாக்காளர்கள் பலரும், யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதில் தெளிவாகவே இருக்கின்றனர். ஓட்டுக்குப் பணம் வாங்குவதை அவர்கள் விரும்பவில்லை. இருப்பினும் அவர்கள் கையில் கட்டாயப்படுத்தி திணிக்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், வாக்குச்சாவடியில் நின்று வாக்களிக்கும்போது, `அது எனது உரிமை, எனது கடமை என உணர்ந்து செயல்படுவோம் ’ என்பதே பெரும்பாலான முதல் வாக்காளர்களின் கருத்து.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு