Published:Updated:

காந்தி வேண்டும், காந்தியம் வேண்டாமா?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

ஆச்சர்யமாக இருக்கிறது, எங்கு திரும்பினாலும் ‘பாபு... பாபு...’ என்று காந்தி பாசத்தில் கரைகிறார்கள் பா.ஜ.க-வினர்.

காந்தி வேண்டும், காந்தியம் வேண்டாமா?

ஆச்சர்யமாக இருக்கிறது, எங்கு திரும்பினாலும் ‘பாபு... பாபு...’ என்று காந்தி பாசத்தில் கரைகிறார்கள் பா.ஜ.க-வினர்.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

இது போதாதென, நான்கு மாதங்களுக்கு நடைப்பயணப் பேரணியையும் அறிவித்திருக்கிறார்கள். நாடகத்தை, பெயர் இல்லாமல் அரங்கேற்ற முடியாதல்லவா... அதனால் அதற்கு ஒரு பெயரையும் வைத்திருக்கிறார்கள். ‘காந்தி சங்கல்ப யாத்ரா’வை அக்டோபர் 2-ம் தேதி தலைநகர் டெல்லியில் அமித் ஷா தொடங்கி வைத்திருக்கிறார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அத்தனை மக்கள் பிரதிநிதிகளும் நாள் ஒன்றுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் கிராமங்களை நோக்கி நடக்கவேண்டும் என்பது உத்தரவு. இதன்மூலம், ‘காந்தியின் உண்மையான வாரிசுகள் நாங்கள்தான்’ என்று நிறுவப் போகிறார்களாம். என்ன ஒரு பாபு பாசம்!

‘ஏன்... காந்தியைப் பற்றி பா.ஜ.க பேசக்கூடாதா?’ என்று சிலர் கேட்கக்கூடும். பேசலாம். காந்தி, எவரின் தனிப்பட்ட சொத்தும் அல்ல. ஆனால், அதற்கு ஒரு தார்மிகம் வேண்டும். காங்கிரஸ், காந்தியைக் கண்டுகொள்ளாத கட்சிதான். ஆனால், காந்தியைப் பற்றி தவறாகப் பேசிவிட்டு, அந்தக் கட்சியில் இருக்க முடியாது. அந்தக் கட்டாயத்தை காங்கிரஸ் கொண்டிருக்கிறது. அதுவே, காந்தியைக் கொண்டாடும் தார்மிகத்தையும் அவர்களுக்கு அளிக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், பா.ஜ.க என்ன செய்கிறது? காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவை `தேசபக்தர்’ என்றழைத்த பிரக்யா, இன்னும் அந்தக் கட்சியில்தான் இருக்கிறார். காந்திமீது பாசம் இருந்தால், அவர் இந்நேரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்ததா பா.ஜ.க? பிறகு எப்படி காந்தியைக் கொண்டாடும் தார்மிகத்தை அவர்கள் கொண்டிருப்ப தாகக் கருத முடியும்?

மோடி
மோடி

காந்தி ஜயந்தி கொண்டாட்டங் களில்கூட பிரக்யாவைப் பார்க்க முடியவில்லை. கலந்துகொண்டால், காந்தியை வாழ்த்த வேண்டிவரும். அதனாலேயே அவர் ஆப்சென்ட். சமீபத்தில் அவரது பேட்டியில்கூட, ‘காந்தி, தேசத்தின் தந்தையெல்லாம் இல்லை; மகன் மட்டும்தான்’ என்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். இதையும் கண்டுகொள்ளவில்லை கட்சித் தலைமை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காந்தி அரசியல்வாதி. ஜனநாயகம் பேசியவர். சமத்துவம் பேசியவர். தனிமனித உரிமைகளைப் பேசியவர். அப்படிப்பட்டவரை ஏதோ ஹார்பிக் விளம்பரத்தில் வரும் அப்பாஸ் போல டீல் செய்து கொண்டிருக்கிறது இந்த அரசு.

இங்கே மூன்று தரப்புகள் இருக்கின்றன. முதலாவது, காந்தியை விரும்பும் தரப்பு. இரண்டாவது, காந்தியை விரும்புவதுபோல் நடிக்கும் தரப்பு. மூன்றாவது, காந்தியை முற்றிலுமாக வெறுக்கும் தரப்பு. முதல் மற்றும் மூன்றாவது தரப்புகள் பிரச்னை இல்லை. நேரடியானவர்கள். ஆதரிப்பதெனில் நேரடியாக ஆதரிப்பார்கள். எதிர்ப்பதெனில் நேரடியாக எதிர்ப்பார்கள். ஆனால், இரண்டாவது தரப்பு ஆபத்தானது. ஏனெனில், அது போலியானது. அந்த இரண்டாம் தரப்பிலிருந்து வந்த கட்சிதான் பா.ஜ.க. அதன் பிரதிநிதிகள் தான் இன்று அதிகாரத்தில் இருக்கும் மோடியும் அமித் ஷாவும். இதற்கு ஆதாரமெல்லாம் அவசியமில்லை. அது, கைக்காயத்தைப் பார்க்க கண்ணாடியைக் கேட்பதற்குச் சமம். இருந்தாலும் ‘நான் கேட்பேன்’ என்பவர்கள், இதோ இங்கு இருக்கும் இரண்டு படங்களையும் பார்க்கவும்.

அமித் ஷா
அமித் ஷா

மோடிக்கு முன்னே இருப்பவரும், அமித் ஷாவுக்குப் பின்னே இருப்பவரும் யார் எனத் தெரிகிறதா? விநாயக் தாமோதர் சாவர்க்கர். காந்தியத்தை எதிரியாகக் கொண்டவர் சாவர்க்கர். அகிம்சையை எள்ளி நகையாடியவர். காந்தி கொலையிலும் குற்றம்சாட்டப் பட்டவர். ‘இந்தியா, மதம் அடிப்படையில் பிளவுபட வேண்டும்’ என பாரதமாதாவின் நெஞ்சில் பாதம் தூக்கி வைத்தவர். இப்படிப்பட்டவருக்கு குரு வழிபாடு நடத்திக்கொண்டு, ‘நாங்கள்தான் காந்தியின் வாரிசுகள்’ எனச் சொன்னால் எப்படி நம்புவது? இதனாலேயே பா.ஜ.க-வின் காந்தி பாசத்தை, `Paradox’ என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். Paradox என்றால், குழப்பமானது, சிக்கலானது, முரணானது என அர்த்தம்.

உண்மையைச் சொல்லப் போனால், இந்திய மண்ணில் காந்தியை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு. கவனிக்கிறீர்களா? காந்தியின் சகிப்புத்தன்மை, மதநல்லிணக்கம், மாற்றுத்தரப்பை மதிக்கும் மாண்பு என எதைப் பற்றியும் பேசாமல் வெறுமனே, ‘சுத்தம், தூய்மை’ என்ற வார்த்தை களை மட்டுமே கவனமாகப் பயன்படுத்து கிறார்கள். அரை ஆடை கட்டியிருந்ததால், காந்தியை ஏதோ யோகா டீச்சர் என நினைத்து விட்டிருக்கிறார் மோடி. சுத்தம், உடல் ஆரோக்கியம் என்பவையெல்லாம் காந்தியக் கடலின் சிறுதுளிகள் மட்டுமே. முதன்மையாக, அவர் அரசியல்வாதி. ஜனநாயகம் பேசியவர். சமத்துவம் பேசியவர். தனிமனித உரிமைகளைப் பேசியவர். அப்படிப்பட்டவரை, ஏதோ ஹார்பிக் விளம்பரத்தில் வரும் அப்பாஸ் போல டீல் செய்துகொண்டிருக்கிறது இந்த அரசு. இதைக் குறிப்பிட்டே ‘பாபு, ஒரு குறியீடாக மட்டுமே சுருக்கப்பட்டுவிட்டார்’ என வருத்தப்பட்டார் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி. இவரின் அச்சம் நியாயமானது. ஏனெனில், அம்பேத்கரும் இப்படித்தான் வெறும் சட்டமேதையாக இந்த அரசால் சுருக்கப்பட்டார். இப்போது, காந்தியின் முறை.

ஆம், குறியீட்டு அளவில் மட்டுமே காந்தி இந்த அரசுக்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால், இந்த அரசுக்கு ஜனநாயக முகமூடி ஒன்று இப்போது தேவைப்படுகிறது. அதை அளிக்கக்கூடியவர் காந்தி மட்டுமே. சாவர்க்கரையோ கோல்வால்கரையோ உலக நாடுகளின் முன்னால் நிறுத்த முடியுமா என்ன? அதனால்தான், இந்த திடீர் காந்தி துதி! அக்டோபர் 2 கடந்து, நான்கு வாரங்களாகிவிட்டன. இதுவரைக்கும் ஒரு பா.ஜ.க நிர்வாகிகூட `காந்தி சங்கல்ப யாத்ரா’வில் ஈடுபட்டதாக செய்தி வரவில்லை. இதற்கு, ‘3,229 மக்கள் பிரதிநிதிகள் காந்தியின் புகழைப் பரப்பும் பயணத்தில் இணையப்போகிறார்கள்’ என்று கணக்குவேறு சொன்னார்கள். அத்தனையும் ‘மிஸ்டு கால்’ கணக்காகிவிட்டன.

கருத்து சுதந்திரத்தை, கண்ணின் கருவிழி எனக் கருதியவர் காந்தி. ஆனால், ‘கும்பல் வன்முறை கூடாது’ என்று கடிதம் எழுதிய படைப்பாளிகள்மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. வழக்கு வளையத்தில் இருந்தவர்களுள் ஒருவர், ராமச்சந்திர குஹா. குஹா யார்? இந்தியாவில் இப்போது இருக்கும் தலைசிறந்த காந்தியவாதிகளைப் பட்டியலிட்டால், அதில் முதல் பத்து இடங்களுக்குள் வரக்கூடியவர். காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எந்த ஆய்வாளரும் எழுதிடாத தரத்தில் எழுதிய பெருமைக்குச் சொந்தக்காரர். அவர்மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டைச் சுமத்திவிட்டு, காந்தி யையும் தூக்கிப்பிடிப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

இதோ... 80 நாள்களுக்கும்மேலாக சிறைப்பட்டு கிடக்கிறது காஷ்மீர். மக்களின் அழுகுரல்களைப் பதிவுசெய்யவும் அங்கு ஆள் இல்லை. ஊடகங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன. கருத்தாளர்களுக்கும் ஏகப்பட்ட கெடுபிடிகள். கேள்வி கேட்டால், தேசத்துரோக வழக்கு பாய்கிறது. அரசின் அத்துமீறல்களை வெளியிட்டதற்காக, செயற்பாட்டாளர் ஷெகலா ரஷீத் மிரட்டப்படுகிறார். இப்படியோர் அபாய ஆட்சியை நடத்திக்கொண்டு, எப்படி ‘பாபு... பாபு...’ என்று இவர்களால் நடிக்க முடிகிறது?

‘நம் நாடு, இங்கு இருக்கும் எல்லோருக்கும் சொந்தம்’ என்றார் காந்தி. இங்கோ, மதச் சிறுபான்மையினர் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்று பேசினார் ஆளுங்கட்சி எம்.பி ஒருவர். தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த பேச்சில், இஸ்லாமிய மக்களைத் தவிர்த்துவிட்டுப் பேசியிருக்கிறார் அமித் ஷா. இதுதான் பாபுவின் பாதையை இந்த அரசு பின்பற்றும் அழகு!

எல்லா மேடைகளிலும், ‘நாங்கள் இந்து தேசியவாதிகள்’ என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், காந்தி தன் வாழ்வு முழுவதும் இந்து தேசியவாதத்தை எதிர்த்தார். மதத்தின் பெயரால் தேசியம் கட்டமைக்கப்படுவதை எதிர்த்ததற்காகவே அவரை கொலைசெய்தனர்.

மோடி
மோடி

காந்தியும் ஓர் இந்துதான். சொல்லப்போனால், தீவிரமான இந்து. ஆனால், எந்த இடத்திலும் தன்னை ‘இந்து தேசியவாதி’ எனச் சொல்லிக் கொண்டதில்லை. ‘இந்து மதமோ அல்லது இஸ்லாமிய மதமோ அல்லது வேறு மதமோ தனியாக இந்தியப் பண்பாட்டை உருவாக்கவில்லை. இந்தியப் பண்பாடு, இவை அனைத்தின் கலவையில் உருவானது’ என எழுதியவர் காந்தி. காந்தியத்தின் அடிப்படையே அந்த வார்த்தைகள்தான். அதை புறந்தள்ளிவிட்டு காந்தியைப் புகழ்வது, கரும்பைப் பிழிந்து சாற்றை கீழே ஊற்றிவிட்டு, சக்கையை ஆலைக்கு அனுப்புவதற்குச் சமம்.

சமீபத்தில் இணையத்தில் வைரலான நிகழ்வு இது. வாரணாசியில் இருக்கும் ஒரு பள்ளியில், காந்தி பற்றிய பேச்சுப்போட்டி நடந்தது. அதில் பங்கேற்ற 17 வயது மாணவன், ‘காந்தியின் ஹே ராம், எவரையும் அச்சுறுத்துவதற்காகச் சொல்லப்பட்டதல்ல’ என்று பேசினான். ‘ஜெய் ஸ்ரீராம்’ எனச் சொல்லச்சொல்லி மாற்று மதத்தினர்மீது நடத்தப்படும் வன்முறைகளே அந்தச் சிறுவனை அப்படிப் பேசவைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான வன்முறைகளை நாடெங்கும் நடத்தியிருக்கிறது அந்த வார்த்தை. தாக்கப்பட்டவர்களில் பெண்கள் உண்டு, பெரியவர்கள் உண்டு, குழந்தைகள்கூட உண்டு. மாட்டுக்கறித் தாக்குதல்கள் தனிக்கணக்கு. இதையெல்லாம் அனுமதித்துவிட்டு, ‘காந்தி, அகிலத்துக்கு அளித்த மாபெரும் கொடை அகிம்சை’ என்ற வார்த்தைகளை இவர்களால் எப்படி உச்சரிக்க முடிகிறது?

எல்லோரும் சேர்ந்து காந்தியை இனி எங்கே கொண்டுசென்று நிறுத்தப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. பாவம் பாபு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism