Published:Updated:

ரூ. 3.1 கோடியில் டெண்டரைத் தட்டிச் சென்ற டாடா..! - விரைவில் புதிய நாடாளுமன்றக் கட்டடம்

புதிய நாடாளுமன்ற கட்டட மாதிரிப் படம்
புதிய நாடாளுமன்ற கட்டட மாதிரிப் படம்

புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டி முடித்ததும், தற்போதுள்ள வளாகம் புனரமைக்கப்பட்டு வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்!

இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டும் டெண்டரை, 861.9 கோடி ரூபாயில் டாடா புராஜெக்ட்ஸ் லிமிடெட் எடுத்திருக்கிறது. தற்போதிருக்கும் கட்டடம் மிகப் பழைமையானது. தற்போதைய நிலையிலேயே இட நெருக்கடியும் இருக்கிறது. விரைவில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்யப்படவிருப்பதால், மேலும் இட நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக, தற்போது அமைந்திருக்கும் நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகிலேயே, புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதைத் தொடர்ந்து புதிய வளாகம் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஏழு நிறுவனங்கள் டெண்டரில் கலந்துகொண்டன. இவற்றில், ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனி, லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் மற்றும் டாடா புராஜெக்ட்ஸ் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் தகுதி பெற்றன. இந்த மூன்று நிறுவனங்களும் தங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரி விண்ணப்பித்திருந்தன. லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் 865 கோடிக்கு விண்ணப்பித்திருந்தது. இந்த மதிப்பைவிடச் சற்றுக் குறைவாக 861.90 கோடி ரூபாய்க்கு டாடா புராஜெக்ட்ஸ் லிமிடெட் ஒப்பந்தம் கோரியிருந்ததால், கட்டடம் கட்டும் ஒப்பந்தம் டாடா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

முன்பெல்லாம் நாடாளுமன்றம் எப்படியிருக்கும் தெரியுமா? - ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் #MyVikatan

புதிய வளாகம் முக்கோண வடிவில், தரைத் தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் அமையவிருக்கிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு அதிக இருக்கை வசதிகள்கொண்ட அரங்குகளும், ஒரே நேரத்தில் 1,000-க்கும் அதிகமான நபர்கள் அமர இடம் இருக்குமாறும் அமையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, உறுப்பினர்களுக்கான தனி அலுவலகங்கள் அமையவுள்ளன. இந்தக் கட்டடப் பணி விரைவில் தொடங்கவிருக்கிறது. 2022-ம் ஆண்டில், நாடு 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும்போது, ​​புதிய கட்டடத்தில் அமர்வுகள் நடத்தப்படும் என்று மக்களவை சபாநாயகர் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

அரசாங்கக் குடிமை அமைப்பு, புதிய நாடாளுமன்றம் கட்ட ரூ.940 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டிருந்தது.

தற்போதிருக்கும் நாடாளுமன்றக் கட்டடம் ஆங்கியேலர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைய ஆறு ஆண்டுகள் ஆகின. பின்னர், 1956-ம் ஆண்டு இடப்பற்றாக்குறை காரணமாக இரண்டு தளங்கள் கட்டப்பட்டன. புதிய வளாகம் கட்டிமுடித்ததும், தற்போதிருக்கும் வளாகம் புனரமைக்கப்பட்டு வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய வளாகப் பணிகள் முடிவடையும் வரை தற்போதிருக்கும் கட்டடத்திலேயே பணிகள் தொடர்ந்து நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு