Election bannerElection banner
Published:Updated:

திருச்சி: `தி.மு.க-வை எதிர்க்க சசிகலாவால் மட்டுமே முடியும்!' - அ.தி.மு.க நிர்வாகிகளின் போஸ்டர்கள்

சசிகலா
சசிகலா

`நாட்டை காக்கப்போவது மோடியா இல்லை இந்த லேடியா என்று மோடி அரசைத் தெறிக்கவிட்டவர் அம்மா. ஆனால் இவர்கள் மோடி ஆட்சியைத் தமிழகத்துக்குள் காலூன்றவைக்கிறார்கள்.’

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து, கடந்த 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆனார். தற்போது அவர், பெங்களூரிள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விரைவில் அவர் தமிழகம் வரவிருக்கும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியராஜா என்பவர் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஓட்டியிருந்தார்.

சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டிய அ.தி.மு.க-வினர்
சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டிய அ.தி.மு.க-வினர்

இதையடுத்து, அவரைக் கட்சியிலிருந்து நீக்கினார்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இதற்கிடையே, சசிகலாவை வரவேற்று திருச்சியில் அடுத்தடுத்து அ.தி.மு.க நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டிவருகின்றனர்.

சசிகலா
சசிகலா

இந்தச் சூழ்நிலையில் தேனியைச் சேர்ந்த அ.தி.மு.க ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞரணித் தலைவர் சின்னராஜா, சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார். தற்போது, சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டிவரும் சம்பவம் அ.தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி - வடக்கு மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் அந்தநல்லூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலருமான புலியூர் அண்ணாதுரை, `அ.தி.மு.க பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக...’ என்று சசிகலாவை வரவேற்று திருச்சி மாநகர் உள்ளிட்ட பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பைக் கிளப்பினார்.

சசிகலா
சசிகலா

இதையடுத்து இவர் அ.தி.மு.க- விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இந்தநிலையில், இன்று திருவெறும்பூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுவாமிநாதன் என்பவர், `கழகம் காத்திடப் பொதுச்செயலாளர் பணியைத் தொடர்ந்திடச் சின்னம்மா வாருங்கள்’ என்று போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

போஸ்டர் அடித்த திருவெறும்பூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுவாமிநாதனிடம் பேசினோம். ``அம்மாவால் அடுத்த அரசியல் வாரிசு என்று கைநீட்டப்பட்டவர் சின்னம்மா. இதை அ.தி.மு.க தொண்டர்கள் யாராலும் மறுக்க முடியாது. 33 ஆண்டுகள் அம்மாவோடு இருந்து அரசியல் சாணக்கியத்தனத்தைக் கற்றுக்கொண்டவர் சசிகலா.

சுவாமிநாதன்
சுவாமிநாதன்

தற்போது தி.மு.க-வை எதிர்க்க சசிகலாவால் மட்டுமே முடியும். கடந்த எம்.பி தேர்தலில், `நாட்டை காக்கப்போவது மோடியா இல்லை இந்த லேடியா...’ என்று மோடி அரசைத் தெறிக்கவிட்டவர் அம்மா. ஆனால் இங்குள்ள கைக்கூலிகள், மத்திய அரசிடம் அடிபட்டுக்கொண்டு, மோடி ஆட்சியைத் தமிழகத்துக்குள் காலூன்ற இவர்கள் மறைமுக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சசிகலா - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்
சசிகலா - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்

இவர்கள்தான் அம்மாவின் ஆட்சியைச் செயல்படுத்துவார்களா... நீங்களே நினைத்துப் பாருங்கள். அ.தி.மு.க-வைச் சீரழிக்கிறார்கள். அ.தி.மு.க-வை வழிநடத்தக்கூடிய தகுதியும், தி.மு.க மற்றும் மோடி அரசை எதிர்க்கக்கூடிய திறமையும் அம்மாவின் வழிவந்த சின்னம்மாவுக்கு மட்டுமே இருக்கின்றன. அதனால்தான் போஸ்டரை ஒட்டினேன். அவர்கள் என்னைப் பதவியைவிட்டுத் தூக்கினாலும் கவலைப்படப்போவதில்லை. இந்த இயக்கத்தை சசிகலா தூக்கி நிறுத்த வேண்டும் என்று ஒன்றரைக் கோடி தொண்டர்கள் நினைக்கிறார்கள். அதுதான் நடக்கப்போகிறது" என்று ஆவேசத்தோடு பேசினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு