Published:Updated:

"இபிஎஸ்-ன் பொறுப்புக்கு ஆபத்து என்றால் ஓபிஎஸ்-ஸை இணைத்துக் கொள்வார்!"- முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா

கட்சிக்கொடியை ஏற்றி வைத்த அன்வர் ராஜா

``அ.தி.மு.க-வில் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற தலைமை வேண்டும். அப்படி ஒரு தலைமை தற்போது இல்லை. எடப்பாடி பழனிசாமி ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறார்." - அன்வர் ராஜா

"இபிஎஸ்-ன் பொறுப்புக்கு ஆபத்து என்றால் ஓபிஎஸ்-ஸை இணைத்துக் கொள்வார்!"- முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா

``அ.தி.மு.க-வில் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற தலைமை வேண்டும். அப்படி ஒரு தலைமை தற்போது இல்லை. எடப்பாடி பழனிசாமி ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறார்." - அன்வர் ராஜா

Published:Updated:
கட்சிக்கொடியை ஏற்றி வைத்த அன்வர் ராஜா

அ.தி.மு.க-வின் 51-வது ஆண்டு பொன்விழாவையொட்டி, ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ``அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்சியை வலுப்படுத்தி, ஆட்சியைப் பிடிக்க முடியும். அ.தி.மு.க மத்திய அரசையும் மாநில அரசையும் கொள்கைரீதியாக ஒருசேர எதிர்த்து அரசியலில் பயணித்தால்தான் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும். இதைத்தான் 2014-லிருந்து 2016 வரை ஜெயலலிதா செய்தார்.

மத்திய அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் அதனை நாங்கள் ஆதரித்தோம், அதே நேரத்தில் கெட்டது செய்தால் அதனை நாடாளுமன்றத்தில் எதிர்த்தோம். 30 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கிதான் காவிரி மேலாண்மை தீர்ப்பையே அரசிதழில் வெளியிடச் செய்தோம். ஜி.எஸ்.டி வரி விதிப்பை எதிர்த்த ஒரே கட்சி அ.தி.மு.க மட்டும்தான். மாநில அரசாங்கம் பல தவறுகளை செய்கின்றது. ஆனால் அவை வெளியே தெரிவதில்லை. அதனை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்ல அ.தி.மு.க தவறிவிட்டது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு தி.மு.க தங்கள் சொந்த வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதில்தான் மனம் வெதும்பி `இரவு முழுவதும் எனக்கு தூக்கமே இல்லை' என ஸ்டாலின் சொல்லும் அளவுக்கு தி.மு.க-வின் நிலைமை மோசமாகி இருக்கிறது.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்வர் ராஜா
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்வர் ராஜா

அ.தி.மு.க-வில் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற தலைமை வேண்டும். அப்படி ஒரு தலைமை தற்போது இல்லை. எடப்பாடி பழனிசாமி ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறார். அதிலிருந்து அவர் வெளியே வரவேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க-வுக்கு ஒரு பொதுவான தலைவராக அவர் இருக்க முடியும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல தலைவராக மாற வேண்டும் என்ற முயற்சியைக்கூட அவர்கள் செய்யவில்லை. ஓ.பி.எஸ்-ஸுக்கும், இ.பி.எஸ்-ஸுக்கும் கருத்து முரண்பாடு இருக்கிறது என்று நான் சொன்னதால்தான் என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள். தற்போது அந்த முரண்பாடு இருக்கிறதா, இல்லையா? அ.தி.மு.கவிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது. வேறு கட்சிக்குச் செல்லும் வரை, நான் அ.தி.மு.க உறுப்பினர்தான்.

எடப்பாடி பழனிசாமி தற்போது உள்ள பொறுப்புக்கு ஆபத்து ஏற்படும் என்ற சூழல் வந்தால் கண்டிப்பாக ஓ.பி.எஸ்ஸை இணைத்துக் கொள்வார். அப்போது கட்சி ஒன்று சேர்ந்து விடும். எடப்பாடி பழனிசாமியின் குணாதிசயம் எனக்குத் தெரியும். 2017-ம் ஆண்டு தன்னுடைய பதவிக்கு ஆபத்து என்றவுடன் ஓ.பி.எஸ்ஸை சேர்த்துக் கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வந்தால், ஓ.பி.எஸ்.ஸை நீக்கியதும் செல்லாததாகிவிடும். அப்போது ஓ.பி.எஸ்-ஸை இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

தினகரனும் இவர்களுடன் சேர்வதற்கு தயாராக இருக்கிறார். நீங்கள் ஒன்று சேருங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம் எனக் கூறுகிறார். இவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்லுகின்ற ஆற்றல் சின்னம்மாவுக்கு (சசிகலா) மட்டும்தான் உண்டு. எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை சந்தித்தார் என்றால் அவர்தான் தலைவர் என்று அவரே சொல்வார். ஏனென்றால் ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகளாக உடனிருந்து பக்குவம் பெற்றவர். அவரால்தான் பொதுவான தலைவராக இருக்க முடியும். வெறும் எம்.பி., எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு மட்டும் அரசியல் நடத்த முடியாது. எல்லாமே என் பக்கம் இருக்கிறது என்று சொல்வது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். எடப்பாடி பழனிசாமி தலைவராக வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனமும் இல்லை, ஆனால் அவர் தன்னை தலைவராக்கிக் கொள்வதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தங்கக் கவசம் விவகாரத்தில் ஏற்கெனவே இதுபோன்று இரு பிரிவுகளாக பிளவுபட்டுக் கிடந்தபோது மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. எனவே அதனை முன்னுதாரணமாக கொண்டு தற்போதும் அதேபோல் தங்கக் கவசத்தை மாவட்ட ஆட்சியரிடமே வழங்கிவிடலாம்" எனக் கூறினார்.