Published:Updated:

வேலூர்: `சீக்ரெட் பிளான்; அழைத்துச் சென்ற துரைமுருகன்!’ - திமுக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்

ஸ்டாலினைச் சந்தித்த விஜய்
ஸ்டாலினைச் சந்தித்த விஜய்

‘``அம்மாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் சரியான தலைமை இல்லை. அனைத்து நிர்வாகங்களிலும் ஊழல் நிலவுகிறது. அமைச்சர்கள்மீதும் ஊழல் புகார்கள் உள்ளன’’ - முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய்.

சீரமைக்கப்பட்ட வேலூர் புதிய மாவட்டத்தில் அ.தி.மு.க-வை பலப்படுத்த வியூகம் வகுத்திருக்கிறது அந்தக் கட்சியின் தலைமை. இதற்காகவே, அமைப்புரீதியாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை நான்காகப் பிரித்து மாநகர மாவட்டச் செயலாளராக எஸ்.ஆர்.கே.அப்புவையும், புறநகர மாவட்டச் செயலாளராக வேலழகனையும் நியமித்துள்ளனர். இந்தநிலையில், மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்திருந்த முன்னாள் அமைச்சரான வி.எஸ்.விஜய் அதிருப்தியில் தி.மு.க-வின் ஸ்லீப்பர் செல்லாக மாறி, கடந்த 20 நாள்களாக உள்ளடி வேலைகளைப் பார்த்ததாகக் கொதிக்கிறார்கள் அ.தி.மு.க புள்ளிகள்.

முன்னாள் அமைச்சர் விஜய்
முன்னாள் அமைச்சர் விஜய்

மருத்துவரான விஜய்யை சமாதானப்படுத்த அ.தி.மு.க-வில் மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. எனினும், மாவட்டச் செயலாளர் பதவி கைநழுவிப்போனதை பொறுத்துக்கொள்ள முடியாத விஜய், அ.தி.மு.க-வினரை வீட்டுப்பக்கம் சேர்க்காமல் துரத்தியடித்ததாகவும் சொல்கிறார்கள். இந்தநிலையில், தி.மு.க-வில் இணைய ரகசியமாகத் தீவிரம்காட்டினார் விஜய். இதற்காக வேலூர் தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த் மூலமாக ஏலகிரி பங்களாவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த தி.மு.க பொருளாளர் துரைமுருகனைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

துரைமுருகனுடன் சீக்ரெட் பிளான் வகுத்த விஜய், `நல்ல நேரம், ராகுகாலம் பார்த்து இன்று காலையில் ஸ்டாலினைச் சந்தித்து தி.மு.க-வில் இணைந்துகொண்டார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர். அ.தி.மு.க-வில் மவுசு இல்லாத விஜய்யின் வீட்டுக்கே துரைமுருகன் நேரில் சென்று, அறிவாலயத்துக்கு அழைத்துச் சென்றதுதான் கூடுதல் சுவாரஸ்யத்துக் காரணம். அப்போது துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மற்றும் வேலூரைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் சிலரும் இருந்துள்ளனர். இத்தனைக்கும், அ.தி.மு.க-விலிருந்து விஜய் தி.மு.க-வுக்குத் தாவப்போகும் விவகாரம் இரண்டு நாள்களுக்கு முன்னரே கசிந்துவிட்டது.

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

இது தொடர்பாக எம்.பி கதிர் ஆனந்திடம் கேட்டபோது, ‘``எனக்கு விஜய்யும் தெரியாது, அஜய்யும் தெரியாது. யாரோ ஒருத்தர் ஏதோவொரு கட்சியில் அதிருப்தியோடு இருந்தால், அதுக்கு நான் என்ன பண்ணுவேன். சமூக வலைதளங்களில் எந்தக் கேள்வி வந்தாலும், அதற்கு இந்த கதிர் ஆனந்த்தான் கிடைத்தாரா?’’ என்று கூறியதுதான் வேடிக்கை. யாரைத் தெரியாது என்று சொன்னோரோ அதே விஜய்க்கு அருகில் நின்றுதான் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் கதிர் ஆனந்த்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் தி.மு.க-வில் இணைந்ததற்கு அ.தி.மு.க-வினர் நன்றி தெரிவித்து, கொண்டாடிவருகிறார்கள். அதேசமயம், விஜய் வந்திருப்பதை வேலூர் தி.மு.க-வினரும் விரும்பவில்லை என்கிறார்கள். ‘``வரும் சட்டமன்றத் தேர்தலில் வேலூர் எம்.எல்.ஏ பதவியைக் குறிவைத்துத்தான் விஜய் தி.மு.க-வுக்கு வந்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் என்ற முறையில் தி.மு.க தலைமை `சீட்’ கொடுத்தாலும் கொடுத்துவிடும். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சி பிளவுபட்டபோது, பணத்துக்காக டி.டி.வி.தினகரன் அணிக்குத் தாவிய விஜய்யை நம்ப முடியாது’’ என்று கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் வேலூர் தி.மு.க புள்ளிகள்.

ஸ்டாலினைச் சந்தித்த விஜய்
ஸ்டாலினைச் சந்தித்த விஜய்

இது பற்றி வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்புவிடம் கேட்டபோது, ``முன்னாள் அமைச்சர் விஜய் தி.மு.க-வுக்குச் சென்றதால் அ.தி.மு.க-வுக்கு இழப்பு கிடையாது. அவருக்குத்தான் நஷ்டம். விஜய்யை அடையாளம் காட்டியது எங்கள் தெய்வம் அம்மா. பதவிக்காகக் கட்சி தாவும் இவரைப் போன்றோரைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தி.மு.க-வில் இணைந்தது பற்றி எங்கள் கட்சியின் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம்’’ என்றார்.

கட்சித்தாவல் குறித்து முன்னாள் அமைச்சர் விஜய்யிடம் பேசினோம். ‘``அம்மாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் சரியான தலைமை இல்லை. அனைத்து நிர்வாகங்களிலும் ஊழல் நிலவுகிறது. அமைச்சர்கள்மீதும் ஊழல் புகார்கள் உள்ளன. இன்னும் ஆறு மாதங்களில் அ.தி.மு.க என்ற கட்சி இருக்குமா என்றே தெரியவில்லை. நான் எதையும் எதிர்பார்த்து தி.மு.க-வுக்கு வரவில்லை. இன்றிலிருந்து தி.மு.க-வின் தொண்டனாக செயல்படப் போகிறேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு