Published:Updated:

காலமானார் பி.ஹெச்.பாண்டியன்... சபாநாயகராக அவருடைய அதிரடிகள் என்னென்ன?

பி.ஹெச்.பாண்டியன்
பி.ஹெச்.பாண்டியன்

`சட்டமன்ற சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு’ என்ற புகழ்பெற்ற வாசகத்துக்குச் சொந்தக்காரரான முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 74.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகேயுள்ள கோவிந்தபேரியில் பிறந்தவர் பி.ஹெச்.பாண்டியன். வழக்கறிஞர் பட்டம்பெற்று 1968-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவுசெய்தார். தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஆளவந்தார் கொலை வழக்கில் மாநிலத் தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக இருந்த ஜே.எஸ்.அதனேஷியஸிடம் ஜூனியர் வழக்கறிஞராகச் சேர்ந்தார் பி.ஹெச்.பாண்டியன். பின்னர், தலைமை அரசு குற்றவியல் வக்கீல்களாக இருந்த பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், வி.ராமசாமி உள்ளிட்டோரிடமும் ஜூனியராகப் பணியாற்றியுள்ளார்.

பி.ஹெச்.பாண்டியன்
பி.ஹெச்.பாண்டியன்

எம்.ஏ குற்றவியல், சட்ட விஞ்ஞானம், எம்.எல் (கிரிமினல் சட்டம்) ஆகியவற்றைப் படித்த பி.ஹெச்.பாண்டியன், சட்டப் படிப்பில் ஆய்வுப்பட்டம் பெற்றவர். ஏராளமான பொதுநல வழக்குகள், கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி வெற்றி பெற்ற பி.ஹெச்.பாண்டியன், வழக்கறிஞராக 50 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கிய நேரத்தில், அவர் மீதான அபிமானத்தால் அ.தி.மு.க-வில் இணைந்த பி.ஹெச்.பாண்டியன், அ.தி.மு.க-வின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராகப் பணியாற்றினார். சேரன்மாதேவி சட்டமன்றத் தொகுதியில் 1977, 1980, 1984 ஆகிய தேர்தல்களில் எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றார். 1980-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்றத் துணை சபாநாயகராகவும், 1985-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை சபாநாயகராகவும் இருந்தார்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

அப்போதுதான், `சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது. சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்றார் பி.ஹெச்.பாண்டியன். சபாநாயகராக சில முன்மாதிரி தீர்ப்புகளை அவர் அளித்தார். சபாநாயகராக அவர் இருந்தபோது எடுத்த முடிவுகள் நாடு முழுவதும் பரவலான கவனத்தைப் பெற்றதுடன், சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. இந்த சமயத்தில்தான், சபாநாயகர் உத்தரவின் பேரில் ஆனந்த விகடனில் வெளியான ஒரு நகைச்சுவை துணுக்குக்காக அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டார். ஊடக சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கியது இந்த உத்தரவு.

இசைக்கருவிக்குள் ஒளிந்து தப்பிய ஜப்பான் நிஸான் முன்னாள் சி.இ.ஓ கார்லோஸ் கோன்! ஏன், எப்படி?

1987-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். அதன் பிறகு அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் ஓர் அணியும் ஜெயலலிதா தலைமையில் மற்றோர் அணியும் செயல்பட்டன. அப்போது, சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வுக்கு 132 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தது. அவர்களில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர். சபாநாயகராக இருந்த பி.ஹெச்.பாண்டியன், ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையிலிருந்து அதிரடியாக நீக்கினார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜானகி ராமச்சந்திரன் அணியில் வெற்றிபெற்ற இரண்டு பேரில் ஒருவர் பி.ஹெச்.பாண்டியன். பிறகு, ஜெயலலிதாவின் ஆதரவாளராக மாறினார். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வில் அமைப்புச்செயலாளராக இருந்தார் பி.ஹெச்.பாண்டியன். 1999-ம் ஆண்டு திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி ஆனார். 2016-ல் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, சசிகலாவின் அதிகாரத்தின் கீழ் அ.தி.மு.க செயல்பட்டது. சசிகலாவின் தலைமையை இவர் ஏற்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாக இவர் செயல்பட்டார். 2017 பிப்ரவரி மாதம், முதல்வர் பதவிக்கு சசிகலா வருவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றபோது, அதை எதிர்த்தார். முதல்வர் பதவிக்கு சசிகலா தகுதியில்லாதவர் என்று விமர்சித்தார். மேலும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்களையும் எழுப்பினார்.

உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பி.ஹெச்.பாண்டியன் இன்று காலமானார். இவரின் மனைவியான சிந்தியா பாண்டியன் கடந்த ஆண்டு காலமானார். சிந்தியா பாண்டியன், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன், 2001-ம் ஆண்டு சேரன்மாதேவி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றார்.

அடுத்த கட்டுரைக்கு