Published:Updated:

`அவர் சட்டமன்றம் போன பிறகுதான் எங்க கிராமத்துல பள்ளிக்கூடம் வந்தது’ - சேடப்பட்டியார் குறித்து மக்கள்

சேடப்பட்டி முத்தையா

சபாநாயகர், மத்திய அமைச்சர் பதவியில் இருந்தபோதிலும் எளிமையாக வாழ்ந்து மறைந்தவர் சேடப்பட்டி முத்தையா.

`அவர் சட்டமன்றம் போன பிறகுதான் எங்க கிராமத்துல பள்ளிக்கூடம் வந்தது’ - சேடப்பட்டியார் குறித்து மக்கள்

சபாநாயகர், மத்திய அமைச்சர் பதவியில் இருந்தபோதிலும் எளிமையாக வாழ்ந்து மறைந்தவர் சேடப்பட்டி முத்தையா.

Published:Updated:
சேடப்பட்டி முத்தையா

``பெரிய ஆளுங்க பெரும்பாலும் தன் பேருக்கு முன்னால ஊர்ப்பேரைப் போட்டுக்குறது வழக்கம். ஆனா, தான் வெற்றிபெற்ற சேடப்பட்டி தொகுதிப் பேரை பேருக்கு முன்னால போட்டு பிரபலப்படுத்தினவரு முத்தையா அண்ணன்" என்று உருக்கமாகச் சொல்கிறார்கள் முத்தப்பன்பட்டிக்காரர்கள்.

எம்.ஜி.ஆருடன்
எம்.ஜி.ஆருடன்

முன்னாள் சபாநாயகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சேடப்பட்டி முத்தையா உடல்நலக் குறைவால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 77.

`சேடப்பட்டியார்’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட முத்தையாவைப் பற்றி மதுரை மாவட்டத்தில் உள்ளவர்களிடம் கேட்டாலே அரசியல் கடந்து பெருமையாகப் பேசுகிறார்கள் மக்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே முத்தப்பன்பட்டியில் 1945-ல் பிறந்த முத்தையா, பள்ளிப் படிப்பை அங்கு முடித்துவிட்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் எம்.எஸ்சி முடித்தார். திராவிட இயக்க தாக்கத்தால் தி.மு.க மாணவர் அணியிலிருந்து, பிறகு எம்.ஜி.ஆர் மீதான ஈர்ப்பால் அ.தி.மு.க-வில் சேர்ந்தார். 1977-ல் சேடப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். அதைத் தொடர்ந்து 1980, 1984 ,1991 தேர்தலிலும் வெற்றிபெற்றார். 1991-ல் ஜெயலலிதா முதன்முதலாக முதலமைச்சரானபோது இவருக்கு சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்பு இரண்டு முறை பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கூட்டணியில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

`அவர் சட்டமன்றம் போன பிறகுதான் எங்க கிராமத்துல பள்ளிக்கூடம் வந்தது’ - சேடப்பட்டியார் குறித்து மக்கள்

அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர், மாநிலப் பொருளாளர் எனப் பல பதவிகளை வகித்தவர், 2006-ல் தி.மு.க-வில் இணைந்தார். தி.மு.க தேர்தல் பணிக்குழுச் செயலாளராகப் பதவி வகித்துவந்தார். மனைவி சகுந்தலா. இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். இளைய மகன் மணிமாறன் தற்போது மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க செயலாளராக இருக்கிறார்.

சில நாள்களுக்கு முன்பு உடல் நலமில்லாத நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது மதுரைக்கு வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் அவர் நேற்று மதியம் மரணமடைந்தார். அவருடைய உடல் சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நம்மிடம் பேசும்போது, ''முத்தப்பன்பட்டியிலயே எம்.எஸ்சி படித்த முதல் பட்டதாரி அவரு. மதுரை தியாகராசர் காலேஜுல முதல் மாணவனா வந்தப்பவே அவருக்கு அரசாங்க வேலை தேடி வந்துச்சு. அதற்குப் போகாமல் திராவிட இயக்க ஈர்ப்பால அரசியலுக்கு வந்துட்டாரு. இளவட்டமா இருந்தப்போ இந்தி எதிர்ப்பு போராட்டத்துல கலந்துக்கிட்டாரு. அதன் பின்னால அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கினப்ப அதுல மாவட்ட நிர்வாகியா வந்து 1977- தேர்தல்ல நின்று வெற்றிபெற்றார். அவர் சட்டமன்றத்துக்குப் போன பிறகுதான் சேடப்பட்டி வட்டாரத்துல பல கிராமங்களுக்கு பள்ளிக்கூடம் வந்தது.

பேரையூர்ல தாலுகா ஆபீஸ் கொண்டு வந்தாரு. பல திட்டங்களைத் தொகுதிக்குக் கொண்டு வந்தாரு. சபாநாயகர், மத்திய அமைச்சரா இருந்தப்ப பந்தா இல்லாமல் எல்லார் வீட்டு நல்லது கெட்டதுக்கும் வந்து கலந்துக்குவார். அவர் அ.தி.மு.க-வுல இருந்து தி.மு.க-வுக்குப் போனாலும் மக்கள் எல்லாரும் மரியாதைவெச்சுருந்தாங்க. சபாநாயகர், மத்திய அமைச்சர் பதவி கிடைத்தவர்கள் சொத்து சுகத்தோட சென்னையிலயே செட்டில் ஆயிடுறதைப் பார்த்திருக்கோம். பல தொழில்களை உருவாக்கிடுவாங்க. ஆனா, இவரு சொந்த கிராமத்துலயும் சோழவந்தான்ல உள்ள தோப்பு வீட்டுலயும்தான் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தாரு. இன்னைக்கு சேடப்பட்டி தொகுதி நடைமுறையில இல்லை. ஆனாலும் இவரால சேடப்பட்டிங்கிற ஊர் எல்லாராலும் உச்சரிக்கப்பட்டுவருது. அதனாலதான் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துறாங்க" என்றனர்.

சேடப்பட்டி முத்தையா
சேடப்பட்டி முத்தையா

சேடப்பட்டி முத்தையாவின் மறைவுக்கு ஆளுநரும், முதலமைச்சரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.