Published:Updated:

`முதலமைச்சர், பொதுச் செயலாளர் கனவில் எனக்குத் தெரிந்தே 25 பேர்!' - ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்

ஜெயலலிதா சமாதியில் பூங்குன்றன்
ஜெயலலிதா சமாதியில் பூங்குன்றன்

எல்லோரும் முதலமைச்சர் கனவு காண்பதோடு, ஜாதக கட்டம் எங்களுக்கு சிறப்பாக இருக்கிறது என்று சொல்லும் அவர்களின் பதிலைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்த பூங்குன்றன் சங்கரலிங்கம் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவுசெய்துள்ளார்.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தன்னுடைய முகநூலில், முதலமைச்சராக! முடியுமா என்ற தலைப்பில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில்,

``முதலமைச்சர் (முதலமைச்சராக) கனவு காணமுடியுமா? முடியும் என்கிறது இன்றைய வரலாறு. முதலமைச்சராக வேடம் ஏற்று நடிக்க முடியுமே தவிர கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என்ற வரலாறு மறைந்து, இன்று நிறைய பேர் முதலமைச்சர் கனவை கண்டுகொண்டிருப்பது என் தாய் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏற்படுத்திய வரலாறு. சாதாரண தொண்டன் கூட இந்தப் பதவியை அலங்கரிக்க முடியும் என்று சொல்லி, செய்து காட்டியவர் எங்கள் அம்மா. அதனால்தான் என்னவோ இன்று நிறையபேர் இந்தக் கனவில்.

Vikatan
ஃபேஸ்புக் பதிவு
ஃபேஸ்புக் பதிவு

நான் சொல்வது உண்மை என்பது கனவு காண்பவர்களுக்கு புரியும். இரண்டாகப் பிரியும்போது குழம்பிய நான், இன்று கேள்விப்படுவதும், தெரிந்துகொண்டதையும் வைத்து பார்க்கும்போது முதலமைச்சர் ஆசை அதிகமாகும்போது உள்ளடி வேலைகளும் அதிகமாகுமே என்று திகைத்து நிற்கிறேன். கலங்கி நிற்கிறேன். ஆக யாருமே நல்லாயிருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. முதலமைச்சர் ஆக உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டால், எங்களுக்கு என்ன தகுதியில்லை யார் யாரோ ஆகும்போது நாங்கள் ஆகக்கூடதா.

ஜாதக கட்டம் எங்களுக்குச் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லும் அவர்களின் பதிலைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அடித்துச் சொல்கிறார்கள், `நான் முதலமைச்சர் ஆவேன் என்று கட்டம் தன் கடமையைச் செய்யும், அதில் மாற்று கருத்தில்லை'. எல்லோருமே இப்படிச் சொல்வதைப் பார்த்து எனக்கு மயக்கம் வருகிறது. இதற்கு ஏன் மயக்கம் என்று நினைக்கிறீர்களா முதலமைச்சர் பொதுச் செயலாளர் கனவில் இருப்பவர்களின் எண்ணிக்கை எனக்குத் தெரிந்தே 25-ஐ தாண்டுகிறது.

பூங்குன்றன்
பூங்குன்றன்

இதில் சிரிப்பு என்னவென்றால் எல்லோரும் ஒன்றாக பயணித்தவர்கள். பயணிக்கப்போகிறவர்கள். காலம் கரைய கரைய காட்சிகள் அரங்கேறும். என்னுடைய வேண்டுதல் எல்லாம் இறைவா, இந்தத் தொண்டர்களைக் காப்பாற்று என்பதுதான்'' என்று பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பூங்குன்றன் சங்கரலிங்கத்தைத் தொடர்புகொள்ள பலதடவை முயற்சி செய்தோம். எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவித்தும் அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கம் கொடுத்தால் பரிசீலனைக்குப்பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அமைதியாக இருந்துவரும் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின், இந்தத் திடீர் பதிவு அ.தி.மு.க-வினரிடையை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு