Published:Updated:

கும்பகோணம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாள் ஃபிளெக்ஸ்... திமுக-வினரே கிழித்ததால் பரபரப்பு!

``நான்வைத்த ஃபிளெக்ஸ் என்பதற்காக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படம் இருப்பதைப் பார்த்து அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்காமல் கிழித்திருப்பது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது."

கும்பகோணம் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுநாளுக்காக வைக்கப்பட்ட ஃபிளெக்ஸ் பேனரை திமுக-வைச் சேர்ந்த சிலரே கிழித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோஷ்டிப் பூசலால் நடந்த இந்தச் சம்பவம் குறித்து தலைமை வரை புகார் சென்றிருக்கிறது. ஃபிளெக்ஸைக் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக விசுவாசிகள் கூறியுள்ளனர்.

கருணாநிதி நினைவுநாளுக்காக வைக்கப்பட்ட ஃபிளெக்ஸ்
கருணாநிதி நினைவுநாளுக்காக வைக்கப்பட்ட ஃபிளெக்ஸ்

பாபநாசம் அருகேயுள்ள பண்டாரவாடை பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். திமுக பிரமுகர். இந்தநிலையில் பாபநாசம் அரசு மருத்துவமனை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளுக்காக மெகா சைஸ் ஃபிளெக்ஸ் போர்டு ஒன்றை வைத்திருந்தார். கோஷ்டிப்பூசலால் தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு தரப்பினர் ஃபிளெக்ஸ் போர்டைக் கிழித்துவிட்டனர். கருணாநிதி படம் இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஃபிளெக்ஸ் கிழிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி திமுக-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து திமுக-வினர் சிலரிடம் பேசினோம். `தஞ்சாவூர் தி.மு.க-வில் வடக்கு மாவட்டப் பகுதிக்கு உட்பட்ட பண்டாரவாடையில் வசிப்பவர் நவநீத கிருஷ்ணன். இவர் கட்சியில் உறுப்பினர்தான் என்றாலும், பொறுப்பில் இல்லாவிட்டாலும் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறார். இதை வடக்கு மாவட்டப் பொறுப்பாளரான கல்யாணசுந்தரம் பல முறை பாராட்டியும் இருக்கிறார்.

முழுமையாக எடுக்கப்பட்ட ஃபிளெக்ஸ்
முழுமையாக எடுக்கப்பட்ட ஃபிளெக்ஸ்

இந்தநிலையில், கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளுக்காக `செம்மொழி நாயகரே... நினைவுநாளில் வணங்குகிறோம்’ என்ற வாசகத்துடன் கருணாநிதி படம் போட்டு ஃபிளெக்ஸ் போர்டு வைத்தார். கடந்த 7-ம் தேதி கருணாநிதியின் நினைவுநாள் தமிழ்நாடு முழுவதும் அவருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் நினைவுகூரப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் பாபநாசத்தில் திமுக-வைச் சேர்ந்த சிலர் கருணாநிதி நினைவுநாளுக்காக வைத்திருந்த ஃபிளெக்ஸ் போர்டைக் கிழித்தனர். இதைப் பார்த்த திமுக விசுவாசிகள் சிலர் `முன்னாள் தலைவர் கருணாநிதி படம் இருக்கு கிழிக்காதீங்க’ என்று கத்தியுள்ளனர். ஆனால் ஃபிளெக்ஸைக் கிழித்த ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டே எதையும் காதில் வாங்காமல் முழுமையாகக் கிழித்தார். இதனால் அந்த இடமே பரபரப்படைந்தது.

திமுக  பிரமுகர் வைத்த ஃபிளெக்ஸ்
திமுக பிரமுகர் வைத்த ஃபிளெக்ஸ்

இந்தத் தகவல் மாவட்ட பொறுப்பாளர் கல்யாணசுந்தரத்துக்கு சென்றது. நவநீதகிருஷ்ணனிடம் பேசிய அவர், `பொறுமையாக இருங்க. பேசிக்கொள்ளலாம்’ எனச் சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் `இந்தப் பிரச்னை திமுக தலைமை வரை சென்றிருக்கிறது. கட்சியில் பொறுப்பில் இல்லையென்றாலும் உறுப்பினர் என்கிற முறையில் தொடர்ந்து ஈடுபாட்டோடு கட்சிப் பணிகளை ஆர்வத்துடன் செய்வதைக் காழ்ப்புணர்சியின் காரணமாக ஏற்று கொள்ள முடியாமல் சிலர் இப்படிச் செய்துள்ளனர். அதேபோல் நவநீத கிருஷ்ணன் அச்சடித்த போஸ்டரை பாபநாசம் ஒன்றியம் முழுவதும் ஒட்டவிடாமல் பிரச்னை செய்து தடுத்திருக்கிறார்கள்’ எனத் தெரிவித்தனர் சில தி.மு.க-காரர்கள்.

63 ஆண்டுகள் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீடு - ஒரு ரவுண்ட்அப்!

நவநீதகிருஷ்ணனிடம் பேசினோம். `நான் வைத்த ஃபிளெக்ஸ் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படம் இருப்பதைப் பார்த்து, அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்காமல் கிழித்திருப்பது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது’ என்பதோடு முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு