Published:Updated:

“சிறப்பான அதிகாரிகளை பயன்படுத்திக்கொள்ளவில்லை... நிதியை முறையாகக் கையாளவில்லை...”

 பூர்ணலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
பூர்ணலிங்கம்

தமிழக அரசைச் சாடும் சுகாதாரத்துறை முன்னாள் செயலர் பூர்ணலிங்கம்

தமிழகத்தில் ஹெச்.ஐ.வி தாக்கம் அதிகரித்த நேரத்தில் சுகாதாரத்துறைச் செயலராக இருந்தவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பூர்ணலிங்கம்.

அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக ஹெச்.ஐ.வி நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த உத்திகள் ‘தமிழ்நாடு மாடல்’ என்ற பெயரில் பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டன. கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் பல கேள்விகளுடன் அவரைச் சந்தித்தோம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“ஹெச்.ஐ.வி பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாத காலத்தில், ‘தமிழகத்தில் நோய் பரவியிருக்கிறது’ என்று பகிரங்கமாக அறிவித்து, தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டவர் நீங்கள். அந்தச் சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்?”

“கொரோனாவுக்கு இப்போது மருந்து இல்லாததைப்போல அப்போது ஹெச்.ஐ.வி-க்கும் மருந்து கிடையாது. ஹெச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் இறந்துவிடுவார்கள் என்ற நிலைதான் இருந்தது. ஹெச்.ஐ.வி-யால் ஓரிரு உயிரிழப்புகள் நிகழ்ந்தாலும் பெரிதாகப் பேசப்பட்டன. இறந்தவர்கள் அருகில் யாரும் போகாத நிலை இருந்தது. 1994-ம் ஆண்டில் நான் சுகாதாரத்துறைச் செயலராக இருந்தபோதுதான் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கினோம். நோய் பரவ அதிகம் வாய்ப்புள்ள பாலியல் தொழிலாளர்கள், தவறு செய்யும் வாய்ப்புகளுள்ள இளைஞர்கள், லாரி ஓட்டுநர்கள் ஆகியோரைக் கண்டறிந்து ஆலோசனை வழங்கினோம். ஆணுறை பயன்படுத்தும்படி அறிவுறுத்தினோம். பரிசோதனையையும் அதிகப்படுத்தினோம். தனி ஹெல்ப் லைன் உருவாக்கினோம். மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சிரிஞ்ச் பயன்பாட்டை ஒழித்துவிட்டு டிஸ்போஸபிள் சிரிஞ்சை அறிமுகப்படுத்தினோம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இப்போது மக்களுக்கு கொரோனாவைப் பற்றிய தெளிவு இருந்தும் உண்மைநிலையைக் கூறாமல், ‘இன்னும் சமூகப் பரவலுக்குள்ளேயே செல்லவில்லை’ என்று தமிழக அரசு சொல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கொரோனா வெளிநாட்டிலிருந்து, வெளிமாநிலத்திலிருந்தது வந்தால் என்ன, சமூகப் பரவலாக மாறினால் என்ன... அதை அறிவிப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்? ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் இந்தியா முழுவதும் வெறும் 600 நோயாளிகள்தான் இருந்தனர். அந்த 600 பேரையும் கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து, எங்கிருந்து அவர்களுக்கு பரவியது, அவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் யார் யார் என்பதையெல்லாம் கண்டறிந்து நோய்ப் பரவலைத் தடுத்திருந்தால் இத்தனை பெரிய பிரச்னை வந்திருக்காது.’’

“கொரோனா விஷயத்தில் தமிழக அரசு வெளிப்படையாகச் செயல்படுகிறதா?”

“இந்த விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப் படவில்லை. எத்தனை பேருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது, எத்தனை பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது, என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படு கின்றன என்பது தொடர்பான தரவுகளையே அரசு வெளியிடவில்லை. மாநிலத்தின் ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கை, இறப்பு போன்ற தரவுகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்தின் நிலவரம் பற்றிய விரிவான தரவுகள் இல்லை. ஊடகங்கள் அளிக்கும் தகவல்கள் மட்டுமே தரவுகளாகக் கிடைக் கின்றன. தரவுகளை வெளிப்படையாக மக்களிடம் தெரிவிப்பது தவறில்லை. `நோய்த்தொற்று வராமல் தடுப்பது எப்படி?’ என்ற அடிப்படை வழிகாட்டு நெறிமுறைகளைக்கூட பொதுமக்களுக்கு வழங்கத் தவறிவிட்டது தமிழக அரசு.”

“முதலில் `ஊரடங்கு’ என்றார்கள், பின்னர் `கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்’ என்றார்கள்... இதுபோல மாற்றி மாற்றித் தகவல்களை அளிப்பது மக்களைக் குழப்பாதா?”

 பூர்ணலிங்கம்
பூர்ணலிங்கம்

“விஷயம் தெரிந்தவர்களையே அரசின் தகவல்கள் குழப்புகின்றன. சாமானியர்கள் ரொம்பவும் குழம்பிப் போய்விடுவார்கள். மாற்றி மாற்றிப் பேசுவது எனக்கே வேடிக்கையாக இருக்கிறது. ஊடகத்தின் மூலம் மக்களிடம் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு பிரதிநிதிதான் இருக்க வேண்டும். சுகாதாரத் துறை அமைச்சர் அல்லது செயலர்தான் கொள்கை முடிவுகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும். டெல்லியில் இணைச் செயலர் மட்டும்தான் பிரதிநிதியாக இருக்கிறார்.”

“துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தைக் கேட்காமல், தன்னிச்சையாக அரசு முடிவெடுப்பதாக எழும் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“பொதுவாக, நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டுத்தான் அரசு முடிவெடுக்கும். ஹெச்.ஐ.வி-யைக் கையாளும்போது பாலியல் நோய் நிபுணர்கள், ரத்த மாற்று சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட நான்கைந்து நிபுணர்களிடம் கேட்டுத்தான் செய்தோம். ஆனால், இப்போது என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரிய வில்லை. நிபுணர்களுக்கே வெவ்வேறு விதமான கருத்துகள் இருக்கும் என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.”

“கேரளா கொரோனா வைரஸ் நோயைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியிருக்கிறது. பொது சுகாதாரத்துறை கட்டமைப்பில் கேரளாவைக் காட்டிலும் முன்னேறிய தமிழகம் நிர்வாகத்தில் எந்த இடத்தில் தவறியது?”

“சிறப்பான தலைமைத்துவம் (Leadership) இருப்பதுதான் கேரளத்தின் வெற்றிக்குக் காரணம். அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவும் அர்ப்பணிப்போடு பணியாற்றுபவர். மருத்துவர்கள், நிபுணர்களுடன் கலந்தாலோசித்து தக்க நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால், தமிழக அரசோ இங்குள்ள சிறப்பான அதிகாரிகளை யெல்லாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தமிழகத்தின் நிலை வருந்தக்கூடியதாகவே இருக்கிறது.”

“ `கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசுக்குப் போதிய நிதியில்லை’ என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அதனால்தான் டாஸ்மாக் கடைகளை அரசு அவசர அவசரமாகத் திறந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறதே?”

“நிதியில்லாமல் எந்தப் பணியையும் செய்ய முடியாது. ஊரடங்கால் தமிழகத்துக்கு நிச்சயம் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். தமிழக பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும்போது 100 கோடி, 200 கோடி ரூபாயெல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஆனால், கேரள அரசைப்போல தமிழக அரசு நிதியை சாமர்த்தியமாகக் கையாளவில்லை. கேரளத்தில் தொழிற்சாலைகளே கிடையாது. அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுப்பதற்கே சிரமப்படுவார்கள். ஆனால், இந்தச் சூழலில் நிதியைச் சாமர்த்தியமாகக் கையாண்டிருக் கிறார்கள்.”

“கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு உங்களது ஆலோசனைகள் என்ன?”

“மக்களுக்கு, நிலவும் குழப்பங்களுக்குத் தெளிவான அறிவுரைகளை அரசு எழுத்துபூர்வ மாகத் தயாரித்து, ஊடகங்கள் மூலம் அளிக்க வேண்டும். அரசின் சின்னம் பொறிக்கப்பட்டு வெளியிடப்படும் தகவல்களுக்கென்று ஒரு மரியாதையும் நம்பகத்தன்மையும் பொதுமக்களிடம் இருக்கிறது. மக்களுக்கு தேவையற்ற பயத்தை ஏற்படுத்தக் கூடாது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நோய் எங்கிருந்து பரவுகிறது, எப்படிப் பரவுகிறது என்பது தொடர்பான கள நிலவரத்தை ஆய்வு செய்து ஆய்வறிக்கையை பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். வெளிப்படைத் தன்மையோடு அனைத்து விவரங்களையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மிக முக்கியமாக கோவிட்-19 மேலாண்மை முழுவதும் ஒரு நபர் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். சுகாதாரத்துறை என்றால் செயலர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவருக்குக் கீழ் மாநகராட்சி செயல்பட வேண்டும். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.”