Published:Updated:

அலட்சியப்போக்கு... அறம் இல்லை... மாற்றாந்தாய் மனநிலை!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

மத்திய அரசைக் கண்டிக்கும் முன்னாள் உயரதிகாரிகள்...

அலட்சியப்போக்கு... அறம் இல்லை... மாற்றாந்தாய் மனநிலை!

மத்திய அரசைக் கண்டிக்கும் முன்னாள் உயரதிகாரிகள்...

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்வதில் மத்திய அரசின் அலட்சியங்களையும் தவறுகளையும் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அந்தவகையில் மத்திய அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் 116 பேர் ஒன்றிணைந்து, மே 20-ம் தேதி பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

‘அரசமைப்புச் சட்டத்தின் வழி நடக்க வலியுறுத்தும் குழு’ என்ற பெயரில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் ஓர் அமைப்பாக இயங்கிவருகிறார்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்படும்போதெல்லாம், அதைக் கண்டித்துவருகிறது இந்த அமைப்பு. ‘எங்களுக்கு எந்த அரசியல் சார்பும் இல்லை. கொத்துக் கொத்தாக மக்கள் செத்துவிழும்போது, அதை அரசு சாதாரணமாகக் கையாள்வதைக் கண்டு மனம் மரத்துப்போய் சகிக்க முடியாமல்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்’ என்று தொடங்கும் அந்தக் கடிதத்தின் முக்கியப் பகுதிகள் இங்கே...

“உங்கள் தலைமையிலான அரசு பதவியேற்ற நாளிலிருந்து எந்தப் பிரச்னைக்கும் அமைச்சரவை கூடி முடிவெடுத்ததில்லை. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனநிலையில்தான் கையாளுகிறீர்கள். கொரோனா பேரிடர் காலங்களில் துறைசார்ந்த வல்லுநர்களையும், நாடாளுமன்றக் குழுக்களையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்கிற அறம்கூட உங்களிடம் இல்லை. மாநில அரசுகளுடன் ஆலோசித்து, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஜனநாயகத்தையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. கொரோனா பெருந்தொற்றால் எத்தகைய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை வல்லுநர்கள் அறிவுறுத்தியும்கூட அலட்சியமாக இருந்தீர்கள். முதல் மற்றும் இரண்டாவது அலைக்கு இடையே போதிய இடைவெளி இருந்தும், உங்கள் அலட்சியத்தால் மருத்துவ வசதிகளை மக்கள் பெற முடியாமல் போனது.

கொரோனாவுக்கான மிகப்பெரிய ஆயுதமே தடுப்பூசிதான் என்று சொல்லப்பட்டபோதும், இந்திய மக்கள்தொகைக்கு ஏற்ப தடுப்பூசியை உற்பத்தி செய்து இருப்பில் வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை உங்களிடம் இல்லை. ‘நமக்குத் தேவையான அனைத்தையும் இந்தியாவிலேயே உருவாக்குவோம்’ என்று சொல்லி ‘ஆத்ம நிர்பார் பாரத்’ அமைப்பைத் தொடங்கினீர்களே... அது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.

நம்மைவிட மிகச்சிறிய நாடுகளிடமெல்லாம் தேவைக்காகக் கையேந்த வேண்டிய சூழலில் இருக்கிறோம். கொரோனா பற்றி எந்த விழிப்புணர்வையும் மக்கள் அடைந்துவிடக் கூடாது என்ற நோக்கிலேயே உங்கள் அமைச்சரவை சகாக்கள் தொடர்ந்து சர்ச்சைக் கருத்துகளைப் பேசிவருகிறார்களோ என்கிற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி’ என்ற ஒன்று ஏற்கெனவே இருக்கும்போதே ‘பிஎம் கேர்ஸ்’ என்ற புதுமையான நன்கொடைத் திட்டத்தைத் தொடங்கினீர்கள். அந்த அமைப்புக்கு எவ்வளவு நிதி வருகிறது, எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதற்கு எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. பிஎம் கேர்ஸ் தொடங்கப்படாமல் இருந்தால், அந்த நிதி நேரடியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிகள் தேவைப்படுவோருக்குச் சென்று சேர்ந்திருக்கும். மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி தொகையைச் சரியான நேரத்தில் கொடுக்காமல், அவர்களையும் செயல்படவிடாமல் தடுத்து வைத்திருக்கிறீர்கள். வெளிநாடுகளிலுள்ள தொண்டு நிறுவனங்களிலிருந்து நிதி பெறுவதையும் கடுமையாக்கிவிட்டீர்கள். இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்போதும் அதைப் பற்றி துளியும் கவலையில்லாமல், உங்களுக்கான அரண்மனை கட்டும் வேலை மட்டும் தொடர்ந்து நடப்பதைக் காண்கிறோம். சரியான நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டியது அவசியம்தான் என்றாலும், அதற்காக உங்கள் தலைமையிலேயே லட்சக்கணக்கானோரைக் கூட்டி கூட்டங்களெல்லாம் நடத்தியிருக்க வேண்டியதில்லை. அதுமட்டுமல்லாமல், கும்பமேளாவுக்கு அனுமதி அளித்ததையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.

அலட்சியப்போக்கு... அறம் இல்லை... மாற்றாந்தாய் மனநிலை!

கொரோனா தொற்றைக் கையாள்வதில் உங்களிடம் வெளிப்படைத்தன்மை இருப்பதாகவும் தெரியவில்லை. உங்களது அனைத்து நடவடிக்கைகளும் கொரோனா இரண்டாவது அலையை வரவேற்பதுபோலத்தான் இருந்தன. மாநில அரசுகளும், மக்களும் ‘அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்பதற்கேற்ப உங்களிடம் இருந்த அதே மிதப்புடன் இருந்துவிட்டார்கள். இதனால், நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களும் மிக மோசமான விளைவுகளைச் சந்தித்திருப்பதைப் பார்க்கும்போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது’ என்று நீளும் அந்தக் கடிதத்தில் இதற்கெல்லாம் தீர்வாக மத்திய அரசுக்கு, பத்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.

* 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதற்காக, எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தடுப்பூசிகளைப் பெற்று மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.

* மாநில அரசுகளுடன் ஆலோசித்து ஆக்ஸிஜன் தேவைப்படுவோருக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை தேவையான அளவு மாநிலங்களில் இருக்கின்றனவா என்பதையும் அறிந்து, தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

* நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.

* ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற பெயரில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கும், பிரதமரின் அரண்மனைக்கும் செலவழிக்கும் போக்கை உடனடியாக கைவிடுவதோடு, இன்ன பிற தேவையற்ற செலவுகளையும் நிறுத்திவிட்டு மருத்துவ வசதிகளைப் பெருக்க வேண்டும்.

* கொரோனா பெருந்தொற்று குறையும் வரை, இந்திய உணவுக் கழகத்திலுள்ள ரேஷன்களுக்கு வழக்கமாகக் கொடுப்பது போக மீதமுள்ள தானியங்களைத் தேவையான மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

* மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுவரும் புரத உணவுகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும்.

* தற்போதைக்கு கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியங்களும் இருப்பதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 7,000 ரூபாய் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

* வெளிநாட்டு நிதி ஒழுங்குபடுத்துதல் சட்டத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்திவிட்டு அரசு சாரா நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி அளிப்போரிடம் பணம் வாங்குவதற்கு உரிய வழியை எளிமையாக்குவதுடன், அவை முறையாகச் செலவழிக்கப்படுகின்றனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

* கொரோனா பெருந்தொற்றைத் தடுப்பதற்காக அரசு எடுக்கும் முன்னெடுப்புகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

* அனைத்துக் கட்சிகள் குழுவை அமைத்து கொரோனாவைத் தடுக்க அரசு எடுக்கும் முடிவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

கடிதத்தின் இறுதியாக, ‘கொரோனா பெருந்தொற்றைத் தடுக்க அரசு மற்றும் நிர்வாக அளவில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிக் கடிதத்தில் விரிவாகக் கூறியிருக்கிறோம். கொரோனாவால் உறவுகளை இழந்து தவிக்கிற மக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக மத்திய அரசு நடந்துகொள்வதுதான் இவை அனைத்தையும்விட மிக முக்கியமானது. பிரதமர் அவர்களே... எந்த அளவுக்குத் திறமையாக இந்தச் சிக்கலை நீங்கள் கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் வரலாற்றில் உங்களுக்கான இடம் உறுதி செய்யப்படும்’ என்று முத்தாய்ப்பாக அந்தக் கடிதத்தை முடித்துள்ளனர்.

அலட்சியப்போக்கு... அறம் இல்லை... மாற்றாந்தாய் மனநிலை!

“அதிகாரங்களைக் கைப்பற்றும் வாய்ப்பு!”

இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.பாலச்சந்திரனிடம் பேசினோம். “பிரான்ஸ் போன்ற நாடுகள் அடுத்தடுத்த அலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருந்தன. ஆனால், இந்திய அரசு கொரோனாவை ஒட்டுமொத்தமாக வென்றுவிட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றி, பாராட்டுக் கூட்டமெல்லாம் நடத்தியது. எப்படியும் கொரோனா இரண்டாவது அலை நிகழ்ந்திருக்கும்தான்... அதற்காக அரசைக் குறை சொல்ல முடியாது. ஆனால், பாதுகாப்பு உணர்வின்றி, அலட்சியமாகச் செயல்பட்டதற்காகத்தான் இந்த அரசைக் குற்றம்சாட்டுகிறோம். நாங்கள் எழுதிய கடிதத்தின் மையப்புள்ளியும் அதுதான். இதை நாட்டுக்கு விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்காமல், மாநில அரசுகளின் அதிகாரங்களைக் கைப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பாகவே மத்திய அரசு பார்த்தது. நிலைமை கைமீறிப் போனதும், மீண்டும் மாநில அரசுகள்மீது சுமைகளை ஏற்றிவிட்டிருக்கிறது. இப்படி எல்லா வகையிலும் ஜனநாயக நெறிமுறைகளை மைய அரசு மீறியது. நாங்கள் எழுதிய எந்தக் கடிதத்துக்கும் மத்திய அரசிடமிருந்து பதில் வந்ததில்லை. ஆனால், எது சரியோ அதை மைய அரசு புரிந்துகொண்டு பரிசீலிக்க வேண்டும். அதை மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” என்றார்.

அலட்சியப்போக்கு... அறம் இல்லை... மாற்றாந்தாய் மனநிலை!

“ராம்தேவ் மன்னிப்புக் கேட்க வேண்டும்!”

இவ்வளவு களேபரங்களுக்கு இடையே பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம் பற்றிப் பேசிய சர்ச்சைக் கருத்து ஒன்று மருத்துவர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. ` ‘அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களைவிட, அலோபதி மருத்துவத்தால் உயிரிழந்தவர்கள்தான் அதிகம்’ என்று பேசிய பாபா ராம்தேவ் எழுத்துபூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இனி அவர் இதுபோலப் பேசக் கூடாது என்று அறிவுறுத்துவதோடு தனது கருத்தையும் திரும்பப் பெறுவதையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளது.