Published:Updated:

`அஞ்சாமை, ஈகை, அறிவூக்கம்' - திருக்குறள் ரெஃபரென்ஸ்; மோடியைப் பாராட்டி பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை

பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை
பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை

``மன உறுதி, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை என இந்த நான்கு பண்புகளையும் பிரதமர் மோடியிடம் பார்க்கிறேன்.’’'

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, டெல்லியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது பா.ஜ.க-வின் தேசியப் பொதுச் செயலாளர் முரளிதரராவ் மற்றும் தமிழகத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

அண்ணாமலை
அண்ணாமலை

அப்போது அண்ணாமலை, ``'அஞ்சாமை, ஈகை, அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேச்சைத் தொடங்கினார். அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை மற்றும் ஊக்கமுடைமை என இந்த நான்கு பண்புகளும் குறையாமல் இருப்பதே ஓர் அரசனுக்கு இயல்பாகும் என்பதே இதன் பொருள்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ``மன உறுதி, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை என இந்த நான்கு பண்புகளையும் பிரதமர் மோடியிடம் பார்க்கிறேன்’’ என்று குறிப்பிட்டார். பதவிக்காக ஆசைப்பட்டு கட்சியில் இணையவில்லை என்று குறிப்பிட்ட அவர், கட்சித் தலைமை கொடுக்கும் பணியைச் செய்யக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல், கட்சியை வலுப்படுத்த தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்றும் அண்ணாமலை பேசினார்.

அண்ணாமலை - எல்.முருகன்
அண்ணாமலை - எல்.முருகன்

அப்போது பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், ``சமீபகாலமாக மாற்றுக்கட்சிகளிலிருந்து தலைவர்கள் பா.ஜ.க-வில் இணைகின்றனர். தமிழகத்தில் மாற்றத்தை பிரதமர் மோடியால் மட்டுமே உருவாக்க முடியும் என மக்கள் நம்புகின்றனர்’’ என்று தெரிவித்தார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2011 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை, தனது பதவியைக் கடந்த ஆண்டு ராஜினாமா செய்துவிட்டு, விவசாயப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். அரசியல்ரீதியாக அவ்வப்போது கருத்து தெரிவித்துவந்த அவர், ரஜினிக்கு ஆதரவாகவும் சில கருத்துகளைத் தெரிவித்தார். இதனால், அவர் ரஜினி கட்சி தொடங்கும்பட்சத்தில், தன்னை அதில் இணைத்துக்கொள்வார் என்று பேசப்பட்டது.

இந்தச் சூழலில், திடீரென பா.ஜ.க-வில் இணையவிருப்பதாக அண்ணாமலை இன்று காலை அறிவித்தார். இதையடுத்து, தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் சகிதமாக டெல்லிக்குச் சென்ற அவர், பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில், அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இளைஞரணிப் பதவி... நவம்பர் முதல் அரசியல் ஆட்டம்! - பா.ஜ.க-வில் முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை

அப்போது பா.ஜ.க-வின் தேசியப் பொதுச்செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான முரளிதரராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். பா.ஜ.க-வில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் இளைஞரணிப் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு