Published:Updated:

ரூ.100 கோடி லஞ்சப் புகார்: அமலாக்கத்துறை சோதனை; மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் தலைமறைவு?!

மனைவியுடன் அனில் தேஷ்முக்
மனைவியுடன் அனில் தேஷ்முக்

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தலைமறைவாகியிருக்கிறார். அவரது வீட்டில் நள்ளிரவு வரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ரூ.100 கோடி லஞ்சப் புகார் சுமத்தி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக சி.பி.ஐ தனியாக விசாரணை நடத்திவருகிறது. அமலாக்கப் பிரிவு, அனில் தேஷ்முக் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறது. அமலாக்கப் பிரிவு அனில் தேஷ்முக்கிடம் விசாரிக்க நான்கு முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அனில் தேஷ்முக் கொரோனா, உடல்நலக் கோளாறு போன்ற காரணங்களைக் கூறி அமலாக்கப் பிரிவில் ஆஜராகவில்லை. அனில் தேஷ்முக் மகனுக்கும் மனைவிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் ஆஜராகவில்லை.

அனில் தேஷ்முக்
அனில் தேஷ்முக்

அனில் தேஷ்முக் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வாக்குமூலம் கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அனில் தேஷ்முக்கின் இந்தக் கருத்தை அமலாக்கப் பிரிவு ஏற்றுக்கொள்ளவில்லை. அனில் தேஷ்முக் வீட்டில் ரெய்டும் நடத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தன் மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனில் தேஷ்முக் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் இதில் நீதிமன்றம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இதையடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலை அனில் தேஷ்முக் இல்லம், அவரின் கல்வி நிறுவனம் உட்பட மூன்று இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அனில் தேஷ்முக் லஞ்சப் பணத்தை தனது கல்வி நிறுவனத்தின் தொண்டு நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக மாற்றியிருப்பதாகக் கூறப்பட்டது. அதோடு தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அது குறித்த ஆவணங்களைத் தேடும்விதமாகவே இந்த முறை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனில் தேஷ்முக்கும் வீட்டில் இல்லை. அவரை அதிகாரிகளால் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் தலைமறைவாகவே இருக்கிறார். இந்த வழக்கில் ஏற்கெனவே அனில் தேஷ்முக் உதவியாளர்கள் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அனில் தேஷ்முக், பரம்பீர் சிங்
அனில் தேஷ்முக், பரம்பீர் சிங்

பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சச்சின் வாஸ் என்ற குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரியிடம் ஒவ்வொரு மாதமும் மும்பையிலுள்ள பீர் பார்கள் மற்றும் ஹோட்டல்களில் ரூ.100 கோடி மாமூல் வசூலித்துக் கொடுக்க வேண்டும் என்று அனில் தேஷ்முக் கேட்டுக்கொண்டதாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பரம்பீர் சிங் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

`பெகாசஸ் மூலம் கர்நாடக, மத்தியப் பிரதேச அரசை வீழ்த்தினர்!’-மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே
அடுத்த கட்டுரைக்கு