Published:Updated:

``வாய மூடிட்டு இருந்தா சரிவராது!” - வெடித்த சண்முகம்; வெளியான அறிவிப்பு

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டுள்ளவற்றை நிறைவேற்றச் சொல்லி, கவன ஈர்ப்பு போராட்டத்தை அ.தி.மு.க அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு வெளிவர ஒரு போராட்டத்தையே சி.வி.சண்முகம் நடந்தியிருப்பதுதான் இப்போது கழகத்துக்குள் ‘ஹாட் டாபிக்’காக ஓடுகிறது.

நீட் தேர்விலிருந்து விலக்கு, குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் நிதியுதவி, பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, காஸ் சிலிண்டருக்கு மானியம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது தி.மு.க. ஆனால், மாநிலத்தின் நிதி நிலைமை அதள பாதாளத்தில் இருப்பதால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகிறது. ஜூலை முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்கூட நிதி நிலை சரியில்லாத காரணத்தால் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், தி.மு.க அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி போராட்டத்தில் குதித்திருக்கிறது அ.தி.மு.க. நேற்று அ.தி.மு.க தலைமை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், `வரும் ஜூலை 28-ம் தேதி, அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் முன் பதாகைகளுடன் நின்று கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டும்’ என்று அறிவுத்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளிவருவதற்கே ஒரு போராட்டம் தேவைப்பட்டதாகச் சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் சீனியர்கள்.

நம்மிடம் பேசிய கழக அமைப்புச் செயலாளர்கள் சிலர், ``ஜூலை 22-ம் தேதி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 26 இடங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையிட்டனர். அன்றைய தினம் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்க ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையால், இந்தக் கூட்டத்தில் உட்கட்சித் தேர்தலை ஓரங்கட்டிவிட்டு, தி.மு.க-வின் இந்த ரெய்டு ஆக்‌ஷன் குறித்துத்தான் பிரதானமாகப் பேசப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் என சீனியர்கள் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், சி.வி.சண்முகம்தான் தி.மு.க-வுக்கு எதிராக வெடித்துப் பேசினார்.

அ.தி.மு.க அவைத்தலைவர் மாற்றம்? - எடப்பாடியின் மூவ்... செக் வைக்கும்  பன்னீர்!

`இப்படியே நாம வாய மூடிட்டு இருந்தா சரிவராது. திருப்பி அடிச்சாத்தான் தி.மு.க-வுக்கு பயம் வரும். 2016-ல அம்மா மறைந்த பிறகு, 2006-11 தி.மு.க ஆட்சிக்காலத்துல நடைபெற்ற முறைகேடு புகார்களைத் தீவிரமாக விசாரிக்க நாம தவறிட்டோம். போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது நடந்த முறைகேடு குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தோண்ட ஆரம்பிச்சார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவுல வழக்கும் பதிவாகியிருக்கு. இந்த வழக்குல அப்பவே நாம சரியான நடவடிக்கையை எடுத்திருந்தா, இன்னைக்கு செந்தில் பாலாஜி சிறையில இருந்திருப்பார். நாம கோட்டைவிட்டுட்டோம். தி.மு.க-வோட இந்த அதிகார அத்துமீறலைக் கண்டிச்சு நம்ம கட்சி மாவட்டம்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தணும்’ என்றார் சி.வி.சண்முகம். ஆனால், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் சில அமைச்சர்களுக்கு சி.வி.சண்முகத்தின் கருத்தில் உடன்பாடில்லை. தி.மு.க-வைத் தேவையில்லாமல் கோபப்படுத்த வேண்டாம் என அவர்கள் கருதினார்கள். கட்சித் தலைமையைக் குழப்பிவிட்டு, அன்றைய கூட்டத்தின் முடிவில் வெறும் கண்டன அறிக்கை மட்டும் வெளிவரும்படி அவர்கள் பார்த்துக்கொண்டனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டுக்குச் சென்ற சி.வி.சண்முகம் தலைமையிலான கட்சி நிர்வாகிகள்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டுக்குச் சென்ற சி.வி.சண்முகம் தலைமையிலான கட்சி நிர்வாகிகள்

ஆனால், சி.வி.சண்முகமும், கே.பி.அன்பழகனும் இந்த விவகாரத்தை அதோடு விடவில்லை. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு, எம்.ஆர்.சி நகரிலுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டுக்கே நேரடியாகச் சென்றனர். உள்ளே ரெய்டு நடைபெற்றதால், வீட்டுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. வாசலுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் வந்ததும், அவருக்கு நேரில் கட்சி ஆதரவு இருப்பதை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, ஜூலை 22-ம் தேதி மாலை கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய சி.வி.சண்முகம், `இந்த நேரத்துல வெறும் கண்டன அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டு அமைதியாகிட்டா, கட்சித் தொண்டன் சோர்ந்து போயிடுவான். நீங்க போராட்டம் நடத்துற அறிவிப்பை வெளியிடலைன்னா, விழுப்புரம் மாவட்டச் செயலாளரான நானே தன்னிச்சையா என் மாவட்டத்துல கண்டனப் போராட்டம் நடத்துவேன். அதுக்கப்புறம் நீங்க கோவிச்சுக்கக் கூடாது’ என்று `கட் அண்ட் ரைட்’டாகச் சொல்லிவிட்டாராம். இதே தகவல் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சொல்லப்பட்டது. போராட்டத்துக்கு அவரும் இசைவு தெரிவித்தார்.

`பா.ஜ.க உடனான கூட்டணியே, அ.தி.மு.க தோல்விக்குக் காரணம்!'  - சி.வி.சண்முகம் அதிரடி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடையில் புகுந்த சில முன்னாள் அமைச்சர்கள், `கொரோனா நேரத்துல தேவையில்லாம ஏன் கூட்டத்தைக் கூட்டிகிட்டு. பேசாம ஒவ்வொருத்தர் வீட்டு வாசல்ல இருந்தபடியே கண்டன முழக்கங்களை எழுப்புவோம்’ என்று கழகத் தலைமையை மீண்டும் குழப்பினர். 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதை அந்த முன்னாள் அமைச்சர்கள் காரணமாக முன்வைத்தனர். வேறு வழியில்லாமல், அவர்கள் கொடுத்த திட்டத்துக்கு கட்சித் தலைமை ஒப்புதல் வழங்கியுள்ளது. `பெகாசஸ்’ மென்பொருள் மூலமாக காங்கிரஸ் தலைவர்களின் டெலிபோன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்திருக்கும் புகாரில் நீதி விசாரணை வேண்டி, இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. தமிழகத்திலும் ஒவ்வொரு மாவட்ட கமிட்டிவாரியாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அதுபோல, அ.தி.மு.க-வும் செய்தால்தான் கட்சித் தொண்டர்களிடம் எழுச்சியிருக்கும். வீட்டிலிருந்தபடியே போராடுங்கள் என்று அ.தி.மு.க தலைமை அறிவித்திருப்பதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை” என்று நொந்துகொண்டனர் சில அதிமுக-வினர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நேரில் ஆதரவளித்த முன்னாள் அமைச்சர்கள்
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நேரில் ஆதரவளித்த முன்னாள் அமைச்சர்கள்

தி.மு.க-வின் இந்த ரெய்டு ஆக்‌ஷனால், அ.தி.மு.க-வுக்குள்ளேயே இரண்டு பிரிவுகள் உருவாகியிருக்கின்றன. தி.மு.க-வைத் தீவிரமாக எதிர்க்க வேண்டுமென்ற ஒரு கோஷ்டியும், தி.மு.க-வை ஏன் தேவையில்லாமல் கோபப்படுத்த வேண்டுமென்ற ஒரு கோஷ்டியும் முளைத்திருக்கின்றன. கட்சித் தலைமையே இரண்டு கோஷ்டிகளாகச் செயல்படும் நேரத்தில், தி.மு.க-வை வைத்து கோஷ்டிகள் உருவாகியிருப்பது அ.தி.மு.க-வை மேலும் கலகலக்கவைத்திருக்கிறது. வரும் புதன்கிழமை அ.தி.மு.க அறிவித்திருக்கும் போராட்டத்தில் என்னென்ன காட்சிகள் அரங்கேறப் போகின்றன என்பதை வைத்துத்தான், இந்த இரண்டு கோஷ்டிகளுக்கு இடையேயான பிரச்னைகள் விவகாரமாகும் என்கிறது அ.தி.மு.க வட்டாரம். பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு