Published:Updated:

`அ.தி.மு.க-வில் இணைகிறேன்!' - தினகரனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் முன்னாள் அமைச்சர் பச்சைமால்

நான் அ.தி.மு.க-வில் இணைய உள்ளது உண்மைதான். தினகரன் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. தாய் கழகத்தில் இணைகிறேன்.

டி.டி.வி. தினகரன்
டி.டி.வி. தினகரன்

அ.தி.மு.க-வில் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் வனத்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தவர் பச்சைமால். கடந்த சட்டசபை தேர்தலில் குளச்சல் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக களம் இறங்கிய பச்சைமால், தோல்வியைத் தழுவினார். அதன் பிறகும் அ.தி.மு.க-வில் தொடர்ந்து செயல்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் அணியில் ஐக்கியமானார். இப்போது அ.ம.மு.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்துவருகிறார்.

அ.தி.மு.க-வில் சேர உள்ள பச்சைமால்
அ.தி.மு.க-வில் சேர உள்ள பச்சைமால்

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கடந்த சட்டசபை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பச்சைமால் அ.ம.மு.க-வுக்குச் சென்றபோது நாஞ்சில் முருகேசனும் அ.ம.மு.க-வில் இணைந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் பச்சைமால் வீட்டுக்கும், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் வீட்டுக்கும் சென்ற கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஏ.அசோகன் அவர்களை அ.தி.மு.க-வில் சேரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன்
முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன்

அப்போது அ.தி.மு.க-வில் சேரும் எண்ணம் இல்லை எனவும், தொடர்ந்து அ.ம.மு.க-வில் செயல்படுவோம் என பச்சைமாலும், நாஞ்சில் முருகேசனும் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி அறிவித்தனர். இந்த நிலையில் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் உள்ளிட்டோர் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பச்சைமாலுடன் நாஞ்சில் முருகேசனும் அ.தி.மு.க-வில் இணைகிறார். அதுமட்டுமல்லாது கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் அழைத்துச் சென்று அ.தி.மு.க-வில் இணைக்க உள்ளார்.

Vikatan

இதுகுறித்து பச்சைமாலிடம் கேட்டதற்கு, ``நான் அ.தி.மு.க-வில் இணைய உள்ளது உண்மைதான். தினகரன் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. தாய் கழகத்தில் இணைகிறேன். என்னுடன் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகளும் சென்னை வந்து அ.தி.மு.க-வில் இணைகிறார்கள்" என்றார். அ.தி.மு.க-வில் சேரும் தகவலை முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனும் உறுதி செய்தார்.

டி.டி.வி. தினகரன்
டி.டி.வி. தினகரன்

பச்சைமால் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு அ.தி.மு.க-வில் இணைய உள்ளது டி.டி.வி.தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க செயலாளர் ஜெங்கின்ஸ் தொடர்ந்து அ.ம.மு.க-விலே இருப்பதாகத் தெரிவித்தார்.