Published:Updated:

`தெரிந்தே இப்படி பேசியிருக்கிறார்!' - ஆர்.எஸ்.பாரதி விவகாரத்தில் கொதிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன் ( என்.ஜி.மணிகண்டன் )

`அதைப் பெரிதுபடுத்தக்கூடாது என்ற போதிலும், அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் நஞ்சு பூசப்பட்ட அம்பு எய்ததற்குச் சமம்'.

``மு.க.ஸ்டாலின் அனுமதி இல்லாமல் தி.மு.க நிர்வாகிகள் யாரும் பேச முடியாது என்பதால், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு, ஸ்டாலின் பேசியதாகத்தான்இருக்க முடியும்'' என்று மதுரை வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டிப் பேசினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

செய்தியாளர்களிடம் பேசியவர், ``தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில், அதைப் பெரிதுபடுத்தக் கூடாது என்ற போதிலும், அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் நஞ்சு பூசப்பட்ட அம்பு எய்ததற்குச் சமம்.

அதேநேரம், ஹெச்.ராஜாவைப் பற்றி இழிவாகப் பேசியதற்கு ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவிக்கவில்லை. தெரிந்தே அவர் அப்படிப் பேசியதைக் கண்டிக்கிறோம். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தகுதிக்கு அருகதையற்றவர். `பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக வந்ததற்கு நாங்கள் போட்ட பிச்சைதான் காரணம்' என்று அவர் கூறியதை யாரும் ஏற்க மாட்டார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

தி.க, தி.மு.க இல்லையென்றால், இலைகளை உடுத்தி ஆதிவாசிகள்போல தமிழர்கள் இருந்திருப்பார்கள் என்பது போல கூறியுள்ளார். தி.மு.க-வினர் எப்போதும் இப்படித்தான் சலுகைகளை வழங்கிவிட்டு பிச்சை போட்டதாகக் கூறுவார்கள்.

``ஜெயலலிதாவையே உள்ளே வச்சவன் நான்... எதுக்கும் பயப்பட மாட்டேன்!'' - ஆர்.எஸ்.பாரதி

அமைதியாக உள்ள இஸ்லாமிய மக்களிடம் தி.மு.க குழப்பத்தை ஏற்படுத்தி, தூண்டிவிட்டு போராட்டம் நடத்தவைக்கிறது. இந்து மக்களை ஏமாற்றுவதற்காக தி.மு.க-வினர் சிலர் கயிற்றைக் கட்டிக்கொண்டு திரிகின்றனர். தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குச் சென்றால், ஆயிரக்கணக்கில் ஐயருக்கு வழங்குவோம் எனக் கூறியுள்ளார். தி.மு.க-வினர் தங்களது பாவத்தைப் போக்க ஐயருக்கு பணம் வழங்கிவருகின்றனர்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

ஊடகத்தினரை இழிவாகப் பேசியதற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஆர்.எஸ்.பாரதி, ஊடகத்தினரைப் பற்றி பேசியது பற்றி அவர்களுக்கு ஆதரவான டி.வி-யில் விவாதம் நடத்துவார்களா? பதவியைத் தக்கவைப்பதற்காக ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்டுள்ளார். பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார், ஆர்.எஸ்.பாரதி.

ஆர்.எஸ். பாரதியை கி.வீரமணி ஏன் கண்டிக்கவில்லை. பட்டியலினத்தவர்கள் எப்போதும் எங்கள் ரத்தம். ஓட்டுப் பிச்சை எடுத்து ஆட்சிக்கு வந்த திமிரின் காரணமாக தி.மு.க-வினர் இப்படிப் பேசிவருகின்றனர்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு