Published:Updated:

`பிரச்னை ஆக்குவார்கள் என்று நினைத்தேன்; நடந்துவிட்டது!' - ரஜினி பேச்சு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்

பொன் ராதாகிருஷ்ணன்
பொன் ராதாகிருஷ்ணன்

``துக்ளக் விழாவில் ரஜினி பேசுகையில் இரண்டு, மூன்று இடங்களில் அவர் பேசியதை சர்ச்சை ஆக்குவார்கள் என எதிர்பார்த்தேன். அதேபோல பிரச்னை ஆக்கியிருக்கிறார்கள்” என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, `பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கு ஏராளமாகச் செய்துள்ளார்' என இரண்டுமுறை கூறியுள்ளார். இதை, `பொய்' என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள் என நினைக்கிறேன். அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ஜ.க வெளியேறும் சிந்தனையில் இல்லை.

பொன். ராதாகிருஷ்ணன்
பொன். ராதாகிருஷ்ணன்

ஒருவேளை கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியே போகிறதா என்பதைப் பற்றியும் சொல்ல முடியவில்லை. தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டு 37 யூனியன் கவுன்சிலர்கள், 2 யூனியன் சேர்மன்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இந்தமுறை 84 யூனியன் கவுன்சிலர்கள், 3 யூனியன் சேர்மன்கள், 7 மாவட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். பல கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம்.

எந்தக் கட்சியும் தங்களது சொந்த பலத்தில் நிற்கதான் முயற்சி செய்யும். இதில் எந்தத் தவறுமில்லை. பா.ஜ.க-வும் வரும் 2021 சட்டசபைத் தேர்தலில் பலத்துடன் இருக்கத்தான் வேலை செய்கிறோம். தற்போது கட்சி பலமாக உள்ளது. தேர்தலில் பா.ஜ.க கூட்டணியோடு போட்டியிடும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலைக்கு தற்போது உயர்ந்து நிற்கிறோம்.

பொன். ராதாகிருஷ்ணன்
பொன். ராதாகிருஷ்ணன்

துக்ளக் விழாவில் ரஜினி பேசியதை சர்ச்சை ஆக்கியிருப்பது தேவையில்லாத விவாதம். அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன். இரண்டு அல்லது மூன்று இடங்களில் அவர் பேசியதை சர்ச்சை ஆக்குவார்கள் என எதிர்பார்த்தேன். அதே போலவே பிரச்னை ஆக்கியிருக்கிறார்கள். நானும் அவர் பேசியதை, யூடியூப்பில் நான்குமுறை கேட்டேன்.

எந்த ஓர் இடத்திலும் பெரியார் குறித்து, கேவலமாக ஒரு வார்த்தைகூட அவர் தப்பாக பேசியதாகத் தெரியவில்லை. ரஜினியைச் சுற்றிதான் அரசியல் நடத்த வேண்டும் என பல பேர், பல இயக்கங்கள் ஆளாகியிருக்கிறார்கள். இதற்கு ரஜினியும் ஒன்றும் செய்ய முடியாது. துக்ளக் விழாவில் துக்ளக் பற்றி உயர்வாகப் பேசாமல் வேறு யாரைப் பற்றி பேச முடியும். ரஜினியைப் பொய்யான தலைவராக சித்திரிக்க முயன்றார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

ஆனால், அதில் அவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்டது குறித்து எந்தக் கட்சியும் குரல் எழுப்பாதது ஏன்? இதுகுறித்து தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியான தி.மு.க ஏன் கேள்வி கேட்கவில்லை? வில்சன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கன்னியாகுமரியில் நடந்த சர்வக் கட்சி கூட்டத்தில் எந்தக் கட்சியும் அவரைப் பற்றி பேசவில்லை. வில்சனை மட்டும் ஒதுக்கித் தள்ளிவிட்டு மற்றதைப் பேசுகிறார்கள். இதற்குப் பின்னணி என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பின் செல்ல