Published:Updated:

தஞ்சாவூர்: `விதிமுறைகளை மீறி இரவு 7 மணிக்கு மேல் நிகழ்ச்சி!’ - சர்ச்சையில் வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அரசின் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரவு 7 மணிக்கு மேல் ஊர்ப் பொது இடத்தில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சாவூரில் கொரோனா லாக்டெளன் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அதை மீறி `மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா’ என்ற பெயரில் கட்சி நிகச்சிகளை நடத்திவருவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

அ.தி.மு.க நிகழ்ச்சியில் வைத்திலிங்கம்
அ.தி.மு.க நிகழ்ச்சியில் வைத்திலிங்கம்

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஊரடங்கு விதிகளை மீறி, கட்சி நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். அ.ம.மு.க உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து பல்வேறு நபர்கள் விலகி அ.தி.மு.க-வில் இணைவதை, `மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா’ என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார்.

இதில், கொரோனா பரவுதலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படுவதிவில்லை. இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கின்றனர். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக தஞ்சை மாவட்டத்தில் 7 மணிக்கு மேல் அனைத்துக் கடைகளும் அடைக்கப்படுகின்றன. ஒரு சிலர் கடைகளை அடைக்காமல் செயல்பட்டால், போலீஸார் வந்து உடனடியாகக் கடைகளை அடைக்க வலியுறுத்திவருகின்றனர். இதற்காக, சில சமயங்களில் கடுமையாகவும் நடந்துகொள்கின்றனர்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

` `ஊருக்குத்தான் ஊரடங்கு நடைமுறை பொருந்தும்; எங்களுக்கு இல்லை’ என்கிற வகையில் அ.தி.மு.க தலைமைப் பொறுப்பில் இருக்கும் வைத்திலிங்கம் அரசின் ஊரடங்கை மீறி இரவு 7 மணிக்குமேல் ஊர்ப் பொது இடத்தில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். இது எந்தவிதத்தில் நியாயம்?’ என அப்பகுதியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து அந்தப் பகுதியில் விசாரித்தோம். ``முன்னாள் அமைச்சரும், நால்வர் அணியில் ஒருவரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்றவருமான வைத்திலிங்கம், கடந்த சட்டமன்றத் தேர்தலில், தன் சொந்தத் தொகுதியான ஒரத்தநாட்டில் தி.மு.க வேட்பாளர் ராமச்சந்திரனிடம் தோல்வியடைந்தார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

இது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. குறிப்பாக, கடந்த பல மாதங்களாக கட்சிப் பணிகளில் ஆர்வம்காட்டாமல் அதிருப்தியில் இருப்பதாக வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் சிலரே வெளிப்படையாகப் பேசிவந்தனர். `கொரோனா லாக்டெளன் அமலில் இருப்பதால், வெளியே எங்கும் தலைகாட்டுவதில்லை’ என அவருக்கு நெருக்கமான சிலர் அதற்குக் காரணம் கூறிவந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மீண்டும் கட்சிப் பணிகளில் ஆர்வம்காட்டத் தொடங்கியிருக்கிறார். விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், `இந்த முறை ஒரத்தநாடு தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்றுவிட வேண்டும்’ என இப்போதே அதற்கான பணிகளில் இறங்கி முனைப்பு காட்டிவருகிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

அ.தி.மு.க: `அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் வைத்திலிங்கம்!’ - உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

அதன் முதற்கட்டமாக ஒரத்தநாடு தொகுதியிலுள்ள ஊராட்சிகளில் தி.மு.க அதிக வாக்குகளைப் பெற்ற ஊராட்சிகள் குறித்த விவரங்களை சர்வே எடுத்துள்ளார். மேலும், அந்தப் பகுதிகளை அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக மாற்றும் செயல்களை செய்யத் தொடங்கியுள்ளார். குறிப்பிட்ட அந்தப் பகுதிகளில் அ.தி.மு.க-விலிருந்து அ.ம.மு.க-வுக்குச் சென்ற நபர்கள், மாற்று கட்சியை சேர்ந்தவர்களை அ.தி.மு.க-வில் இணைக்கும் முயற்சி நடக்கிறது.

அதன்படி நேற்று இரவு துலுக்கம்பட்டி, வல்லுண்டாம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்ற வைத்திலிங்கம் மாற்று கட்சியினர் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் பெண்கள் கோலாட்டம், தப்பாட்டம் நிகழ்ச்சிகள் நடத்தி, பட்டாசு வெடித்து, வைத்திலிங்கத்துக்குப் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.

மாற்று கட்சியினர் இணையும் விழா
மாற்று கட்சியினர் இணையும் விழா

அப்போது பேசிய வைத்திலிங்கம், `உங்க ஊருக்கு என்ன தேவை... அதற்கான கோரிக்கைகளைக் கூறுங்கள். என்னால் முடிந்த அளவில், அதை நிறைவேற்றித் தருகிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னை தனிப்பட்ட முறையில் சந்திக்கலாம். என்ன உதவிகள் வேண்டுமானாலும் கேட்கலாம்’’ எனக் கூறி மரியாதை செலுத்தும்விதமாக, வேட்டி போர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிவரும் நிலையில், ஆளும்கட்சியைச் சேர்ந்த வைத்திலிங்கம் இதை கவனத்தில் கொள்ளாமல் பொது இடத்தில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்திவருவதாக குற்றம் சாட்டினர் சிலர்.

`சறுக்கிய ஆல் இன் ஆல்; வருத்தத்தில் வைத்திலிங்கம்!' - புலம்பும் தஞ்சை அ.தி.மு.கவினர்

வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம். ``லாக்டெளன் விதிமுறைகளைக் கடைபிடித்து, போதுமான சமூக இடைவெளியுடன் இந்த நிகழ்ச்சிகளை வைத்திலிங்கம் நடத்திவருகிறார். ஓர் ஊரில் மட்டும் நிர்வாகி ஒருவர் விமரிசையாக வரவேற்பு கொடுத்தார். `இந்த நேரத்தில், இதைச் செய்யக் கூடாது’ என அதைத் தடுத்துவிட்டார். எதிர்க்கட்சிகள் இதைப் பெரிதுபடுத்துகின்றன’’ என்பதோடு முடித்துக் கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு