Published:Updated:

`நடிகர் விஜய் விளம்பரத்துக்காகப் பேசுகிறார்!' - வெடிக்கும் பா.வளர்மதி

'பிகில்' படப் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறிய கருத்து, சமூக வலைதளங்களையும் தாண்டி, அரசியல் அரங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பா.வளர்மதி
பா.வளர்மதி

நடிகர் விஜய், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியிருக்கும் `பிகில்’ படப் பாடல் வெளியீட்டு விழா நேற்று சோமங்கலத்திலுள்ள தனியார்ப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. ஆரவார ரசிகர் பட்டாளத்துக்கு இடையே மேடையேறிய நடிகர் விஜய், சுபஶ்ரீ மரணம் முதற்கொண்டு, தன் ரசிகர்கள் மீதான அடக்குமுறை வரையில் வெடித்துப் பேசியதுதான் அரசியல் அரங்கில் ‘ஹாட் டாபிக்’காக மாறியிருக்கிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

பாடல் வெளியீட்டு விழாவில் திருக்குறளுடன் தன் பேச்சைத் தொடங்கிய நடிகர் விஜய், பேனர் விழுந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சுபஶ்ரீ பற்றிப் பேசியபோது குரல் தழுதழுத்துவிட்டாராம். ``பேனர் விழுந்ததுல சுபஶ்ரீங்கற ஒரு சகோதரி உயிரிழந்துட்டாங்க. இதுக்கு யார் காரணமோ, அவங்களை விட்டுட்டு, லாரி டிரைவரைக் கைது பண்றாங்க. பேனர் பிரின்ட் பண்ண பிரின்டர்ஸ்க்கு சீல் வைக்குறாங்க. சம்பந்தப்பட்ட முன்னாள் கவுன்சிலரை ஏன் கைதுசெய்ய முடியல? சட்டம் நியாயத்தைச் செய்யணும்.

அனுமதி வாங்கி என் ரசிகர்கள் வைக்குற பேனர்களைச் சில பேர் கிழிக்குறாங்க. கஷ்டப்பட்டு வைக்குற பேனர்களைக் கிழிக்கும்போது என் ரசிகர்களுக்குக் கோபம் வர்றது நியாயம்தான். நீங்க என் போட்டோவ கிழிங்க, உடைங்க.... என்னவேணாலும் பண்ணுங்க. ஆனா, என் ரசிகர்கள் மேல மட்டும் கைவைக்காதீங்க. வச்சா….” என விஜய் ஒரு நொடி தன் பேச்சை நிறுத்தவும், ஒட்டுமொத்த அரங்கமும் ஆர்ப்பரித்தது.

தங்கள் படம் வெளியாகும்போதெல்லாம், சர்ச்சையாகப் பேசி விளம்பரம் தேடுவது நடிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது.
பா.வளர்மதி

விஜய்யின் இந்தப் பேச்சுதான் சமூக வலைதளங்களையும் தாண்டி, அரசியல் அரங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பேனர் விவகாரத்தில் ஆளும்கட்சியை நடிகர் விஜய் நேரடியாகத் தாக்கியிருப்பதாகச் செய்திச் சேனல்களில் விவாதங்கள் தூள் பறக்கின்றன. இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதியிடம் பேசினோம்.

``தங்கள் படம் வெளியாகும் போதெல்லாம், சர்ச்சையாகப் பேசி விளம்பரம் தேடுவது நடிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது. சுபஶ்ரீ இறந்தது அனைவருக்கும் வருத்தமான விஷயம். சம்பந்தப்பட்ட முன்னாள் கவுன்சிலர்மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில் அரசியல் செய்வதற்கு என்ன இருக்கிறது? ஆளுங்கட்சியை விமர்சித்தால் விளம்பரம் தேடிக்கொள்ளலாம் என்பதால் நடிகர் விஜய் இவ்விவகாரத்தில் தேவையற்ற கருத்துகளைப் பேசுகிறார்.

பா.வளர்மதி
பா.வளர்மதி

இதே பேனரை எதிர்க்கட்சியினர் வைத்திருந்து, விபத்து நேர்ந்திருந்தால், விஜய் இப்படிப் பேசியிருப்பாரா? ஆளுங்கட்சியை விமர்சிப்பதன் மூலம் தன் படத்துக்கு விஜய் விளம்பரம் தேடிக்,கொள்கிறார். இதில் அரசியல் செய்வது நல்லதல்ல” என்று சூடாக முடித்துக்கொண்டார்.

விஜய் நற்பணி மன்ற நிர்வாகிகளோ, ``இதில் அரசியல் செய்வதற்கு என்ன இருக்கிறது? ஒருபெண் கொல்லப்பட்டு இத்தனை நாள்கள் ஆகியும், பேனர் வைத்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை போலீஸால் கைதுசெய்ய முடியவில்லை.

 `லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுறாங்க!' - சுபஸ்ரீ விவகாரம் குறித்து விஜய்

இதைக் கேள்விகேட்டால் விளம்பரம் தேடுவதாகக் கொச்சைப்படுத்துவதா?” எனக் கொதித்தனர்.