Published:Updated:

`ரேஷன் அரிசியைத் திருடி கொரோனா நிவாரணம்!’ - நெல்லை அ.தி.மு.க-வினர் மீது அப்பாவு புகார்

ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த அப்பாவு
ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த அப்பாவு

தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசியைத் திருடும் அ.தி.மு.க-வினர் அதைப் பட்டை தீட்டி கொரோனா நிவாரணமாக மக்களுக்கு வழங்குவதாக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். இந்த நூதன மோசடி மூலம் 1,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு, இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள அ.தி.மு.க-வினர் ரேஷன் கடைகளில் உள்ள அரிசியை முறைகேடாகக் கைப்பற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அ.தி.மு.க-வினர் வழங்கும் ரேஷன் அரிசியைக் காட்டும் அப்பாவு
அ.தி.மு.க-வினர் வழங்கும் ரேஷன் அரிசியைக் காட்டும் அப்பாவு

நெல்லை  மாவட்டம் நாங்குநேரி, ராதாபுரம் மற்றும்  திசையன்விளை தாலுகாவுக்கான வேளாண்மை விற்பனை கூட்டுறவு சங்கத்தில் இத்தகைய முறைகேடு நடப்பதாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ரூ.10,000 கோடிக்கு 'பில்' - ரேஷன் முறைகேடு புகாருக்கு இ.பி.எஸ் மெளனம் ஏன்?

அப்பாவு அளித்த புகாரில், `வள்ளியூரில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ராதாபுரம் ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் முருகேசன் என்பவர் உள்ளார். அந்தச் சங்கத்தின் மூலம் 183 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.  

`டூ வீலரில் ரேஷன் கடை விசிட்; ஸ்பாட்டிலே சஸ்பெண்டு!’ - அதிரடி காட்டிய அமைச்சர் செல்லூர் ராஜு

கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுவிநியோகக் கடைகள் மூலம் பொதுமக்களுக்குக் கூடுதலாக ஐந்து கிலோ அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காகக் கூடுதலாக வந்துள்ள அரிசியை வள்ளியூர் சிவில் சப்பளை குடோனிலிருந்து கடத்திச் சென்று ஒரு ஆலையில் பட்டை தீட்டுகிறார்கள்.

ரேஷன் கடையிலிருந்து கடத்திச் சென்று பட்டை தீட்டிய அரிசியை ஆளுங்கட்சியைச் சேர்ந்த ராதாபுரம் எம்.எல்.ஏ-வான இன்பதுரை மற்றும் வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் முருகேசன் ஆகியோர் தனிப் பையில் அடைத்து தாங்களே சொந்தச் செலவில் நிவாரணம் கொடுப்பது போல விநியோகிக்கிறார்கள். 

அப்பாவு
அப்பாவு

தூத்துக்குடி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு போலீஸார், பட்டை தீட்டப்படும் ஆலையில் சோதனையிட்டு 420 மூட்டை ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், உண்மைக் குற்றவாளிகள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிட்டு ஆலை உரிமையாளர், ஓட்டுநர் உள்ளிட்டோரைக் கைது செய்துள்ளனர்.

ரேஷன் அரிசி கடத்தலுக்குக் காரணமாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, கூட்டுறவு சங்கத் தலைவர் முருகேசன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். 

அப்பாவு
அப்பாவு

தமிழகம் முழுவதும் இத்தகைய மோசடி மூலம் 1200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதவி விலக வேண்டும். இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தப்படாவிட்டால் நீதிமன்ற உதவியுடன் சி.பி.ஐ விசாரணை கேட்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராதாபுரம் எம்.எல்.ஏ-வான இன்பதுரையிடம் கேட்டதற்கு, ``அப்பாவு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய்யாக புகார் கொடுத்திருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்பாக கண்ணநல்லூரில் அப்பாவு பேரன் பிரேம் என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தார்கள். அதனால் அவரது பேரன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ததுடன் வருவாய்த் துறையினர் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து விட்டார்கள். அதனால் அவர் ஆத்திரத்தில் இருக்கிறார்.

இதற்கிடையே, அப்பாவு குடியிருக்கும் வீட்டின் பின்பகுதியில் நீரோடையை மறித்து மதில் சுவர் கட்டிவிட்டார். மதுரை உயர்நீதிமன்ற ஆணைப்படி அந்த ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கி விட்டதாகத் தெரிகிறது. இந்த இரு சம்பவங்களிலும் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் தேவையில்லாமல் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கிறார்.

இன்பதுரை எம்.எல்.ஏ
இன்பதுரை எம்.எல்.ஏ

ரேஷன் அரிசி கடத்தலை பிடித்திருப்பதே எங்கள் ஆட்சியின் அதிகாரிகள் தானே? அரிசி கடத்தியதாக கைதான முக்கிய குற்றவாளியான சுயம்புலிங்கம் என்பவர் அவருடைய ஆதரவாளர். சுயம்புலிங்கத்தின் மைத்துனர் திருப்பதி என்பவர் திசையன்விளை பேரூராட்சி வார்டு தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட மனுசெய்தவர். இந்த விவரங்களை எல்லாம் ராதாபுரம் தொகுதி மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். போலீஸ் விசாரணைக்குப் பின் முழு உண்மையும் விரைவில் வெளிவரும்" என்று முடித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு