Published:Updated:

அண்ணா போட்டுக்கொடுத்த சூத்திரம்..!

அறிஞர் அண்ணா
பிரீமியம் ஸ்டோரி
அறிஞர் அண்ணா

இன்றைய அரசியல் கூட்டணிகளுக்கு, இக்கட்டுரையின் கடைசி வரிகள் சாட்டையடி.!

அண்ணா போட்டுக்கொடுத்த சூத்திரம்..!

இன்றைய அரசியல் கூட்டணிகளுக்கு, இக்கட்டுரையின் கடைசி வரிகள் சாட்டையடி.!

Published:Updated:
அறிஞர் அண்ணா
பிரீமியம் ஸ்டோரி
அறிஞர் அண்ணா

பெரியோர்களே... தாய்மார்களே! - 75‘‘

என் வீட்டில் ஒரு திருடன் திடீரென புகுந்துவிட்டால், அவனை அடிக்க எந்தத்தடி அகப்பட்டாலும் அதை எடுத்து அடிப்பேன். அப்போது சுதந்திரா தடியென்றோ, கம்யூனிஸ்ட் தடியென்றோ பார்க்க மாட்டேன். எல்லாத் தடிகளையும் உபயோகிப்பேன்.

காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக மற்ற கட்சிகளுடன் உடன்பாடு செய்து கொள்வது தவறாகாது. கொள்கையில் பற்றும், லட்சியத்தில் வலுவும் இருப்பவர்கள் யாருடன் சேர்ந்தாலும் அழிந்துவிட மாட்டார்கள். இதில் எனக்குத் துணிவும் நம்பிக்கையும் இருந்து வருகிறது'' - இது அண்ணா சொன்னது.

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

அவர் முதன்முதலாகக் கூட்டணிக் குழம்பு வைத்தபோது சொன்னது.‘‘காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே ஒரு லட்சியத்துடன் யாரும் எங்களோடு வரலாம், அவர்கள் எங்களோடு உடன்பாடான கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம், எதிர் கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம்’’ என்று அண்ணா அன்று போட்டுக்கொடுத்த சூத்திரம்தான் இன்று வரை நடைமுறையில் இருக்கிறது.திராவிட தேசியம் பேசிய அண்ணாவின் தலைமையை தமிழ்த் தேசியம் பேசிய ம.பொ.சி-யும் ஏற்றுக்கொண்டார். நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனாரும் ஏற்றுக்கொண்டார். ‘‘திராவிட நாட்டைக் கைவிட்டு விட்டு மாநில சுயாட்சிக் கோரிக்கையின் பக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் வந்துவிட்டது. எங்களுக்குள் ஏற்பட்ட உறவானது தொகுதி உடன்பாட்டை ஒட்டியது மட்டுமல்ல, கொள்கை உடன்பாட்டையும் ஒட்டியதாகும்'' என்றார் ம.பொ.சி. திராவிடன், தமிழன் என்று பேசுவதே இனவாதம் என்று சொல்லக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கூட்டணியில் இருந்தது. ‘‘என்னுடைய முதல் எதிரி கம்யூனிஸ்ட் கட்சிதான்'' என்று சொல்லிக்கொண்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் இதே அணியில் இருந்தது. வகுப்புவாதத்தை எதிர்க்கக்கூடிய கட்சிகள் இருந்த இந்தக் கூட்டணியில் முஸ்லிம் லீக்கும் இருந்தது. பொருந்தாப் பாத்திரங்கள் அனைத்தையும் வைத்து சமையல் செய்த அண்ணா, இதற்கு கூட்டணி என்று பெயர் வைக்காமல் ‘கூட்டுறவு' என்று சொல்லிக்கொண்டார்.

1967 தேர்தலுக்கு முன்னதாக விருகம்பாக்கத்தில் நடந்த மாநாட்டில் பேசிய அண்ணா, ‘‘இப்போது நம்மை எதிர் நோக்கியிருக்கின்ற பிரச்னை காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டும். நல்லதோர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்'' என்பதே என்றார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ராஜாஜி, ‘‘நான் வந்தது வாழ்த்துக் கூறுவதற்குத்தான். இங்கே இப்படி எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரும் கூறியிருப்பது சாதாரணமானதல்ல. சரித்திரத்திலேயே பதிய வேண்டிய ஒன்றாகும். பதிந்தாக வேண்டும். சந்தேகம் இல்லை'' என்று பேசினார். ‘‘பட்டத்து யானையாக வலம் வந்த காங்கிரஸ் கட்சிக்கு, காலில் புண் வந்துவிட்டது. இனி, அதை வங்கக் கடலில் வீச வேண்டியது தான்'' என்று பேசினார் காயிதே மில்லத். ‘‘நான் அடிக்கடி மரணப்படுக்கையில் வீழ்ந்தவன். தமிழ்ப்பற்று, இனப்பற்று இல்லாதவர்களிடமிருந்து இன்பத்தமிழ் வழங்கும் நல்லவர்களிடம் இந்த நாடு செல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார் ம.பொ.சி. இப்படி அனைவரது இலக்கும் காங்கிரஸின் கருத்து என்று மாற்றினார் அண்ணா.

‘‘வேண்டாம் எனக்கு வயதாகிவிட்டது. என்னை விட்டுவிடும்படி அண்ணாவிடம் சொல்லுங்கள்'' என்று சொல்லிவிட்டு வந்தார் ம.பொ.சி. ‘‘அப்படி அமைச்சராக வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் கல்வி அமைச்சர் ஆகுங்கள்'' என்று ராஜாஜி சொன்னபோது மறுத்தார் ம.பொ.சி.கூட்டுச் சேர்ந்தவருக்கும், கூட்டுச் சேர்த்தவர்களுக்கும் காங்கிரஸை வீழ்த்துவது ஒன்றே நோக்கமாக இருந்தது. 1967 தேர்தல் வெற்றிக்கு இதுதான் காரணம்.

ஆனால், இன்று எந்தக் கூட்டணிக்கும் எந்தக் கொள்கையும் இல்லை. ஜனநாயக கூட்டணி, முற்போக்குக் கூட்டணி, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி, மக்கள் கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி என்று எந்தப் பெயரை வைத்துக்கொண்டாலும் ‘சமைக்கும் கூட்டணிக் குழம்பு’ ஊசிப் போனதாகவே இருக்கிறது. 60 ஆண்டுகாலம் பாரம்பர்யமும் ஐந்துமுறை முதலமைச்சர் பதவியிலும் வகித்த கருணாநிதி, விஜயகாந்த்தைப் பிடித்துத் தொங்கக் காரணம் என்ன கோட்பாடு? நான்கைந்து சதவிகித வாக்குகளைச் சேர்த்துக்கொள்வதைத் தவிர என்ன கொள்கைப் புடலங்காய்?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சுதந்திரா கட்சியும்தான் முரண்பட்டு நின்றன. இரண்டையும் தனது கூட்டுறவுக்குள் கொண்டு வந்துவிட்ட அண்ணா, ஒரு விநோதமான வாசலையும் அவர்களுக்கு அமைத்துக் கொடுத்தார். ‘‘நமக்குள் தொகுதிகளைப் பிரித்துக்கொள்வோம். ஒருவேளை, சுதந்திரா கட்சி போட்டியிடும் இடத்தில் எதிர்த்துப் போட்டியிட நீங்கள் விரும்பினால் போட்டியிடலாம்'' என்று மார்க்சிஸ்ட்களுக்குச் சொன்னார்.

இதைப்போல குழப்பம் தரத்தக்கது எதுவும் இல்லை என்றாலும் இரண்டு கட்சிகளும் எப்படியாவது நம்மோடு இருந்தால் போதும் என்று நினைத்தார். காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டு சிதறிவிடக்கூடாது என்பதிலேயே அண்ணா குறியாக இருந்தார். விருகம்பாக்கம் மாநாட்டில் பேசிய அண்ணா, ‘‘சிலபேர் என் அழைப்பைக் கேட்டதும் வந்தார்கள். சில பேர் உரக்கக் கூப்பிட்டும் வரவில்லை. அவர் காதுக்குக் கேட்கும்படியாக அதற்கு மேல் உரக்கப் பேச என்னால் முடியவில்லை. தேன் குடத்திலே இருந்த தேனையெல்லாம் என்னால் முடிந்தவரை மிச்சமில்லாமல் எடுத்துப் பிழிந்துவிட்டேன். குடத்தில் சில துளித் தேன் ஒட்டிக்கொண்டிருக்கிறது. என்னால் முடிந்தவரை முயன்று பார்த்து முடியாமல் போய், ‘சரி ஈயும் எறும்பும் சப்பிக்கொள்ளட்டும்' என்று விட்டுவிட்டேன்'' என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார். தியாகராயர் நகர், திருத்தணி ஆகிய இரண்டு தொகுதிகளைக் கேட்டார் ம.பொ.சி. தியாகராயர் நகர் தொகுதிக்கு தி.மு.க-விலேயே கடுமையான போட்டி இருந்தது. நடிகமணி டி.வி.நாராயணசாமி, சடகோபன், முன்னாள் மேயர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய பெருந்தலைகள் மோதின. எல்லைப் போராட்டக் காலத்தில் இருந்து ம.பொ.சி-க்கும் அண்ணாவுக்கும் நட்பு அதிகம் ஆகி இருந்தது. தியாகராயர் நகரை இம்மூவர் விட்டுத்தராவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த அண்ணா, சைதாப்பேட்டை தொகுதியை ம.பொ.சிக்குத் தர நினைத்தார். சைதையில் அப்போது கலைஞர் கருணாநிதி போட்டியிடுவதாக இருந்தது. தான் போட்டியிட இருந்த தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியை கருணாநிதிக்குக் கொடுத்துவிட்டு, தேர்தலில் தான் போட்டியிடாமலேயே தவிர்த்து விடலாம் என்று அண்ணா நினைத்தார். தனக்குத் தொகுதி இல்லை என்றாலும் பரவாயில்லை, கூட்டணிக் கட்சித் தலைவருக்கு அவர் விரும்பும் தொகுதியைத் தர வேண்டும் என்று அண்ணா நினைத்தார். இந்த விட்டுக்கொடுத்தல்தான் வெற்றியை வாங்கித் தந்தது.வெற்றிச் செய்தி வந்ததும் ராஜாஜியை பார்க்கச் சென்றார் அண்ணா. தயாராக வைத்திருந்த மாலையை ராஜாஜி இவருக்குப் போடுவதற்கு முன்னதாக, தான் எடுத்துச் சென்றிருந்த மாலையை ராஜாஜிக்கு அணிவித்தார். ‘‘எங்கள் வெற்றிக்கு நீங்கள்தான் காரணம்'' என்று அண்ணா மனபூர்வமாகச் சொன்னார். உடனே ராஜாஜி, ‘‘நான் காரணம் அல்ல... உங்கள் உழைப்புதான் காரணம். உதயசூரியனை ஒரு தெய்வம்போல நீங்கள் மக்களிடையே நன்றாகப் பழக்கிவிட்டீர்கள்'' என்றார். வெற்றிக்கு யார் காரணம் என சண்டை போடவில்லை. ‘‘சவால் விடுகிறேன். தனித்துப் போட்டியிடத் தயாரா?'' என்று கை நீட்டவில்லை. மதுரையில் இருந்த மார்க்சிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி, அண்ணாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘தனி மெஜாரிட்டி உங்களுக்கு இருப்பதால், தனித்தே ஆட்சி அமையுங்கள்'' என்று கட்டளையிட்டார். ‘‘தி.மு.க பெரும்பான்மை பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால், பல கட்சிகள் இணைந்த கூட்டாட்சியை நான் விரும்பவில்லை'' என்றார் ம.பொ.சி. அறத்துறை என்ற அமைச்சகத்தை உருவாக்கி அதன் அமைச்சராக ம.பொ.சி-யை நியமிக்க முதலமைச்சர் அண்ணா நினைத்தார். அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞர் கருணாநிதி, தனது இல்லத்துக்கு ம.பொ.சி-யை வரவழைத்துப் பேசினார்.

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

மாற்று அரசியல் என்று புறப்பட்ட மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் விஜயகாந்த்துக்கு விரித்த ரத்தினக் கம்பளம் நாற்றம் அடிக்கவில்லையா? விஜயகாந்த்தை அண்ணாவாகப் பார்க்கிறாரா வைகோ? அம்பேத்கராகப் பார்க்கிறாரா திருமா? பி.ராமமூர்த்தியாகத் தெரிகிறாரா ஜி.ராமகிருஷ்ணனுக்கு? பாலதண்டாயுதத்தின் அழகுக்களை விஜயகாந்த் முகத்தில் தெரிகிறதா முத்தரசனுக்கு? ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இவர்கள் நான்கு பேருக்கும் கொள்கை என்ற ஒன்று இருக்கிறது. இவர்கள் விஜயகாந்த் மூலமாகத் தமிழகத்துக்குக் காட்டப்போகிற மாற்றம் என்பது என்ன?முரண்பட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகளை அண்ணா இணைத்தார்... ஆனால், குழப்பமான மனிதர்களை அல்ல. பேரம் பேசும் தலைவர்களை அல்ல. ராஜாஜி சிக்கலானவர்... ஆனால், மர்மமானவர் அல்ல. பி.ராமமூர்த்தியையும், ம.பொ.சி-யையும் கொள்கை ரீதியாக விமர்சிக்கலாம். உள்நோக்கம் கற்பிக்க முடியாது. காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை வெளிப்படையாகவே வெளியில் சொன்னார்கள்.அதை மீறி எதுவும் இல்லை. இங்கே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் அப்படியா நடக்கின்றன? மூன்று மாத காலம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விஜயகாந்த்துக்கும் சபரீசனுக்கும் சீன எல்லைப் பிரச்னையா இருக்கிறது? கடந்த எட்டாண்டு காலமாக இந்தியாவின் தவிர்க்க முடியாத சர்ச்சையாக மாறிவிட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வெளியில் கொண்டுவந்து அமபலப்படுத்திய பிரகாஷ் ஜவடேகர், டெல்லிக்கும் சென்னைக்கும் தலைமறைவு மனிதனாக வலம்வந்தது ஏன்? மாநிலத் தலைமைக்குத் தெரியாமல் ஒரு மத்திய மந்திரி கூட்டணிப் பேச்சு நடத்த வருவது சட்டவிரோதம். ஆனால், தமிழிசைக்குத் தெரியாமல் வந்து போனார் ஜவடேகர். தனக்குத் தெரியாமல் கருணாநிதியுடன் பேசிவிட்டார் இந்திரா என்பதற்காகப் பதவி விலகிய பழ.நெடுமாறன் காலம், நெடுந்தூரம் போய்விட்டதே தமிழகத்தில். விஜயகாந்த் முகத்தில் வாஜ்பாயும், அன்புமணி முகத்தில் அத்வானியும் தெரிகிறார்களா அமித்ஷாவுக்கு?

எல்லாப் பேரங்களையும் அந்தரங்கத்தில் நடத்திவிட்டு, ‘கொள்கைக் கூட்டணி இது’ என்று அரங்கத்தில் சொல்வது தான் அரசியலாகிப் போனது. சின்னம் மாறுகிறதே தவிர, அசிங்கம் அப்படியேதான் இருக்கிறது.

- குரல் கேட்போம்