Election bannerElection banner
Published:Updated:

அண்ணாவின் அரிசி, கருணாநிதியின் கலர் டி.வி., ஜெ.,வின் மிக்ஸி-அஸ்திரங்களாக மாறிய இலவச திட்டங்கள்

அரசியல் அப்போ அப்படி
அரசியல் அப்போ அப்படி

அரசியல் அப்போ அப்படி - 6: இலவச திட்டங்களின் தொடர்ச்சியாக 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க-வுக்கு முன்னதாகவே தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1967 வரை தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியில் அணைகள், கல்விக்கூடங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், சாலைவசதி, போக்குவரத்து வசதி எனப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனாலும், ஆதார உணவுத் தேவையான அரிசி கிடைப்பதில் ஏற்பட்ட தட்டுப்பாடும், அது தொடர்பான பஞ்சமும் மக்களை காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகத் திருப்பின.

கூடவே மொழிப் பிரச்னையைச் சரியாகக் கையாளத் தவறியது அப்போதைய பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம், அவர்கள் மீது ஏவிவிடப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைகள் போன்றவை மக்களை காங்கிரஸ் அரசின் இதர நல்ல அம்சங்களை மறக்கடிக்கச் செய்தன.

அண்ணா
அண்ணா

அரிசி அஸ்திரத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ்!

அன்றைய தமிழக அரசியலில் விஸ்வரூப வளர்ச்சியை எட்டிப் பிடித்துக்கொண்டிருந்த அண்ணா தலைமையிலான தி.மு.க., 1967-ல் சட்டமன்றத் தேர்தலில், இந்த இரண்டு பிரச்னைகளையும் தங்களுடைய தேர்தல் ஆயுதங்களாக எடுத்துக்கொண்டு, மக்களிடம் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. அதிலும் குறிப்பாக, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்று தேர்தல் முழக்கத்தை வெளியிட்டவுடன், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, அப்படியே தி.மு.க பக்கம் சென்றது.

கூடவே, விலைவாசி உயர்வையொட்டி திமுக வைத்த முழக்கங்கள் மக்களிடையே இன்னும் வேகமாகச் சென்றடைந்தன. `கும்பி எரியுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா’, `பக்தவத்ச்லம் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி’, `காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சு?’, `கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிபட்டுச் செத்தான்’ போன்ற முழக்கங்களெல்லாம் அன்றைய தேர்தலில் உச்சம் தொட்ட தேர்தல் கோஷங்கள்.

இது ஒருபுறம் இருக்க, வாக்குப்பதிவு நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர் திமுக-வின் அப்போதைய நட்சத்திர வேட்பாளரான நடிகர் எம்.ஜி.ஆர்., எம். ஆர்.ராதாவால் சுடப்பட்ட சம்பவமும், அவர் குண்டடிபட்ட காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தின் போஸ்டரும். திமுக-வுக்கு ஆதரவான அனுதாப அலையை ஏற்படுத்தின.

இவையெல்லாம் சேர்ந்துதான் அண்ணா தலைமையிலான திமுக-வை ஆட்சியில் அமர்த்தியது. அந்தத் தேர்தலில், திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 51 இடங்களை மட்டுமே கைப்பற்றி, ஆட்சியை இழந்தது. அந்தத் தேர்தலுடன் தமிழகத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறது. அப்போது முதல் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த திமுக., அதிமுக இரண்டு கட்சிகளுமே, தங்கள் ஆட்சியில் அரிசித் தட்டுப்பாடு மட்டும் ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டன.

கலர் டி.வி-யால் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி

இப்படி அரிசியைவைத்தே ஆட்சியைப் பிடித்த திமுக., அண்ணா மறைவுக்குப் பின்னர் கருணாநிதி தலைமைக்கு மாறிய பின்னர், அதே அரிசி பிரசாரத்துடன் சேர்ந்து இலவச கலர் டி.வி உள்ளிட்ட மக்களைக் கவரும் பல இலவச திட்டங்கள் குறித்த அறிவிப்பு திமுக-வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று, புதிய பரிணாமம் பெற்றது. குறிப்பாக இது போன்ற கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளெல்லாம் 2006 தேர்தலிலிருந்துதான் வெகுவாக வெளியாகத் தொடங்கின.

கலைஞர் கலர் டி.வி
கலைஞர் கலர் டி.வி

அந்தத் தேர்தலையொட்டி, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கைதான், அந்தத் தேர்தலின் கதாநாயகன் என வர்ணிக்கப்பட்டது. வழக்கம்போல் அரிசி விஷயத்தில் கவனம் செலுத்தி, ரேஷன் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின என்றால், ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத்தினருக்கு வீட்டுக்கு ஒரு கலர் டி.வி வழங்கப்படும் என்ற வாக்குறுதி தமிழகம் தாண்டியும் மிகவும் பரபரப்பாக பேசவைத்தது.

கருணாநிதி
கருணாநிதி

வேறு வழியில்லாமல், அதிமுக தரப்பில் ஜெயலலிதாவும் இதே போன்ற பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனாலும், திமுக-வின் கலர் டிவி அறிவிப்புதான் மக்களை வெகுவாக ஈர்த்தது என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தின.

அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 163 இடங்களில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில் அதிமுக 61 தொகுதிகளை வென்றிருந்தது. அதிமுக-வை விட திமுக 35 இடங்களில் மட்டுமே கூடுதலாக வென்றிருந்தது. திமுக அறிவித்த இலவச திட்டங்களும், விஜயகாந்த் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக-வின் வாக்குவங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்தியதும் திமுக அணிக்குச் சாதகமாக அமைந்தன.

திமுக வழியில் அதிமுக

இந்த இலவச திட்டங்களின் தொடர்ச்சியாக 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க-வுக்கு முன்னதாகவே தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், ``இலவசமாக மிக்ஸி, ஃபேன் வழங்குவோம், திருமண உதவித் திட்டத்தில் நிதியை உயர்த்தி வழங்குவோம். முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 1,500 ஆக வழங்கப்படும்" என்பது உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

இலவச அம்மா மிக்ஸி
இலவச அம்மா மிக்ஸி

தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியானதும், இப்போது போன்றே அப்போதும் அதை அ.தி.மு.க அப்படியே காப்பி அடித்தது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் இலவசமாக மிக்ஸி, மின் விசிறி வழங்குவோம் என்று அறிவிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், அ.தி.மு.க-வோ ஒருபடி மேலே போய் மிக்ஸி, மின் விசிறியோடு, கிரைண்டர் மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு லேப்டாப் என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது.

எம்.ஜி.ஆரை எதிர்த்த ஜெய்சங்கர்... கருணாநிதியுடன் கைகோத்த டி.ஆர்... அரசியல் அப்போ அப்படி - 5

இதுவும் வாக்காளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த நிலையில், அத்தேர்தலில் 168 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களைக் கைப்பற்றியது அ.தி.மு.க.

மூன்றாவது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. 124 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க., வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க எதிர்க்கட்சியானது.

இதோ 1967-ல் அரிசியில் தொடங்கிய திமுக-வின் தேர்தல் வாக்குறுதி, ஆவின் பால் விலை குறைப்பு, மாணவர்களுக்கு இலவச பால் என இப்போதைய 2021 தேர்தல் வரை தொடர்கிறது. எதிர்பார்த்ததுபோலவே திமுக-வின் தேர்தல் அறிக்கை பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், வழக்கம்போல் அதிமுக-வும் அதிலுள்ள முக்கிய அறிவிப்புகளைப் பின்பற்றி, இன்னும் கூடுதலான திட்டங்களை அறிவித்துள்ளது.

எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களைக் கவர்ந்தது என்பது வருகிற மே 2-ம் தேதி தெரிந்துவிடும்!

பகுதி 5: படிக்க க்ளிக் செய்க...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு