Published:Updated:

வாழ்த்திய திவாகரன்; அரண்ட அமைச்சர்... அப்செட் சூரி! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

``தகவல்கள் மெசஞ்சரில் வந்துசேரும்... நான் கொஞ்சம் பிஸி’’ என்று கூறிய கழுகார், ஜெட்டாகப் பறந்தார். மெசஞ்சரில் தகவல்கள் வந்து விழுந்தன.

வாழ்த்திய திவாகரன்; அரண்ட அமைச்சர்... அப்செட் சூரி! - கழுகார் அப்டேட்ஸ்

``தகவல்கள் மெசஞ்சரில் வந்துசேரும்... நான் கொஞ்சம் பிஸி’’ என்று கூறிய கழுகார், ஜெட்டாகப் பறந்தார். மெசஞ்சரில் தகவல்கள் வந்து விழுந்தன.

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
வெட்டப்பட்ட கே.கே.நகர் தனசேகரன்!
கட்சித் தலைமை விடுத்த கடும் எச்சரிக்கை

தி.மு.க-வின் `பெரிய கை’ என்று அறியப்பட்ட கே.கே.நகர் தனசேகரனுக்கு அரசியல் வகையிலும் சரி... `பஞ்சாயத்து’ வகையிலும் சரி... எதிரிகள் ஏராளம். ஆனால், பெரிய எதிரிகளெல்லாம் அமைதியாக இருக்க... சாமானியன் ஒருவர் தனசேகரனை ஆக்ரோஷமாகப் போட்டுத்தள்ளப் பார்த்திருக்கிறார். இதில், படுகாயங்களுடன் நூலிழையில் உயிர்தப்பியிருக்கிறார் தனசேகரன். தலையில் பலமான வெட்டு விழுந்து, மண்டையோடு வரைக்கும் சேதாரம் ஏற்பட்டிருக்கிறது. அவரது அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்த 34 வயது பெண்ணின் கணவர்தான் அக்டோபர் 13-ம் தேதியன்று இப்படிக் கொலைவெறி தாண்டவமாடியிருக்கிறார். தன் மனைவியை வெட்டும்போது குறுக்கே வந்து தடுத்ததால், தனசேகரனுக்கு வெட்டு விழுந்திருக்கிறது என்று வெளியே கூறப்பட்டாலும், கணவன் - மனைவி - தனசேகரன் மூவருக்கும் இடையே உள் விவகாரங்கள் கடந்த பல மாதங்களாகவே கொளுந்துவிட்டு எரிகின்றன என்கிறார்கள்.

தனசேகரன்
தனசேகரன்

இந்தநிலையில், அன்றைய தினம் இரவே மருத்துவமனைக்குச் சென்று, தனசேகரனை பார்த்துவிட்டு வரலாம் என்று கட்சித் தலைமை தயாரானதாம். இடைபுகுந்த வாரிசு, ``பேரு சரியில்லாத ஆளையெல்லாம் போய் பார்த்துட்டு, உங்க பேரைக் கெடுத்துக்காதீங்க. அதைவெச்சே அந்தாளு இன்னும் அட்ராசிட்டி பண்ணுவாரு. அவரையெல்லாம் அடக்கிவெச்சிருக்கணும்” என்று கட்டையைப் போட்டுவிட்டாராம். அதன் பிறகே டி.ஆர்.பாலுவும் டி.கே.எஸ்.இளங்கோவனும் தனியார் மருத்துவமனையிலிருந்த தனசேகரனை பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். அப்போது இருவர் தரப்பிலிருந்தும், ``இந்தப் பிரச்னையை இத்தோட விட்ருங்க. திரும்பவும் அவனை வெட்டப்போறேன்னு உங்க தரப்புல அரிவாளைத் தூக்கிட்டு அலைஞ்சீங்கன்னா எலெக்‌ஷன் நேரத்துல கட்சி பேரு கெட்டுரும். உங்களைக் கட்சியைவிட்டே நீக்கிடுவோம்” என்று பலமாக எச்சரிக்கப்பட்டதாம்.

தனசேகரன் வீடு
தனசேகரன் வீடு

வாரிசு தரப்பில் தனசேகரன்மீது காட்டத்தைக் காட்டுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அன்பில் மகேஷின் நெருங்கிய உறவு ஒருவரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து விவகாரத்தில் பல ஆண்டுகளாகவே கட்டையைப் போட்டுவருகிறதாம் தனசேகரன் தரப்பு. இன்னொரு பக்கம், தாம்பரம் எம்.எல்.ஏ ராஜாவுக்கு நெருக்கமான மருத்துவர் ஒருவரின் சொத்து விவகாரத்திலும் மூக்கை நுழைத்ததாம் தனசேகரன் தரப்பு. கட்சியினரிடமே தனது கைங்கர்யத்தைக் காட்டலாமா என்பதுதான் வாரிசின் கோபத்துக்குக் காரணமாம். இதை முன்வைத்தே, வரும் தேர்தலில் அவருக்கு எந்தச் சலுகையும் காட்டக் கூடாது என்று தடையுத்தரவும் போட்டிருக்கிறதாம் வாரிசு தரப்பு.

எந்தப் புத்துல எந்த பாம்பு இருக்கும்னே தெரியலைப்பா!

``வி வில் மீட் இன் தி கோர்ட்!’’
அப்செட்டில் நடிகர் சூரி!

சென்னை சிறுசேரியில் நடிகர் சூரிக்கு சர்ச்சைக்குரிய இடத்தை வாங்கிக்கொடுத்த விவகாரத்தில், முன்னாள் டி.ஜி.பி-யான ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது தெரிந்த விஷயம். அதன் பிறகு நடந்த சங்கதிகள் இவை... நீதிமன்ற உத்தரவையடுத்து, அடையாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து, மத்தியக் குற்றப்பிரிவுக்கு விசாரணையை மாற்றம் செய்திருக்கிறார்கள். எஃப்.ஐ.ஆர் பதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், நடிகர் சூரியிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திய எதிர்த்தரப்பு, `பணத்தைக் கொடுத்துவிடுகிறோம்’ என்று கூறியதாம்.

சூரி
சூரி

ஆனால், அதற்குள் செய்தி மீடியாக்களிடம் கசிந்து, பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், `முழுதாக நனைந்துவிட்டோம்; முக்காடு எதற்கு?’ என்கிறரீதியில் கடுப்பான எதிர்தரப்பு, `பணமெல்லாம் தர முடியாது; வி வில் மீட் இன் தி கோர்ட்’ என்று கூறிவிட்டதாம். இதென்னடா நமக்கு வந்த சோதனை என்று கடும் அப்செட்டிலிருக்கிறார் சூரி.

எல்லாக் கோட்டையும் அழி... திரும்பவும் முதலிருந்து பேசுவோம் என்று பேசிப் பார்க்கலாமே சூரி சார்!

குன்னூருக்கு ரூட் போடும் சஜ்ஜீவன்!

ஒருகாலத்தில் போயஸ் கார்டனுக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட கூடலூர் மர வியாபாரி சஜ்ஜீவன், கூடலூர் தொகுதியைக் குறிவைத்து காய்நகர்த்திவந்தார். ஆனால், மரக்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவர் பெயர் அடிபடுவதால், சஜ்ஜீவனுக்கு கட்சிக்காரர்களிடமும் கூடலூர் மக்களிடமும் எதிர்ப்பலை சுனாமியாகச் சுழன்றடிக்கிறது.

சஜ்ஜீவன்
சஜ்ஜீவன்

இதனால், குன்னூர் தொகுதி பக்கம் தன் ஜாகையை மாற்றத் திட்டமிட்டிருக்கிறாராம் சஜ்ஜீவன். கொங்கு அமைச்சர் ஒருவரிடம் இப்போதே துண்டுபோட்டு வைத்திருக்கும் சஜ்ஜீவன், `வெயிட்’டாகக் காய்களை நகர்த்திவருகிறாராம்.

குன்னூருக்குப் போனா... குற்றப் பின்னணி காணாமப்போயிடுமா?!

திருச்சி உட்கட்சிப் பூசல்
எகிறிய எடப்பாடி!

திருச்சி புறநகர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த ரத்தினவேலுவை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, அமைப்புச் செயலாளர் பதவி வழங்கியது கட்சித் தலைமை. இதில், அதிருப்தியடைந்த அவர் கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்துவந்தார். இதனால் கடுப்பான முதல்வர் பழனிசாமி தரப்பிலிருந்து ரத்தினவேலுவுக்கு அலைபேசியில் அழைப்பு சென்றதாம். ``பொறுப்பு கொடுக்கலைன்னா வேலை பார்க்க மாட்டியா... பெரிய இவரா நீ!” என்கிற ரேஞ்சுக்கு முதல்வர் தரப்பில் காய்ச்சியெடுத்தார்களாம். பதிலுக்கு ரத்தினவேலு தரப்பிலோ, ``அண்ணே... அப்படியெல்லாம் இல்லண்ணே... எங்கே போனாலும் அடிதடியா இருக்கு... திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி நடத்தின கூட்டத்தில் அடிதடி ரணகளமாகிடுச்சு.

எடப்பாடி பழனிசாமியுடன் ரத்தினவேலு
எடப்பாடி பழனிசாமியுடன் ரத்தினவேலு

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஏரியாவுக்குள்ளேயும் போக முடியலை. புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் குமார் ஏரியாவில் உட்கட்சி சண்டையில மண்டை உடையுது. அதனாலதான் என்னால எந்த நிகழ்ச்சிக்கும் போக முடியலை” என்று விளக்கம் கொடுக்கப்பட்டதாம். விரைவில் பஞ்சாயத்து தீர்க்கப்படும் என்கிறது ஆளும்கட்சி வட்டாரம்.

ரத்தம் வராமப் பார்த்துக்கோங்கப்பா ரத்தத்தின் ரத்தங்களே!

மசாஜ் சென்டர் மாமூல்!
பெண் உயரதிகாரியை மதிக்காத காக்கி!

சென்னை, அண்ணாநகர் காவல் மாவட்டத்திலுள்ள அதிகாரிக்கும் பெண் உயரதிகாரி ஒருவருக்கும் முட்டல் மோதல் உச்சமடைந்திருக்கிறது. அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற அந்த அதிகாரி, மசாஜ் சென்டர்கள் என்கிற பெயரில் பாலியல் தொழில் நடத்திவந்த மையங்களில் அதிரடி ரெய்டு நடத்தி, தன்னை நேர்மையான அதிகாரியாகக் காட்டிக்கொண்டாராம். அதன் பிறகு, சிலர் அந்த அதிகாரியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இதில் `செட்டில்மென்ட்’ ஆன பிறகு மீண்டும் அண்ணாநகரில் விவகாரமான மசாஜ் சென்டர்கள் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டன.

பாலியல் புகார்
பாலியல் புகார்
Representational Image

கூடுதலாக, சூதாட்ட கிளப்புகளும் களைகட்டுகின்றனவாம். இவையெல்லாம் குறித்து பெண் உயரதிகாரியின் புகார்கள் குவிந்ததும், சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டர்கள், சூதாட்ட கிளப்புகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சொல்லியிருக்கிறார். ஆனால், அண்ணாநகர் அதிகாரி அந்த உத்தரவை மதிக்கவே இல்லையாம். விசாரித்தால், ``மேல வரைக்கும் கவனிக்கிறோம். என்னை ஒண்ணும் செய்ய முடியாது” என்கிறாராம். இதனால், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் மற்றும் டி.ஜி.பி-க்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார் அந்தப் பெண் உயரதிகாரி.

வைஜெயந்தி ஐ.பி.எஸ் படத்தை பார்த்துட்டு வந்து ஆக்‌ஷன் எடுங்க மேடம்!

தூய்மை இந்தியா திட்டம்
பா.ஜ.க-வினரை தெறிக்கவிட்ட இளைஞர்கள்!

புதுச்சேரி தவளக்குப்பத்தை அடுத்திருக்கும் அபிஷேகப்பாக்கம் கிராமத்தில், பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் பிரதமரின் `தூய்மை இந்தியா’ திட்டத்தைச் செயல்படுத்த பா.ஜ.க-வினர் சமீபத்தில் வந்தனர். அவர்களைச் சூழ்ந்துக்கொண்ட அங்கிருந்த இளைஞர்கள், `உத்தரப்பிரதேசத்துல 19 வயசு பட்டியல் சமூகப் பொண்ணை சாகடிச்சப்போ எங்கே போனீங்க..? உங்க சுத்தம் எங்களுக்கு வேணாம்... பேனர்லாம் எடுத்துட்டுப் போயிடுங்க’ என்று கூறியதுடன், பேனர்களை கிழித்துப் போட்டு, அவர்களை விரட்டியிருக்கிறார்கள்.

போட்டோவுக்கு போஸ்
போட்டோவுக்கு போஸ்

அந்த நேரம் பார்த்து விழாவைத் தொடங்கிவைப்பதற்காக பந்தாவாக அங்கு வந்த புதுச்சேரி பா.ஜ.க பொதுச்செயலாளர் `ஏம்பலம்’ செல்வம், கட்சித் தொண்டர்கள் தலைதெறிக்க ஓடும் காட்சியைப் பார்த்து புரியாமல் மிரண்டுபோனார். `சரி வந்ததற்கு கணக்கு காட்டவாவது போட்டோ எடுத்துக்கொள்ளலாம்’ என்று நினைத்தாரோ என்னவோ... தன்னுடன் வந்த ஒருவருடன் துடைப்பத்தைக் கையில் பிடித்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, அடுத்த நிமிடம் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

ரணகளத்துலயும் ஒரு விளம்பரம் கேட்குது!

திருடனுக்கு மட்டுமல்ல...
போலீஸுக்கும் ஆப்பு!

புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி-யாக கடந்த ஜூலை மாதம் பாலாஜி சரவணன் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில தினங்களிலேயே, `உங்கள் சரகத்தில் மணல் கடத்தல், கஞ்சா, சீட்டாட்டம், கள்ள மது விற்பனை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்குமாறு குறிப்பாணை அனுப்பப்பட்டது. அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத உங்கள்மீது ஏன் துறைரீதியிலாக நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என்று மாவட்டத்திலுள்ள 35 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

கஞ்சா
கஞ்சா

இந்தநிலையில்தான், சில தினங்களுக்கு முன்னர், புதுக்கோட்டையிலிருந்து நாமக்கல்லுக்குக் கடத்தப்பட இருந்த 180 கிலோ கஞ்சா பொட்டலங்களை தனிப்படை போலீஸார் கைப்பற்றினர். இவை, திருமயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணவாளன்கரையில் ஒரு வீட்டில் போலீஸ் ஆதரவுடன் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, திருமயம் எஸ்.ஐ-யான ரெக்ஸ் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதுடன், ‘இனி எந்தக் காவல்நிலைய எல்லைக்குள் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்ட காவலர்கள்மீதும் சேர்த்தே நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் உத்தரவிட்டிருக்கிறாராம். அரண்டுபோயிருக்கிறார்கள் ஊழல் காவலர்கள்.

பாதியில் நிற்காமல் தொடரட்டும் எஸ்.பி-யின் வேட்டை!

ஜாண் பதவி தப்புமா?
குமரி அ.தி.மு.க குஸ்தி

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருப்பவர் ஜாண் தங்கம். தன் சொந்த மாவட்ட நிகழ்ச்சிகளில் ஆர்வம் செலுத்துவதில்லை என்கிற புகார் இவர்மீது இருக்கிறது. இந்தநிலையில்தான், அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதும், தக்கலை வடக்கு ஒன்றியச் செயலாளரான மெர்லியன்ட் தாஸ், தன் ஆதரவாளர்களுடன் திக்கணங்கோட்டில் பட்டாசு வெடித்து அமர்க்களப்படுத்திவிட்டார். இந்தச் செய்தி, `மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கொண்டாட்டம்’ என்கிற தலைப்பில் மறுநாள் பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது.

ஜாண் தங்கம்
ஜாண் தங்கம்

இதைப் பார்த்த ஜாண் தங்கம் கடுப்பாகிவிட்டாராம். இதற்கிடையே தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை சந்தித்த மெர்லியன்ட் தாஸ், `ஜாண் தங்கம் எந்தக் கட்சி நிகழ்ச்சியையும் நடத்துறது இல்லை. என்னை மாவட்டச் செயலாளர் ஆக்குங்கண்ணே... நம்ம கட்சிக்கொடி மட்டும்தான் மேற்கு மாவட்டத்துல பறக்கும்’ என்று சந்தடி சாக்கில் பதவிக்கு அடிபோட்டிருக்கிறார். `ஆகட்டும் பார்க்கலாம்’ என்றரீதியில் தளவாய் பதில் சொல்லியிருந்தாலும், `இருவருக்குமே மா.செ பதவி கிடையாது; எதிர்பாராத ஒருவருக்கு அதை அளிக்கலாம்’ என்று திட்டமிட்டிருக்கிறதாம் தலைமை.

`ஜாண்’ ஏறினால் முழம் சறுக்குது!

வாழ்த்து சொன்ன திவாகரன்!
அரண்டுபோன அமைச்சர் காமராஜ்

அ.தி.மு.க வழிகாட்டுதல்குழுவில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் இடம்பிடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மன்னார்குடி அ.தி.மு.க அலுவலகத்துக்கு வந்த அமைச்சருக்கு, கட்சியினர் தடபுடல் வரவேற்பளித்தனர். இவருக்குப் பதவி கிடைத்த பின்னணி குறித்து கட்சியினர் இப்படிச் சொல்கிறார்கள்... ``சசிகலா தம்பி திவாகரனுக்கும் அமைச்சர் காமராஜுக்கும் எப்போதுமே ஆகாது. இந்தத் தகராறில், அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் நெருக்கம்காட்டினார் திவாகரன். இந்த அரசியலைப் புரிந்துகொள்ளாத மணியனும், திவாகரனிடம் மிகவும் அந்நியோன்யமாக நட்பு பாராட்டினார். போதாக்குறைக்கு தன்னைவிட வயதில் இளையவரான திவாகரனை, `பாஸ்... பாஸ்...’ என்று வாய்நிறைய அழைத்தார். அதுவே அவருக்கு வழிகாட்டுதல்குழுவில் பதவி கிடைக்காமல் போகக் காரணமாகிவிட்டது” என்கிறார்கள்.

திவாகரன்
திவாகரன்

இதற்கிடையே இதையே முன்னுதாரணமாகக் காட்டிப் பேசிய கட்சி மேலிட தரப்பு... ``மன்னார்குடி குடும்பத்தை எதிர்த்து அரசியல் செய்த காமராஜுக்குப் பதவி கொடுத்திருக்கிறோம். திவாகரனுக்கு நெருக்கமாக இருந்த மணியனுக்குப் பதவி கொடுக்கவில்லை. சசிகலா விடுதலையானாலும் இதுதான் நிலைமை. பார்த்து ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள்” என்று சூடாக எச்சரித்திருக்கிறதாம். அதன் பிறகு நடந்ததுதான் ட்விஸ்ட்... வரவேற்பு விழாவை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அமைச்சர் காமராஜுக்கு புது எண்ணிலிருந்து ஓர் அழைப்பு வந்திருக்கிறது. அட்டெண்ட் செய்தால்... எதிர்முனையில், திவாகரன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அரண்டுபோயிருக்கிறார் காமராஜ்.

`போங்கப்பா... உங்க பொங்கலும் வேணாம்; பூசாரித்தனமும் வேணாம்’னு டயலாக் சொல்லியிருப்பாரோ!