Published:Updated:

அன்று ஜெயலலிதா... இன்று ராமதாஸ்... தொடரும் முரசொலி நில விவகாரம்!

"ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டடத்தில் இருந்துகொண்டு, உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி, நம்ம முரசொலி கம்பெனிதான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது” என்றும் குற்றச்சாட்டை கிளப்பினார்.

“பஞ்சமி நிலம், மூலப்பத்திரம், முரசொலி இந்தப் பெயர்கள் இப்போது தமிழக அரசியல் களத்தில் விவாதத்திற்குரிய பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தனுஷ் நடித்த 'அசுரன்' படம் வெளியான பிறகு இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவருகிறது. அதன் உச்சக்கட்டம், இரண்டு நாள்களுக்கு முன்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பதிவிட்ட ட்விட்டர் பதிவு.

ராமதாஸ்
ராமதாஸ்

ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறதாமே... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, ‘அரசியலில் இருந்து விலகத் தயாரா’ என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம்போல் வெற்றுச் சவடால்தானா?அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி, முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசிவிட்டு, இப்போது நாங்களே வாடகைக்குத்தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்ததுதான். முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப்பத்திரத்தைத்தான் வெளியிடவில்லை, குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா... கூடவே, சவால் விட்டவர் அரசியலிலிருந்து விலகுவாரா?” என்று கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

மேலும், “ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டடத்தில் இருந்துகொண்டு, உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி, நம்ம முரசொலி கம்பெனிதான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது” என்றும் குற்றச்சாட்டைக் கிளப்பினார். இந்நிலையில், ராமதாஸின் குற்றச்சாட்டிற்கு உடனடியாக தி.மு.க தரப்பிலும் பதில் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தை தி.மு.க தரப்பு கொஞ்சம் அச்சத்தோடு எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முரசொலி இட விவகாரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் கிளம்பி மீண்டும் அமுங்கியிருக்கிறது என்கிறார்கள். தற்போது முரசொலி அலுவலகம் உள்ள இடம், முரசொலி மாறனால் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்பாக முரசொலி அலுவலகம் அண்ணா சாலையில் செயல்பட்டுவந்துள்ளது. அதற்குப் பிறகு, தற்போது செயல்படும் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் முரசொலி வருவதற்கு முன்பு சாவடி என்று சொல்லப்படும் ஒரு இடமாக அந்த இடம் செயல்பட்டுள்ளது. அங்கு ஒரு ஓட்டுக்கொட்டகையும், அமர்ந்து கூடிப் பேசும் வகையிலான ஒருசிறிய கட்டடம் இருந்தாகவும், அந்த இடத்தை அப்போது முரசொலி மாறன் முன்னின்று வாங்கினார் என்றும் சொல்கிறார்கள், தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முரசொலி இட விவகாரம், 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்குப் பிறகும் கிளப்பப்பட்டிருக்கிறது. அப்போது ஜெயலலிதா, முரசொலி இடம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாகக் குற்றச்சாட்டைக் கிளப்பினார். மத்தியில் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, ராம் விலாஸ்பாஸ்வானிடம் அப்போது தலித் அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மூத்த தி.மு.க நிர்வாகிகளிடம் முரசொலி இடம் குறித்த முழுமையான விசாரணையை மேற்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அதன்பின்னர் ஆட்சி கலைந்தபிறகு, இந்த விவகாரம் முடங்கிவிட்டது.

கருணாநிதி
கருணாநிதி

1996-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோதும் இந்த விவகாரம் மீண்டும் கிளம்ப, அதற்கு கருணாநிதி தனது பாணியில் சில பதிலடிகளைக் கொடுத்து, அதற்கு அப்போது முடிவுகட்டினார். இப்போது, அந்த விவகாரம் ராமதாஸ் மூலம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேசியப் பழங்குடியினர் ஆணையத்தில் தி.மு.க தலைவர் மற்றும் முரசொலி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யபட்ட மனுவில், முரசொலி இட விவகாரத்தில் சில தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தாகவும், அந்தத் தகவல்கள் வழக்கறிஞர்கள்மூலம் ராமதாஸுக்குச் சென்று, அதற்குப் பிறகுதான் வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறதாமே முரசொலி என்று அவர் பதிவிட்டதாகவும் சொல்கிறார்கள், பா.ம.க-விற்கு நெருக்கமானவர்கள்.

ராமதாஸ் பதிவிட்ட கருத்துக்கு தி்.மு.க செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பதில் அறிக்கை வெளியிட்டார். அதில், “பஞ்சமி நிலத்திற்கான ஆதாரத்தை மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருந்தால், அவரது நேர்மையைப் பாராட்டியிருக்கலாம். இல்லையென்றால், தெரியாமல் தவறு செய்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தால், அவரது பெருந்தன்மை என்று விட்டிருக்கலாம். ஆனால், இரண்டும் இல்லாமல்-நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டிய மருத்துவர் ராமதாஸ், இப்போதும்கூட தன் தவற்றை உணருவதாகத் தெரியவில்லை என்றால், யாருக்காக இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்? தி.மு.க-வை விமர்சித்தால் பா.ஜ.க மகிழ்ச்சியடையும். தன் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீதுள்ள மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு விசாரணை தடைபடும்; மத்திய அமைச்சரவையில் தன் மகன் இடம்பெற வாய்ப்பு ஏற்படும் என்ற நப்பாசை காரணமோ என்ற சந்தேகமே எழுந்திருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எங்கள் கழகத் தலைவரைப் பொறுத்தமட்டில், “பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்கத் தயாரா?” என்று மருத்துவர் ராமதாஸுக்கு விட்ட சவால் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அவர் சார்பில் தேசிய பட்டியலின, பழங்குடியின ஆணையம், நீதிமன்றம் உள்பட எங்கெங்கு ஆதாரங்களைக் கொடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் ஆதாரங்களை நாங்கள் கொடுத்துவிட்டோம். இனி, தான் சுமத்திய பொய்க்குற்றச்சாட்டுக்குப் பொறுப்பேற்று நிரூபிக்கவேண்டியது மருத்துவர் ராமதாஸ் கையில்தான் இருக்கிறது. அதைத் தட்டிக்கழித்துவிட்டு, மீண்டும் “வாடகைக் கட்டடம்” என்று கூறி, அவர் ஏன் தன்னைத்தானே திட்டமிட்டு தரம் தாழ்த்திக்கொள்கிறார் என்பது அவருக்கு மட்டுமே புரிந்த புதிராக இருக்கிறது” என்று குறிப்பிட்டடிருந்தார்.

ஆனால், இந்த விவகாரத்தில் பஞ்சமி நிலம் இல்லை என்று தி.மு.க பதில் அளித்திருந்தாலும், வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறதா இல்லையா என்பதற்கு சரியான பதில் இல்லை. அதேபோல் , முரசொலி இடத்தின் மூலப்பத்திரத்தை பா.ம.க தரப்பு கைப்பற்றி விட்டதாகவும், விரைவில் இந்த விவகாரத்தில் ராமதாஸ் சில ஆவணங்களை வெளியிடப்போவதாகவும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள் பா.ம.க-வினர்.

அசுரனில் சொல்லப்படும் பஞ்சமி நிலம்!- ஸ்டாலினின் ட்வீட்டும் ராமதாஸின் கேள்வியும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு