Published:Updated:

`நமீதா முதல் குஷ்பு வரை'- பா.ஜ.க-வின் பளபளக்கும் நட்சத்திர அரசியல் வியூகம் இதுதான்!

நமீதா - குஷ்பு
நமீதா - குஷ்பு

நடிகை நமீதாவில் ஆரம்பித்து குஷ்பு வரையிலாக தமிழக பா.ஜ.க-வில் திரைப் பிரபலங்கள் பலரும் வரிசையாக இணைந்துவருவதன் காரணம் என்ன?

பா.ஜ.க-வில் நடிகை குஷ்பு இணைந்திருப்பது, தமிழக அரசியலையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. காரணம், பா.ஜ.க-வின் அடிப்படைக் கொள்கைகள் குறித்து இதுநாள்வரையில் மிகக் கடுமையாக விமர்சித்துவந்தவர் குஷ்பு. ஆனால், திடீரென நேற்று காலையில் காங்கிரஸ் கட்சிக்கு ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, மதியம் பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டார்.

பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு
பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு

ஏற்கெனவே, தமிழக பா.ஜ.க-வில், நடிகை நமீதா, காயத்ரி ரகுராம், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர்கள் தீனா, பரத்வாஜ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, ஃபெப்சி சிவா என தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்துவரும் சூழலில், குஷ்புவும் அந்தக் கட்சியில் இடம்பிடித்திருப்பது, பா.ஜ.க-வின் அரசியல் வியூகம் குறித்த கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இது குறித்துப் பேசும் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான கணபதி, ``திரைப் பிரபலங்களைக் கட்சியில் சேர்ப்பதாலேயே, தொகுதிக்கு 5,000-லிருந்து 10,000 வாக்குகள் வரை அதிகமாகக் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. 1989 சட்டமன்றத் தேர்தலில், திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சிவாஜி கணேசன் தோல்வியைத் தழுவினார். மிகப்பெரிய நடிகர், அவரது சாதி சார்ந்த வாக்குகள், கூட்டணிக் கட்சி பலம் எனப் பல்வேறு சாதகங்கள் இருந்த நிலையிலும்கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை. எனவே, திரைப் பிரபலங்கள் கூட்டம் சேர்ப்பதற்குத்தான் பயன்படுவார்கள்.

பா.ஜ.க-வில் நமீதா இணைந்தபோது...
பா.ஜ.க-வில் நமீதா இணைந்தபோது...

நாளை பிரதமர் மோடியே தமிழ்நாட்டில் வந்து பேசினாலும், அவரது இந்திப் பேச்சைக் கேட்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதும் என்று சொல்லிவிட முடியாது. எனவே, பிரதமர் பேசும் கூட்டத்துக்கும்கூட, மக்களைக் கூட்டித்தான் வர வேண்டும். அப்படி மக்களைத் திரட்டுவதற்கு நமீதா, குஷ்பு போன்ற திரைப் பிரபலங்களை முதலில் மேடையில் பேசவைப்பது பயன்தரும்.

நடிகை ரோஜா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்றோரும் திரைத்துறையிலிருந்துதான் அரசியலுக்குள் வந்தார்கள் என்றாலும்கூட, அவர்களது பின்னணி என்பது வேறு. அதாவது, எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளில் பணியாற்றியிருக்கிறார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் இறந்த பிறகும்கூட அவரது இறுதி ஊர்வல வண்டியிலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டது, அ.தி.மு.க-வின் ஜெ., ஜா அணிகளை ஒருங்கிணைத்தது, சட்டமன்றத்தில் ஆடை கிழிக்கப்பட்டது என அரசியல் களத்தில் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு அரசியல் செய்தவர் ஜெயலலிதா.

ரோஜா - ஜெயலலிதா
ரோஜா - ஜெயலலிதா

அதேபோல், நடிகை ரோஜாவும் 1999-ம் ஆண்டிலேயே தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தவர். முதலில், நகரி தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார். அதன் பிறகு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார். மக்கள் பிரச்னைகளுக்காக களப் போராட்டம், ஆர்ப்பாட்டம், காவல்துறை வழக்குகள் என அவரது அரசியல் அனுபவமும் பெரிது. எனவே, நாளையே ரோஜா, வேறு ஒரு கட்சிக்கு மாறிச் செல்கிறார் என்றால், அவரோடு சேர்ந்து தொகுதிக்கு 20,000 வாக்குகளையும் கொண்டுசென்றுவிடுவார். ஆனால், நமீதா, குஷ்பு போன்றவர்களை இவர்களோடு ஒப்பிடவே முடியாது.

`இப்போதும் நான் பெரியார் கொள்கைவாதிதான்!’ - கமலாலயத்தில் குஷ்பு

பா.ஜ.க-வின் தேசியத் தலைமை, மாநிலம்தோறும் தங்கள் கட்சிக்குப் பிரபலங்களைக் கொண்டுவந்து சேர்ப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டிவருகிறது. விளையாட்டுத்துறை, திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அல்லது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற மக்கள் பணியில் பரபரப்பை ஏற்படுத்தியவர்களை பா.ஜ.க-வில் இணைக்கிறார்கள். இப்படியான கவர்ச்சி அரசியலை இங்கிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளும் ஆரம்பகாலத்தில் தங்கள் கட்சி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தியிருக்கின்றன. ஆக, இங்கிருக்கும் திராவிடக் கட்சிகள் ஏற்கெனவே இந்த விஷயத்தில் எம்.ஏ முடித்துவிட்டனர்; ஆனால், பா.ஜ.க இப்போதுதான் ஆறாம் வகுப்பிலேயே சேர்ந்திருக்கிறது'' என்கிறார் அவர்.

கணபதி - எம்.என்.ராஜா
கணபதி - எம்.என்.ராஜா

`திரைப் பிரபலங்கள் கூட்டம் சேர்க்க மட்டுமே பயன்படுவார்கள்' என்ற அரசியல் விமர்சனம் பற்றி தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் எம்.என்.ராஜாவிடம் பேசியபோது, ``திரையுலகைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பா.ஜ.க-வில் இணைகிறார்கள் என்றில்லை. மக்கள் பணியாற்றிய உயரதிகாரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிவரும் இளைஞர்கள் எனப் பலதரப்பட்ட பிரிவினரும் ஆர்வத்தோடு பா.ஜ.க-வில் இணைகிறார்கள். காரணம், அகில இந்திய அளவில், கட்சிக்கு கிடைத்துவரும் வரவேற்பு அப்படி.

அமலாக்கத்துறை வழக்கு: அவசர குற்றப்பத்திரிகை? - ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன்

சாமானியரில் ஆரம்பித்து பல துறைகளைச் சேர்ந்த திறமையாளர்களும் எங்கள் கட்சிக்குள் வருகிறார்கள். அதனால்தான் நாடு முழுக்க 12 கோடிப் பேர் எங்கள் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில், திரைத்துறையினருக்கு மட்டும்தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சொல்வது தவறான கருத்து.

குஷ்பு
குஷ்பு

திரைப் பிரபலங்கள் வந்து கட்சியில் இணைகிறபோது கிடைக்கக்கூடிய பப்ளிசிட்டி அதிகமாக இருப்பதால், இப்படியோர் எண்ணம் ஏற்படுகிறது. மற்றபடி சாமானிய மக்களில் ஆரம்பித்து உயர் பதவிகளை அலங்கரித்துவந்த அதிகாரிகள் வரையிலாக லட்சக்கணக்கானோரும் பா.ஜ.க-வை நோக்கிப் படையெடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

`குஷ்பு பா.ஜ.க-வை விமர்சித்த கதை அனைவருக்கும் தெரியும்!'- பி.டி.அரசகுமார்

மக்கள் சேவை மட்டுமே எங்கள் சித்தாந்தம். எனவே, மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறவர்கள் எந்தத் துறையிலிருந்து வந்தாலும் பா.ஜ.க அவர்களை வரவேற்று அணைத்துக்கொள்ளும். எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து ரொனால்டு ரீகன், என்.டி.ராமராவ் என திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அரசியலுக்குள் வந்து நல்லபடியாக மக்கள் சேவை ஆற்றியிருக்கிறார்கள். எனவே, சாதனையாளர்கள் எந்தத் துறையிலிருந்து வந்தாலும் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள்.

எம்.ஜி.ஆர் - ரீகன் - ராமாராவ்
எம்.ஜி.ஆர் - ரீகன் - ராமாராவ்

போகாத ஊருக்கு வழி தேடிக்கொண்டிருப்பவர்கள்தான், `நடிகர்-நடிகைகளால் கவர்ச்சி அரசியல் மட்டுமே பண்ண முடியும்’ என்று வெட்டியாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். மற்றபடி, மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற துடிப்போடு, பா.ஜ.க-வுக்குள் வருபவர்களை யாரும் தடுக்க முடியாது'' என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

அடுத்த கட்டுரைக்கு