தொட்ட இடமெல்லாம் துலங்கும் என்பதுபோல், அவர் திட்டும் இடமெல்லாம் துலங்கோ துலங்கெனத் துலங்குகிறது. இப்படி ஊரான் வீட்டுப் பிள்ளையையே ஊட்டி வளர்த்துக்கொண்டிருந்தால் எப்படி, அவரும் ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் சுற்றுலா போக வேண்டாமா?! அதனால், ஹெச்.ராஜா தன் கட்சியையே எப்படி பிரமாண்டமாய் போனியாக்கலாம் என ஐடியா சொல்கிறான் இந்த அய்யனாரு.
சுப்பிரமணியன் சுவாமி எப்படி அவ்வப்போது கண்ணாடி வீட்டுக்குள் இருந்தே கல் எறிகிறாரோ, அப்படியே ஹெச்.ராஜாவும் அவ்வப்போது எறியத் தொடங்கினால் நன்றாக இருக்கும். “ஹெச்.ராஜாவே திட்டிட்டாரா, அப்போ கண்டிப்பா நல்ல விஷயமாத்தான் இருக்கும்” என மக்கள் மனதிலிருக்கும் ரிவர்ஸ் சைக்கலாஜியை ரிவர்ஸிலேயே பயன்படுத்திக்கொள்ளலாம். எப்பூடி!

நிர்மலா சீதாராமனுக்கு காசு எண்ணவே தெரியாது. தமிழிசைக்கு நாகார்ஜுனாவையே தெரியாது. ஏன்... நம்ம பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ.க என்பதன் விரிவாக்கமே தெரியாது. அவங்க எல்லோரும் ஆன்டி இண்டியன்ஸ்’ என்று தன் அட்மினிடம் சொல்லி ஒரேயொரு ட்வீட். பா.ஜ.க-வின் புகழ் உலகளவில் டிரெண்ட் ஆகும். பா.ஜ.க தலைவர்கள் எல்லோரும் அனுதாப அலைக்குள் சிக்குவார்கள். ஹெச்.ராஜா மட்டும் வறுத்தெடுக்கப்படுவார். பரவாயில்லை, கட்சியின் வளர்ச்சிக்காக இதைகூட செய்ய மாட்டாரா ராஜா சார்.
அவர் பெயர் நரேந்திர மோடியே கிடையாதுங்கிறேன். அவர் நேதன் மூடி. அமித் ஷாங்கிறதே ஒரு இஸ்லாம் பெயர்’ என ஆதார் அட்டை ஆதாரத்துடன் புகைப்படம் ஒன்று வெளியிட்டால்போதும். இதே வழியைப் பின்பற்றித்தான் சும்மா இருந்த ஒருவரைச் சொறிந்து ஸ்டார் ஆக்கினார்கள். எனவே, இந்த வழியை முயன்று பார்க்கலாம், தாமரை மலர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
தாமரை என்பது, இந்தியாவின் பூவே கிடையாது. மொகலாயப் பேரரசுகள் நம் நீரின் வளத்தை உறிஞ்சுவதற்காகவே கண்டுபிடித்த தாவரம் அது. திராவிட ஆட்சியில்தான் அந்த விதைகளை குளம், குட்டை எல்லாம் தூவினார்கள். எனவே, தாமரை என்பது நம் மண்ணுக்கு ஒவ்வாத தாவரம்’ என வாட்ஸ் அப் ஃபார்வார்டு ஸ்டைலில் அறிக்கை ஒன்றை அடித்துவிட்டால்போதும், தாமரை தமிழ்நாட்டுல மலர்ந்தே தீரும்கிறேன் நான்!