மீண்டும் ஓர் ஆடியோ... பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா... உட்கட்சி ஜனநாயகம் கேள்விக்குள்ளாகிறதா... என்று கடந்த ஒரு வாரமாகத் தமிழக பா.ஜ.க பேசுபொருளாக இருந்தது. இந்த நிலையில், ``பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக, ‘கட்சிக்கு எதிராகக் களங்கம் ஏற்படுத்திவிட்டார்...’ என ஆறுமாதகாலம் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது என்ன நியாயம்..?" என்று கேள்வி எழுப்பி வருகிறார் பா.ஜ.க வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம். என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்.
“உங்களை இடைநீக்கம் செய்வதற்கான காரணம்... அந்த பிரச்னையின் தொடக்கம் என்ன?”
“ `காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்வுக்கான ஒரு கமிட்டியில் நானும் உறுப்பினர். அதில் இருப்பவர்களுக்கு என்னென்ன பொறுப்பு என்பது சொல்லவில்லை. நாச்சியப்பன் என்பவருக்குத் தலைமை பொறுப்பு மாதிரி கொடுத்திருந்தார்கள். அவர் ‘உங்கள் தரப்பில் இருக்கும் கலைஞர்கள் இருந்தால் சொல்லுங்கள்...’ என்று கேட்டிருந்தார். அதன்பேரில் நான் சொல்லி நிறையப் பேர் விண்ணப்பித்தார்கள். கட்சியில் அந்த பிரிவு சார்ந்த பொறுப்பிலும் இருந்தும், 2,500 பேரில் ஒருவர்கூட என் தரப்பிலிருந்து போக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதோடு காசிக்குச் செல்ல எல்லா மாநில நிர்வாகிகளுக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு ஏதும் வரவில்லை. அதில் ஏதோ அரசியல் இருக்கிறது என்று விட்டுவிட்டேன். அதில் ஏற்பட்ட வருத்தத்தை ட்விட்டரில் பதிவிட்டேனே தவிர அதில் புகாராக ஏதும் தெரிவிக்கவில்லையே. ஆனால், அண்ணாமலைக்கு எதிராகப் பதிவிட்டதாக, செயல்படுவதாகத் தவறான சித்திரிப்புகள் நடந்திருக்கின்றன."

“அப்படி என்றால் நீங்கள் போட்ட ட்வீட்தான் கட்சி பொறுப்பிலிருந்து நீக்க காரணம் என்கிறீர்களா?”
“எதற்காக நீக்கினார்கள் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஒருவேளை அந்த ட்வீட்டாக இருந்தால், தவறாக ஒன்றைச் செய்யும்போது அதைத் திருத்திக் கொள்ள வேண்டுமெனச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. அண்ணாமலைக்காகக் கூடலூரில் கூடிய கூட்டம், அவரால்தான் என்பதை எப்படி ஏற்க முடியும். வளராத ஓர் இடத்தில் அண்ணாமலை சென்று அங்கு வேலை பார்த்து, அதனால் அங்குக் கூட்டம் கூடியது என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், வளர்ந்த ஒரு பகுதியில் சொல்லும்போது, இதற்கு முன் வேலை செய்தவர்களின் உழைப்பு கேள்விக்குறியாகிறதல்லவா. நான் போட்ட பதிவுக்குப் பின் அந்த நபர் அதைச் சரி செய்து இணையமைச்சர் முருகனை டேக் செய்து எழுதியிருந்தார். எனவே தவறாக இருக்கும்போது அதைச் சொன்னால் தானே சரி செய்து கொள்ள முடியும். என்னிடம் நான்கு பேர் போட்டோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் என்னால்தான் கட்சி வளர்கிறது, வெற்றி பெறுகிறது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். இதில் கட்சிக்குள் இருப்பவர்களே எனக்கு எதிராகச் செயல்படுவதுதான் வருத்தம்.”

“எதற்காக உங்களை டார்கெட் செய்ய வேண்டும்?”
“எல்லா இடங்களிலும் வளர்ந்தால் கீழே தள்ளிவிடத்தானே பார்ப்பார்கள். தேர்தல் வரப்போகிறது. சிலர் சீட் கேட்கப் போகிறார்கள். அவர்களுக்குப் போட்டியாக இருக்கும்போது நிச்சயம் தள்ளிவிடத்தானே பார்ப்பார்கள். அதனாலேயே கட்சிக்கு எதிராக நான் செயல்படுவது போல், ‘குருமூர்த்தி கும்பல்... தி.மு.க ஸ்லீப்பர் செல்...’ என்று தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இதையெல்லாம் தாண்டி மீண்டும் வருவேன். கட்சிப்பணி, மக்களுக்கான பணிகள் என்று தொடர்வேன். நான் வேலை செய்ய வந்திருக்கிறேன். தலைவர் இருக்கையில் யார் அமர்ந்தாலும் மரியாதை கொடுப்பேன். யாருக்கும் எதிரியும் கிடையாது. இதுபோல் தவறாகப் பேசினால், ட்விட்டரில் கமென்ட் செய்தால் தட்டிக் கேட்பேன். ‘எனக்காக நீங்க பேசுங்கள்’ என்று மற்றவரிடம் போய் நிற்க மாட்டேன். இதுதானே தற்காப்பு. பெண்களுக்குத் தைரியம் தானே சொல்லிக் கொடுக்க வேண்டும்.”
இந்தக் கேள்வி பதில்களோடு, 30.11.2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ஏராளமான கேள்விகளுக்கு காரசாரமாக பதில் அளித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.