Published:Updated:

தி.மு.க: பொதுச்செயலாளர் துரைமுருகன்... பொருளாளர் டி.ஆர் பாலு... சமாளிப்பாரா ஸ்டாலின்?

டி.ஆர் பாலு - ஸ்டாலின் - துரைமுருகன்
டி.ஆர் பாலு - ஸ்டாலின் - துரைமுருகன்

தி.மு.க-வில் கணக்குக் கேட்டதாலேயே கலகம் வெடித்தது. அதனாலேயே எம்.ஜி.ஆரு-க்குப் பிறகு தன் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டவர்களையே பொருளாளர் பதவியில் வைத்திருந்தார் கருணாநிதி.

``தி.மு.க-வின் வரலாற்றில், பொதுச்செயலாளர் பதவியில் எனது பெயரும் இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே எனக்கு இருக்கிறது’’ என்று சொன்ன துரைமுருகனின் ஆசை இப்போது நிறைவேறியிருக்கிறது. ஆம், கட்சியைத் தொடங்கிய அண்ணாதுரை அமர்ந்த பதவியில் துரைமுருகனும், கருணாநிதி வகித்த பொருளாளர் பதவியில் டி.ஆர்.பாலுவும் அமரப்போகிறார்கள். எழுபதாண்டுகளைக் கடந்த தி.மு.க இயக்கம் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது. அதேபோலவே அந்தக் கட்சியிலுள்ள பதவிகளும் பல சிக்கல்களைச் சந்தித்துள்ளன.

துரைமுருகன் - ஸ்டாலின்- டி.ஆர். பாலு
துரைமுருகன் - ஸ்டாலின்- டி.ஆர். பாலு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவர்ஃபுல்லான இரண்டாவது பதவி பொதுச்செயலாளர் பதவி. அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோருக்குப் பிறகு அந்தப் பதவியில் அமரப்போகிறார் துரைமுருகன். திராவிட முன்னேற்றக் கழகத்தை 1949-ம் ஆண்டு அண்ணாதுரை தொடங்கியபோது அந்தக் கட்சியில் தலைவர் பதவி என்பது இல்லை. பொதுச்செயலாளர் பதவியோடுதான் கட்சியின் சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ``நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. அவருக்காக இந்தக் கட்சியின் தலைவர் நாற்காலி காலியாக இருக்கும்’’ என்று கட்சியைத் தொடங்கியபோதே அறிவித்தார் அண்ணா.

இதனால் தி.மு.க-வில் அதிகாரம்மிக்க பதவியென்றால் அது பொதுச்செயலாளர் பதவியாகவே இருந்தது. அண்ணா மறைந்த 1969-ம் ஆண்டு வரை பொதுச்செயலாளர் பதவியே தி.மு.க-வின் உயர் பதவியாக இருந்தது. 1969-ம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பிறகு, கட்சியிலும் ஆட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டது. `அடுத்த முதல்வர் யார்?’ என்ற விவாதம் ஒருபுறம் நடக்க, `பொதுச்செயலாளர் பதவியில் இருப்பவரே முதல்வராக வேண்டும்’ என்ற குரல்களும் எழுந்தன. அண்ணாவுக்குப் பிறகு முதல்வர் பதவிக்கு குறிவைத்தார் நாவலர். ஆனால். சத்தமில்லாமல் அந்தப் பதவிக்கான எல்லா வேலைகளையும் செய்து அரியணைவரை சென்றுவிட்டார் கருணாநிதி. இதனால் முதல்வர் பதவிமீது இருந்த ஆர்வத்தால் ஆரம்பத்தில் பொதுச்செயலாளர் பதவியைக் குறிவைக்கவில்லை நாவலர். பொருளாளர் பதவியிலிருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆதரவோடு முதல்வர் பதவிக்கு வந்தார். அதைத் தொடர்ந்து 1969-ம் ஆண்டு, ஜூலை 27 அன்று பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது. நெடுஞ்செழியன் கட்சிப் பணிக்குத் திரும்பப் போவதாக அறிவித்தார். அதனால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தார்

நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி.ஆர்
நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி.ஆர்

ஆனால், கருணாநிதியின் எண்ண ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தது. கட்சிக்குத் தலைமையாக நெடுஞ்செழியனும், ஆட்சிக்குத் தலைமையாக தானும் இருந்தால் இரட்டை அதிகாரமாக மாறிவிடும் என்று கணக்கு போட்டார். யாரை வைத்து முதல்வர் பதவிக்கு தன்னை முன்மொழியச் செய்தாரோ, அதே எம்.ஜி.ஆர் என்கிற ஆயுதத்தை கருணாநிதி மீண்டும் கையிலெடுத்தார். கருணாநிதியின் எண்ணத்தை எம்.ஜி.ஆர் பகிரங்கப்படுத்தினார்.

``கட்சிக்கு ஒரு தலைமையும், ஆட்சிக்கு ஒரு தலைமையும் இருந்தால் காங்கிரஸ் கட்சியின் நிலை தி.மு.க-வுக்கும் வந்துவிடும். எனவே, இரண்டு பதவிகளையும் ஒருவரே வகிக்க வேண்டும்” என்றார்.

இந்தக் கருத்து நெடுஞ்செழியனுககுப் பெரும் அதி்ர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் பதவியும் பறிபோய்விட்டது. இப்போது பொதுச்செயலாளர் பதவியும் பறிபோவதை விரும்பாத நெடுஞ்செழியன், ``பொதுச்செயலாளர் போட்டியிலிருந்து விலக முடியாது'' என்று அறிவித்தார். அவருக்குத் தெரியும், `போட்டி ஏற்படுவதை கருணாநிதி விரும்ப மாட்டார்’ என்று. அதனால் பொதுச்செயலாளர் பதவியை தனக்கு விட்டுக்கொடுத்துவிடுவார் என நினைத்தார். ஆனால், கருணாநிதி போட்ட கணக்கை நெடுஞ்செழியனே நினைத்துப் பார்க்கவில்லை. அதிகாரம் என்றால் அது தன் கையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று முடிவு செய்த கருணாநிதி வேறு ஒரு திட்டத்தைக் கையிலெடுத்தார்.

தி.மு.க-வில் அப்போது அவைத்தலைவர் என்கிற பதவி இருந்தது. அந்தப் பதவியை எடுத்துவிட்டு, தலைவர் பதவியாக மாற்றம் செய்ய முடிவெடுத்தார் கருணாநிதி. தி.மு.க-வின் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. நெடுஞ்செழியன் உட்பட அனைவருமே ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. சில முக்கிய அதிகாரங்கள் தலைவர் வசம் வந்தன. தலைவர், பொதுச்செயலாளர் இருவரும் சேர்ந்து மட்டுமே சில முடிவுகளில் கையெழுத்திட முடியும் போன்ற சட்டங்களெல்லாம் இயற்றப்பட்டன. இப்படி தி.மு.க-வின் முதல் தலைவராக கருணாநிதியும், பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். கருணாநிதிக்குப் பக்கபலமாக இருந்த எம்.ஜி.ஆர்., தி.மு.க-வின் பொருளாளராக அறிவிக்கபட்டார்.

எம்.ஜி.ஆர்-கருணாநிதி
எம்.ஜி.ஆர்-கருணாநிதி

1972-ல் எம்.ஜி.ஆர் ``தி.மு.க-விலுள்ள மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குக் காட்ட வேண்டும் என்று சொல்கிறோம். ராமசந்திரனுக்கு ஒரு பங்களா இருக்கிறது என்றால் அது ஆட்சிக்கு முன்பு வந்ததா... பின்பு வந்தா? உறவினர்கள் மீதுள்ள சொத்துகள் என்னென்ன என்பதையெல்லாம் மற்றவர்கள் கேட்கும் முன்பு நாமே கேட்போம்” என்று வைத்த கோரிக்கை கட்சிக்குள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் விளைவு எம்.ஜி.ஆர் `அண்ணா தி.மு.க' என்ற கட்சியை உருவாக்கும் அளவுக்குக் கொண்டு சென்றது. அப்போதுதான் பொருளாளர் பதவியை வைத்து என்ன செய்யலாம் என்பதை தி.மு.க தலைமைக்குக் காட்டி அதிர்ச்சி கொடுத்தார் எம்.ஜி.ஆர். `வளர்த்த கிடா மார்பில் பாய்கிறது' என்று கருணாநிதி மற்றொரு புறம் புலம்பினார். எம்.ஜி.ஆர் கட்சி்யிலிருந்து வெளியேறிய பிறகு 1972-ம் ஆண்டு பேராசிரியர் அன்பழகனை தி.மு.க-வின் பொருளாளர் பதவியில் அமர்த்தினார் கருணாநிதி. அதே ஆண்டு அ.தி.மு.க என்ற கட்சியையும் தொடங்கிவிட்டார் எம்.ஜி.ஆர். இப்போது தி.மு.க-வின் தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன், பொருளாளர் அன்பகழன் என்று கட்சி செயல்பட ஆரம்பித்தது.

1977-ம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எமர்ஜென்சி காலகட்டம் முடிவடைந்த பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க படுதோல்வியைச் சந்தித்தது. அதே தேர்தலில் பெரும் வெற்றியை எட்டினார் எம்.ஜி.ஆர். `நடமாடும் பல்கலைக்கழகம்' என்று அறியப்பட்ட நாவலர் அப்போது அணிமாறத் தயாரானர். கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். பலரும் நாவலரைச் சமாதானம் செய்து பார்த்தனர் . நாவலர் மனதிலிருந்த திட்டமோ `தனிக்கட்சி.’ ``புலியைப் பார்த்து பூனை சூடுப்போட்டுக்கொண்ட கதையாக எம்.ஜி.ஆரை’ பார்த்து நாவலருக்கு ஆசைவந்துவிட்டது’’ என்ற விமர்சனங்கள் எழுந்தன. தி.மு.க-விலிருந்து விலகி 1977-ம் ஆண்டு மே மாதம் `மக்கள் தி.மு.க' என்ற கட்சியைத் தனது ஆதரவாளர்களுடன் தொடங்கினார் நாவலர் நெடுஞ்செழியன். மூன்றாவது பிளவை தி.மு.க அப்போது சந்தித்தது.

கருணாநிதி - எம்.ஜி.ஆர்
கருணாநிதி - எம்.ஜி.ஆர்

அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது அ.தி.மு.க. முதல்வராக எம்.ஜி.ஆர் பதவியேற்றார். எம்.ஜி.ஆரின் செல்வாக்குக்கு முன்பாக தான் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த நாவலர், தான் ஆரம்பித்த மக்கள் தி.மு.க-வைக் கலைத்துவிட்டு எம்.ஜி.ஆருடன் இணைந்தது தனிக்கதை. இப்படி தி.மு.க-வின் பொருளாளராக இருந்தவர் ஒரு கட்சியும், பொதுச்செயலளராக இருந்தவர் ஒரு கட்சியும் உருவாக்கி கருணாநி்தியைக் கலங்கடித்த காலகட்டம் அது. அதற்குப் பிறகு பொருளாளர் பதவியிலிருந்த அன்பழகனையே தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பதவிக்குக் கொண்டுவந்தார் கருணாநிதி. ஐம்பது ஆண்டுகளாக தலைவராக கருணாநிதியும், 43 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக அன்பழகனும் வளர்த்த இயக்கத்துக்கு ஸ்டாலினும், துரைமுருகனும் வந்திருக்கிறார்கள்.

பொதுச்செயலாளர் பதவிக்கு முற்றிலும் தகுதியானவர் துரைமுருகன். மாணவர் தி.மு.க-விலிருது படிப்படியாக கட்சிக்குள் வளர்ந்துவந்தவர். ``கருணாநிதியால் தன் தோளில் தூக்கி வளர்க்கப்பட்டவர் துரைமுருகன்’’ என்று பாராட்டப்பட்டவர். அதேபோல் பொருளாளர் பதவிக்கு வந்திருக்கும் டி.ஆர்.பாலுவும் கட்சியின் மூத்தவராகக் கருதப்படுவர். இந்த இருவரின் தேர்விலும் எந்தச் சிக்கலும் இல்லை. சாதிக்பாட்சா, ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், துரைமுருகன் வரிசையில் இப்போது டி.ஆர்.பாலு பொருளாளர் இடத்துக்கு வந்திருக்கிறார். கணக்குக் கேட்டதாலேயே கலகம் பிறந்த கட்சி தி.மு.க. அதனாலேயே, எம்.ஜி.ஆரு-க்குப் பிறகு தன் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டவர்களையே பொருளாளர் பதவியில் வைத்திருந்தார் கருணாநிதி. ஆனால், தற்போது, தி.மு.க தலைமை நியமித்திருக்கும் இருவருமே ஸ்டாலினைவிட வயதில் மூத்தவர்கள். ஆனால், ஸ்டாலினின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டவர்கள். அந்த நம்பிக்கையோடுதான் இந்த மூவர் படையும் வரும் பொதுக்குழுவிலிருந்து களமாடப்போகிறது.

ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு, துரைமுருகன்
ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு, துரைமுருகன்

அதே நேரம் தி.மு.க-வில் தலைவரைவிடக் கூடுதல் அதிகாரங்கள் பொதுச்செயலாளருக்கு உண்டு. குறிப்பாக தலைவரே நினைத்தாலும் கட்சியைவிட்டு யாரையும் நீக்கிவிட முடியாது. கட்சியில் ஒருவரை நீக்குவது, சேர்ப்பது, கட்சிக் கூட்டங்களை அறிவிப்பது எனப் பல முக்கிய பவர்களெல்லாம் பொதுச்செயலாளர் வசமே இருந்தன. ஆனால், அன்பழகன் மறைவுக்குப் பிறகு, சில சட்டத் திருத்தங்கள் மூலம் ஸ்டாலின் பொதுச்செயலாளர் அதிகாரங்களைத் தலைவர் வசம் எடுத்துக்கொண்டார். அந்த அதிகாரங்களை வரும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளரிடம் மாற்றிக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் `பொதுச்செயலாளர் அதிகாரங்கள் திருத்தம் செய்யப்படலாம்’ என்றும் கூறப்படுகிறது.

பொதுச்செயலாளர் துரைமுருகன்; பொருளாளர் டி.ஆர்.பாலு! - அதிர்ச்சி கொடுத்த அறிவாலய நாடகம்

கருணாநிதியின் மனமறிந்து நடப்பவர் அன்பழகன். அந்த ஈடுபாடு ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய இருவரிடமும் இருக்குமா என்றால், இருக்காது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், தன்னை வளர்த்து அழகுபார்த்த தலைவரின் மகனையே தலைவராக ஏற்றுக்கொண்டவர் துரைமுருகன், அந்தத் தலைவரின் மனம் கோணாமல் நடப்பார் என்கிறார்கள். இனி அவருக்கு என்ன இருக்கிறது. ``தம்பி கட்டளையிட்டால் களத்தில் இறங்குவேன்” என்று சொன்னார். இப்போது தலைவராகவும் தம்பியாகவும் இருக்கும் ஸ்டாலினுக்கு உதவியாகவே துரைமுருகன் இருப்பார். இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுத்தும் வகையில் சிலர் இறங்கினார்கள். ஆனால், `பொதுச்செயலாளர் தேர்வில் துரைமுருகனைத் தவிர வேறு யாரும் இல்லை’ என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்துவிட்டார்.

ஸ்டாலின் - துரைமுருகன்
ஸ்டாலின் - துரைமுருகன்

பொதுச்செயலாளர் தேர்வு குறித்த அறிவிப்பு வரும்போது துரைமுருகன் தனக்கு நெருக்கமானவர்களிடம் நா தழுதழுக்கப் பேசியிருக்கிறார். ``இனி எனக்கு என்ன இருக்கிறது... அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடித்து ஸ்டாலினை அரியணையில் ஏற்றி அழகுபார்த்துவிட்டால் போதும்'' என்று நெகிழ்ந்திருக்கிறார். அதேநேரம் டி.ஆர்.பாலு முன்கோபி என்று அனைவருக்கும் தெரியும். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் உடனடியாக ரியாக்‌ஷனைக் காட்டிவிடுவார். ஆனால், கருணாநிதி குடும்பத்தின் தீவிர விசுவாசி.

துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகிய இரு துருவங்களையும் இனி மையத்திலிருந்து இயக்கப்போகிறார் ஸ்டாலின். அந்தத் தந்திரம் அறிந்தவராகவே ஸ்டாலினைப் பார்க்கிறார்கள் தி.மு.க தொண்டர்கள். ஐம்பதாண்டுகால அரசியல்களம் அந்த வித்தையை அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கும்!

அடுத்த கட்டுரைக்கு