Published:Updated:

கொரோனா: செஞ்சி தி.மு.க எம்.எல்.ஏ மஸ்தானுக்கு பாசிட்டிவ்! - அதிர்ச்சியில் தொண்டர்கள்

ஸ்டாலினுடன் செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான்
ஸ்டாலினுடன் செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான்

கொரோனா தொற்றால் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டு வருவது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

5,29,893 பேருக்கு கொரோனா

இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றால் இதுவரை 5,29,893 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சுமார் 16,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தமிழகத்தில் சுமார் 80,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பதுடன் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாலும் உயிரிழப்புகளாலும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர் மக்கள்.

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்

இது ஒருபுறமிருக்க கொரோனா தொற்றால் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க-வினர் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். அப்படி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நேரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்று அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

தி.மு.க எம்.எல்.ஏ-க்களை தாக்கும் கொரோனா:

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டுவந்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். அதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ பழநி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செஞ்சி தி.மு.க எம்.எல்.ஏ மஸ்தான்
செஞ்சி தி.மு.க எம்.எல்.ஏ மஸ்தான்

அதையடுத்து சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவான வசந்தம் கார்த்திகேயனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்று வருகிறார். அவரையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவான ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

தி.மு.க-வில் 4-வது எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா:

அவரைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மஸ்தானுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

`கொரோனாவால் உயிரிழந்த நாட்டின் முதல் எம்.எல்.ஏ' - ஜெ.அன்பழகன் மறைவால் கலங்கும் உடன்பிறப்புகள்

இதன்மூலம் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு