Published:Updated:

``அரசு சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை நசுக்க நினைக்கக் கூடாது" - ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

உள்ளாட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்வதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. ஆளுங்கட்சியின் வெற்றிக்கு ஏதுவாக வார்டு வரையறை செய்யப்படுகிறதோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் குறித்து முடிவு செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலுள்ள கட்சி நிர்வாகிகளுடன் த.மா.கா மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்திவருகிறார்.

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

நெல்லை, தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், ``தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் கொரோனாகால கல்விக் கட்டண நிர்ணயத்தை இந்த ஆண்டும் தொடர வேண்டும். கல்விக் கட்டணத்தை மூன்று தவணைகளாகப் பிரித்துக்கட்ட வழிவகை செய்ய வேண்டும்.

நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளின்போது, மின் பாதைகளை பூமிக்குள் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நவோதயா பள்ளிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்டு என வர்ணிக்கப்படும் பாளையங்கோட்டையில் நவோதயா பள்ளியைத் தொடங்க வேண்டும்.

பேட்டியளிக்கும் ஜி.கே.வாசன்
பேட்டியளிக்கும் ஜி.கே.வாசன்

தி.மு.க சார்பாக, தேர்தல் காலங்களில் கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடையும் நிலை உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த அரசு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ததுபோல, தி.மு.க அரசும் தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு புதிய கடன்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள், மாணவர்களுக்கு புதிதாக கடன் வழங்க நடவடிககை எடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்

காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானது. சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டபோதிலும் இது மக்களுக்குச் சுமையாக இருக்கிறது. அதனால் இதைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர எதிர்க்கட்சிகள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். அதேசமயம், அரசு சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை நசுக்க நினைக்கக் கூடாது.

த.மா.கா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
த.மா.கா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விரைவில் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதில் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது. உள்ளாட்சிக்கான பகுதிகளை வரையறை செய்வதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. ஆளுங்கட்சி வெற்றிக்கு ஏதுவாக வார்டுகளை வரையறை செய்கிறதோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. தமிழக தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மத்தியில் பா.ஜ.க-வுடனும் மாநிலத்தில் அ.தி.மு.க-வுடனும் கூட்டணியில் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை முடிவு செய்வது தொடர்பான ஆலோசனை நடந்துவருகிறது.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் இடங்களில் போட்டியிடுவது பற்றி கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மருத்துவக்குழுவினரிடம் ஆலோசனை பெற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு