Published:Updated:

தஞ்சாவூர்: `கையில் வேல்.. தேர்தலில் வெற்றி என்கிற ஸ்டாலின் கனவு பலிக்காது!’ - ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

`மக்களிடம் மனுக்கள் பெற்று 100 நாள்களில் தீர்வு காணப்படும் என ஸ்டாலின் கூறுவது அரசியல் நாடகம். ஆக்கபூர்வமான நடவடிக்கையையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’ என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

`கையில் வேலை எடுத்தால் தேர்தலில் வென்று விடலாம் என்கிற ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது. வேலுக்கு பயபக்தியுடன் மரியாதை செலுத்துபவர்கள்தான் தேர்தலில் வெல்ல முடியும். தி.மு.க., சூரசம்ஹாரத்தில் நம்பிக்கை இருப்பதாகக் கூறுவதே, தேர்தலில் ஓட்டுக்காகத்தான்’ என தஞ்சாவூரில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சாவூரில் தனியார் ஹோட்டல் ஒன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டார். பின்னர் த.மா.காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது, ``டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி, பயிர்க் காப்பீடு வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ஈரப்பதம் பிடிக்காமல் முழுத் தொகையையும் வழங்க வேண்டும். வருகிற சட்டசபைத் தேர்தலில், ஆளும் அ.தி.மு.க-வின் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு, தொடர்ந்து அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு அதைச் சார்ந்த பணிகளை மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது.

வாசன்
வாசன்

ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறிவருவது ஏற்புடையது அல்ல. அது மக்களிடம் ஒருபோதும் எடுபடாது. கையில் வேலை எடுத்தால், தேர்தலில் வென்று விடலாம் என ஸ்டாலின் நினைத்துக்கொண்டிருக்கிறார். கையில் வேலை எடுத்தவர்களெல்லாம் தேர்தலிலே வென்றுவிடலாம் என்கிற ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது. அவர் வெற்றியும் பெற்றுவிட முடியாது.

வேலுக்கு பயபக்தியுடன் மரியாதை செலுத்துபவர்கள்தான் தேர்தலில் வெல்ல முடியும். தி.மு.க., சூரசம்ஹாரத்தில் நம்பிக்கை இருப்பதாகக் கூறுவதே, தேர்தலில் ஓட்டுக்காகத்தான். மக்களின் பக்தியை தேர்தலில் வாக்குக்காக யாரும் ஏமாற்றி விட முடியாது. மக்களிடம் மனுக்கள் பெற்று 100 நாள்களில் தீர்வுகாணப்படும் என ஸ்டாலின் கூறுவது அரசியல் நாடகம். ஆக்கபூர்வமான நடவடிக்கையையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

கொரோனா தடுப்பூசி மக்களுக்குத் தொடர்ந்து நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறாது. மக்கள் ஆட்சியில் மக்களுக்குத்தான் முதலில் தடுப்பூசி என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் இல்லை. டெல்லியில் இரண்டு மாநில விவசாயிகள் மட்டுமே போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய தவறான போக்கால் நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுக்குக் கிடைக்கக்கூடிய பலன் தடைப்படுகிறது என்பதை, போராடும் விவசாயிகள் உணர்ந்து செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளின் தவறான பாதையில் விவசாயிகள் செல்லக் கூடாது.

அரசு விவசாயிகளுக்கு கொடுத்திருக்கும் சிறப்பான திட்டத்தைப் பயன்படுத்தி, அவர்கள் முன்னேறக்கூடிய நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை கடற்படை நம்முடைய தமிழக மீனவர்களை அடக்க நினைக்கிறது, ஒடுக்க நினைக்கிறது. நான்கு நாள்களுக்கு முன்னர் நம்முடைய மீனவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த அச்சத்தை மத்திய அரசு போக்க வேண்டும். இலங்கை அரசுடன் பேசி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்.

ஒவ்வொரு கட்சியின் தலைவரும், அவர்களுடைய கட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிப்பது தவறு கிடையாது. தே.மு.தி.க-வைப் பொறுத்தவரையில் கூட்டணிக் கட்சி என்ற முறையில் அவர்களுடைய கருத்தை அக்கறையோடு தெரிவித்திருக்கிறார்கள். பா.ம.க., அ.தி.மு.க-வின் மிக முக்கியமான கூட்டணிக் கட்சி. பா.ம.க கொடுத்திருக்கும் கோரிக்கையை தமிழக அரசு முக்கியத்துவத்துவம் கொடுத்து பரீசிலனை செய்ய வேண்டும். சின்னம் பிரச்னையெல்லாம் தி.மு.க கூட்டணியில்தான். அ.தி.மு.க கூட்டணியில் ஒருபோதும் சின்னம் பிரச்னை கிடையாது.

‘எங்கள் நிலைப்பாட்டை அ.தி.மு.க-விடம் தெரிவித்துவிட்டோம்’ - கூட்டணி குறித்து ஜி.கே. வாசன்
‘எங்கள் நிலைப்பாட்டை அ.தி.மு.க-விடம் தெரிவித்துவிட்டோம்’ - கூட்டணி குறித்து ஜி.கே. வாசன்

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அதன் அகில இந்தியத் தலைவர்கள் பல மாநிலங்களுக்குச் சென்று பிரசாரத்தை மேற்கொள்வது வழக்கமான ஒன்று. சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர். ஆனால் பா.ஜ.க கூட்டணிதான் வென்றது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், முக்கியக் கட்சிகள் கூட்டணிக் கட்சிகளை அழைத்துப் பேசும்போது, கூட்டணிக் கட்சிகளின் பலனுக்கு, நலனுக்கு ஏற்ப தொகுதிகளைப் பெற்று கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபடுவோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு