Published:Updated:

`பாகிஸ்தான் சென்றுவிடுங்கள்’ - ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரியைச் சீண்டும் கர்நாடக பா.ஜ.க தலைவர்

ராம் பிரசாத்

ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை கர்நாடக முன்னாள் அமைச்சர் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் எனப் பேசிய வீடியோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ananth kumar hegde
ananth kumar hegde

``பன்முகத் தன்மைகொண்ட ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்துகொள்ளப்படும்போது, அரசு ஊழியராகப் பணி புரிவது தர்மமற்றது. வருங்காலத்தில் ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மைகளைச் சிதைக்கும் போக்கு அதிகரிக்கும்.” எனக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் தட்சின கர்நாடக மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார்.

Sasikanth senthil
Sasikanth senthil

சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்தது தேசவிரோதச் செயல் என கர்நாடக முன்னாள் அமைச்சர் அனந்த குமார் ஹெட்ஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வீடியோ ஒன்றைப் பதிவேற்றியுள்ளார். அதில் ``பெரும்பான்மையின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் எடுத்த முடிவை விமர்சனம் செய்வதை விட பெரிய தேச துரோகச் செயல் எதுவும் இல்லை.

செந்தில் செய்ய வேண்டிய முதல் விஷயம் அவரது நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பவர்களுடன் பாகிஸ்தான் செல்வதுதான். இது மிகவும் எளிதானது மேலும் நிரந்தரமான தீர்வும் கூட. இங்கிருந்து நாட்டை அழிப்பதற்குப் பதிலாக அங்கு போய் நாட்டுக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட்டத்தை தொடங்கட்டும். அரசு அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரிடமோ பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களின் சொற்களுக்கு ஏற்ப இசைந்து கொடுக்கிறார்” எனக் கடுமையாகப் பேசியுள்ளார். அவரது இந்தப்பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.