Published:Updated:

கோவா: மம்தா கட்சிக்குத் தாவிய காங்கிரஸ் வேட்பாளர் - பரிதாப நிலையில் காங்கிரஸ்!

மம்தா பானர்ஜியுடன் ரெஜினால்டோ
News
மம்தா பானர்ஜியுடன் ரெஜினால்டோ

கோவாவில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வேறு கட்சிகளுக்குச் செல்வதால் தற்போது வெறும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர்.

கோவாவில் 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 17 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்க, காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதலாக ஒரு சில எம்.எல்.ஏ-க்களே தேவைப்பட்ட நிலையில், சுயேச்சை எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுத்து பா.ஜ.க ஆட்சியமைத்தது. அதன் பிறகு படிப்படியாக காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவராக பா.ஜ.க பக்கம் செல்ல ஆரம்பித்தனர். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் கோவாவில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு வெறும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தனது கட்சியை வளர்ப்பதற்காக, கோவாவில் தன் பார்வையைத் திருப்பியிருக்கிறார். சிறிய மாநிலங்களென்றால் எளிதில் கட்சியை வளர்த்துவிட முடியும் என்ற திட்டத்தில் மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்திருக்கிறார். ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் லூசினோ பெலைரோ திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் சேர்ந்தார்.

திகம்பர் காமத்
திகம்பர் காமத்

அவருக்கு மம்தா பானர்ஜி மாநிலங்களை உறுப்பினர் பதவி கொடுத்திருக்கிறார். இதனால் அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் வேறு சிலரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குச் செல்லலாமா என்ற எண்ணத்திலிருந்தனர். இந்த நிலையில், திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏ அலெய்ஸோ ரெஜினால்டோ அந்தக் கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி, கோவா சட்டமன்றத் தேர்தலுக்கு எட்டு பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலைச் சமீபத்தில்தான் வெளியிட்டது. அதில் ரெஜினால்டோவின் பெயரும் இருக்கிறது. அப்படியிருந்தும் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டார். அவர் விலகலைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இப்போது வெறும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் திகம்பர் காமத் கூறுகையில், ``காங்கிரஸ் கட்சி எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளைப் பார்த்திருக்கிறது. ரெஜினால்டோ கட்சியிலிருந்து விலகியது தற்கொலை செய்துகொண்டது போன்றதாகும். தற்கொலை முடிவில் இருக்கும் யாரையும் காப்பாற்ற முடியாது" என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காங்கிரஸ் கட்சியின் கோவா பொறுப்பாளர் தினேஷ் குண்டு இது குறித்து கூறுகையில், ``நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். ரெஜினால்டோ எங்களுக்கு எப்படி துரோகம் செய்தார் என்பதை மக்களிடம் தெரிவிப்போம்" என்றார். ரெஜினால்டோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியில் சேரத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதை காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில், அவர் மம்தா கட்சியில் இணைந்துவிட்டார்.