Published:Updated:

`ஓ.பி.எஸ் - எடப்பாடிக்கு ஆளுநரின் அட்வைஸ் முதல் பன்னீரின் மனபாரம் வரை..!' - கழுகார் அப்டேட்ஸ்

வாட்ஸ்அப் தகவல் ஒளிர்ந்தது. `நேரான பாதையிலிருந்து விலகியவன் ஒருபோதும் இலக்கை அடைய மாட்டான்!’ காந்தியின் பொன்மொழிகளுடன், `மெயில் செக் செய்யவும்’ என்ற தகவலையும் அனுப்பியிருந்தார் கழுகார். மெயிலில் தகவல்கள் குவிந்திருந்தன.

எடப்பாடியின் கடைசி அஸ்திரம்!
மெளனமான நேரம்... பன்னீர் மனதிலென்ன பாரம்!

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களையெல்லாம் அக்டோபர் 6-ம் தேதி தலைமைக் கழகத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். காந்தி பிறந்தநாளான்று அகிம்சை வழியில் தனது கடைசி அஸ்திரத்தை ஏவியிருக்கிறாராம் எடப்பாடி. அதாவது, `முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்களால் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் சொல்லட்டும்... அதுதான் மக்களின் குரலாக இருக்கும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அதற்கு நான் தலைவணங்குகிறேன்!’ என்று முக்கிய நிர்வாகிகளிடம் போனைப் போட்டுச் சொல்ல, எவராலும் அதை மறுத்துப் பேச முடியவில்லையாம். பன்னீர் தரப்பிடம் இதைச் சொன்னபோது சில நிமிடங்கள் பதிலே பேச முடியாமல் மனபாரத்துடன் மெளனத்தில் ஆழ்ந்தாராம். பிறகு அமைதியாகத் தலையாட்டினார் என்கிறார்கள்.

எடப்பாடி - பன்னீர்
எடப்பாடி - பன்னீர்

எடப்பாடியின் திட்டம் பற்றிப் பேசியவர்கள், ``கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திலும், செயற்குழுவிலும் பன்னீருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள் அனைவருமே கட்சியின் நிர்வாகிகளே. அதுவும் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருப்பவர்கள்தான் எடப்பாடிக்கு எதிராகப் பேசினார்கள். ஆனால், எம்.எல்.ஏ-களால் அப்படிப் பேச முடியாது. தற்போது அ.தி.மு.க-வில் சபாநாயகரைத் தவிர்த்துவிட்டு 124 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நன்றாக `கவனித்து’க்கொள்கிறார் எடப்பாடி. தவிர, அக்டோபர் 7-ம் தேதிக்குள் எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருக்குமே சர்ப்ரைஸ் `பரிசு’ ஒன்றும் இருக்கிறது என்று எடப்பாடி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. எனவே, அக்டோபர் 6-ம் தேதி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டி, முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் கிட்டத்தட்ட குரல் ஓட்டெடுப்புபோல நடத்தத் திட்டமிட்டிருக்கிறது எடப்பாடி தரப்பு. 124 பேரில், சுமார் 100 ப்ளஸ் எம்.எல்.ஏ-க்கள் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறது எடப்பாடி தரப்பு’’ என்றார்கள். இதற்கிடையே எம்.எல்.எல்-க்கள் கூட்டம் குறித்து அக்டோபர் 2-ம் தேதி முற்பகல் ட்விட்டரில் வெளியிட்டிருந்த தகவலை அன்றைய தினம் மாலையே நீக்கியிருக்கிறது கட்சித் தலைமை. கூட்டம் நடக்குமா, நடக்காதா, ரத்துசெய்யப்பட்டுவிட்டதா என்றெல்லாம் குழப்பத்திலிருக்கிறார்கள் எம்.எல்.ஏ-க்கள்.

`பாதை மாறிப்போனவர்கள் ஒருபோதும் இலக்கை அடையப்போவதில்லை...’ காந்தியின் வார்த்தைகள் எக்காலத்துக்கும் பொருந்தும்!

வலதுபக்கம் எடப்பாடி... இடதுபக்கம் பன்னீர்...
அட்வைஸ் செய்தாரா ஆளுநர்?

இதுவும் எடப்பாடி - பன்னீர் விஷயம்தான். காந்தி ஜயந்தி அன்று காலையில், சென்னை மெரினா கடற்கரையிலிருக்கும் காந்தி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவுக்காக காலை 9:45 மணிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வந்துசேர்ந்தார். பின்னாலேயே 9:50 மணிக்கு முதல்வர் பழனிசாமி வந்தார். கடந்த சில நாள்களாக எதிரும் புதிருமாக இருந்தவர்கள், இந்த நிகழ்ச்சியில் அந்தச் சுவடே தெரியாத வகையில் பரஸ்பரம் வணக்கம் வைத்துக்கொண்டார்கள். மேலும், ஆளுநர் வருகைக்காகக் காத்திருந்த பத்து நிமிட இடைவெளியில், பன்னீர் முகத்தைப் பார்த்து எடப்பாடி புன்னகைப்பதும், எடப்பாடி முகத்தைப் பார்த்து பன்னீர் புன்னகைப்பதுமாக இருக்க... இருவர் அணிந்திருந்த மாஸ்க்கைத் தாண்டி `மாஸ்’ காட்டின புன்னகை மன்னர்களின் பூ விழிகள்! இதைக் கண்டு சுற்றியிருந்த சில அமைச்சர்களே, `என்னடா இது... நமக்கு வந்த சோதனை!’ என்கிறரீதியில் சற்றே நெளிந்துதான் போனார்கள்.

எடப்பாடி பழனிசாமி - ஆளுநர் பன்வாரிலால் - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - ஆளுநர் பன்வாரிலால் - ஓ.பன்னீர்செல்வம்

சரியாக 10:10 மணிக்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இவர்களின் `மைண்ட் வாய்ஸ்’-ஐ கேட்ச் செய்தவராக இருவரின் கரங்களைப் பற்றி அரவணைத்தே காந்தி சிலைக்கு அழைத்துச் சென்றார். காந்தி சிலைக்கு முதலில் ஆளுநர் மலர் தூவ, அடுத்தடுத்து முதல்வரும் துணை முதல்வரும் மலர் தூவினார்கள். தொடர்ந்து காந்திய அமைப்பினர் ராட்டை சுற்ற, அதை மூவரும் பார்வையிட்டார்கள். நடுவே ஆளுநர் அமர்ந்திருக்க வலதுபக்கம் எடப்பாடியும், இடதுபக்கம் பன்னீரும் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். முதலில் எடப்பாடியிடம் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாகத் தீவிரமாக ஆளுநர் ஏதோ சொல்ல... அதை ஆமோதிப்பதுபோல வேக வேகமாகத் தலையை ஆட்டினார் எடப்பாடி. அடுத்ததாக பன்னீர் பக்கம் திரும்பி ஐந்து நிமிடங்கள் பேசினார் ஆளுநர். அவரும் புரிந்ததுபோலத் தலையாட்டினார். இருவருக்கும் ஆளுநர் அட்வைஸ் செய்ததாகச் சொல்கிறார்கள் கட்சி வட்டாரத்தில். இதைத் தொடர்ந்து பன்னீர் தனது கிரீன்வேஸ் வீட்டுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து தேனிக்குக் கிளம்பிவிட்டார். எல்லாம் சரி... ஆளுநர் என்ன பாஷையில் இருவரிடமும் பேசியிருப்பார் என்று ராஜ்பவன் வட்டாரத்தில் விசாரித்தோம்... ``என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்... ஆளுநர் தமிழறிஞர் ஒருவரைவைத்து தமிழ் கற்றுவருகிறார்... அவருக்குக் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேச வரும்’’ என்றார்கள்.

ஆக, கொஞ்சு தமிழில் பேசியிருப்பாரோ ஆளுநர்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்...
`அமைதி காக்கும்’ காக்கித் தலைமை

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகிவிட்டன. அவற்றைத் தடுக்கும் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்த ரவி மாற்றப்பட்டு மூன்று மாதங்களாகின்றன. இதுவரை அந்தப் பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை. அந்தப் பதவியைக் கூடுதல் பொறுப்பாக சீமா அகர்வால் ஐ.பி.எஸ் கவனித்துவருகிறார். இவர், தமிழக காவல்துறையின் தலைமையகக் கூடுதல் டி.ஜி.பி-யாகவும் இருக்கிறார்.

 பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

இரண்டுமே மிகவும் சென்செட்டிவ்வான பதவிகள் என்பதால், ஒன்று சீமாவை பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவை மட்டும் கவனிக்கும்படி நியமிக்கலாம் அல்லது தமிழக போலீஸில் பெண் உயரதிகாரிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு நியமிக்கலாம். ஆனால், காவல்துறை தலைமை அமைதியாக இருப்பது ஏனோ என்று புலம்புகிறார்கள் நடுநிலையான அதிகாரிகள்!

தமிழகம், உத்தரப்பிரதேசமாக மாறுவதற்குள் உத்தரவு போடுங்க டி.ஜி.பி சார்!

உளவுப்பிரிவுக்கு புது உத்தரவு!
சுடச்சுட பறக்கும் தகவல்கள்

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலுள்ள உளவுப்பிரிவு (எஸ்.பி.சி.ஐ.டி) அதிகாரிகளுக்கு புது உத்தரவு ஒன்று பறந்திருக்கிறது. மாவட்டம் தொடங்கி வட்டம் வரை யார் யாரெல்லாம் பன்னீரின் ஆதரவாளர்கள், அவர்கள் ரகசியக் கூட்டம் போடுகிறார்களா என்று கண்காணிப்பதுடன், அவர்களது போன் தொடர்புகளை ஆராய்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் அந்தப் புது உத்தரவு. தினப்படி தகவல்கள் ஆட்சி மேலிடத்துக்குச் சுடச்சுட அனுப்பப்படுகிறதாம்.

பார்த்து... சூடு கையைச் சுட்டுற போகுது!

ரெடி... ஸ்டார்ட்... கேமரா ஆஃப்!
சீர்காழியில் காக்கி கறுப்பு ஆடுகள்

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தல் வெகு ஜோராக நடக்கிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையும் சக்கைபோடு போடுகிறது. இவற்றையெல்லாம் கண்காணிக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் சீர்காழி நகரமெங்கும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியது காவல்துறை. ஆனால், சொல்லிவைத்தாற்போல சில பகுதிகளில், சில மணி நேரங்கள் அந்த கேமராக்கள் செயலிழந்துவிடுகின்றன. குழம்பிய உயரதிகாரிகள் இது குறித்து டெக்னீஷியன்களை அனுப்பி விசாரித்தபோது, அவை சிலரால் வேண்டுமென்றே செயலிழக்கவைக்கப்பட்டது தெரியவந்தது. அதிகாரிகள் மேலும் விசாரிக்க... `மாமூல் தடைபடாமல் வர வேண்டும்’ என்பதற்காக துறைக்குள்ளேயே சில கறுப்பு ஆடுகள் தென்பட்டனவாம். அவர்களை அழைத்த அதிகாரிகள், `திரும்பவும் இப்படி நடந்தால் ஆட்டை அறுத்து பிரியாணி போட்டுவிடுவேன், ஜாக்கிரதை’ என்கிறரீதியில் கடுமையாக அவர்களை எச்சரித்து அனுப்பினார்களாம்.

மணல் திருட்டு
மணல் திருட்டு

இந்தப் பிரச்னையால் காவல்துறைக்கு இன்னொரு சிக்கலும் ஏற்பட்டிருக்கிறது. சில நாள்களுக்கு முன்னர் சீர்காழியில் வீட்டு வாசலில் கோலமிட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராக்கள் பழுதாக்கப்பட்டிருந்ததால், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய ரியாஸ் என்பவரைக் கைது செய்வதற்குள் போலீஸுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டதாம். ஒருவழியாக தனியார் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை வைத்துத்தான் கொலையாளியை போலீஸார் பிடித்தார்களாம்.

சீர்காழியைச் சீரழித்துவிடாதீர்கள் காக்கிகளே!

மிரட்டிய மேலிடம்...
அரண்டுபோன இ.எஸ்.ஐ அதிகாரி!

தென் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ பிரிவில் பணிபுரியும் அதிகாரி ஒருவரின் டார்ச்சர் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதன் ஃபாலோ அப் தகவல்தான் இது. அந்த அதிகாரி நிறைய `வாரி இறைத்து’தான் இந்தப் பதவிக்கு வந்தாராம். ஆரம்பத்தில் அவருக்கு `இன்சார்ஜ்’ பதவி மட்டும்தான் அளிக்கப்பட்டிருந்ததாம். தன்னை `ரெகுலர்’ பதவியில் நியமிக்க துறை மேலிடத்துக்கு வேண்டப்பட ஒருவருக்கு சில பரிமாற்றங்களைச் செய்திருந்தாராம். சில வாரங்களுக்கு முன்னர் அந்த நபர் இறந்துவிட்டார். பதறியடித்துக்கொண்டு துறை மேலிடத்தைச் சந்தித்திருக்கிறார் இ.எஸ்.ஐ அதிகாரி. மறுபடியும் `கவனித்தால்’ மட்டுமே ரெகுலர் பதவி என்று மேலிடம் கறார் காட்டியதால், வேறு வழியில்லாமல் மேலும் சில பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதன் பிறகே அவருக்கு ரெகுலர் பதவி கிடைத்திருக்கிறது.

இ.எஸ்.ஐ மருத்துவமனை
இ.எஸ்.ஐ மருத்துவமனை

இந்த நிலையில்தான் `டிஜிட்டல் கழுகார்’ பகுதியில் அவரது வசூல் வேட்டை பற்றிய செய்தி வெளியானது. செய்தியைப் பார்த்த பிறகு பலரும் அந்த அதிகாரிமீது புகார்களைத் தட்டிவிட, தற்போது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மேலிடம் முடிவு செய்திருக்கிறதாம். நொந்துபோன அதிகாரி, மேலிடத்தைத் தொடர்புகொண்டு `உங்களுக்குச் செய்ய வேண்டியதைச் செஞ்சுட்டுதானே நான் வசூல் பண்ணினே...’’ என்று இழுக்கவும்... ``ஆமா, நீங்க யாரு... ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க... இன்னொரு முறை போன் பண்ணினா ஜெயிலுக்கு அனுப்பிடுவேன்’’ என்று பதில் வரவே, அரண்டுபோன அதிகாரி `கப்சிப்’ என்றிருக்கிறாராம்.

பேராசை பெருநஷ்டம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`கொலைகாரக் கூட்டணி’
அலறும் உடன்பிறப்புகள்!

தி.மு.க கிச்சன் கேபினெட் சமீபத்தில் தண்ணீர் பாட்டில் பிசினஸைத் தொடங்கியிருப்பது குறித்து `மிஸ்டர் கழுகு’ பகுதியில் கூறியிருந்தேன் அல்லவா... அதில் ஓர் அப்டேட். இந்தத் தொழிலில் கிச்சன் கேபினெட்டுடன் மதுரைக்காரர் ஒருவர் பார்ட்னராக இணைந்திருக்கிறாராம். அவர்மீது ஏற்கெனவே கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தி.மு.க-வில் இருப்பவர்களே முகம் சுளிக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் பிடிக்கப்படும் குறிப்பிட்ட ரக மீன்களுக்கு கிச்சன் கேபினெட்டில் டிமாண்ட் அதிகம்.

மீன்
மீன்
Representational Image

இதற்காகவே, வாரம் இரு முறை அங்கிருந்து மீன்களை ஐஸ் பெட்டிகளில் வைத்து கிச்சனுக்கு சப்ளை செய்கிறாராம் அந்த மதுரைக்காரர். அந்த மீன் தொடர்பில்தான் இப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் தண்ணீர் பாட்டில் பிசினஸை இருவரும் இணைந்து ஆரம்பித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

அடுத்து மீன் வியாபாரம் பண்ணுவாங்களோ!

விவசாயிகளைச் சந்திக்கும் அண்ணாமலை!

வேளாண் மசோதா தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை உன்னிப்பாக கவனித்துவருகிறது மத்திய அரசு. ஒவ்வொரு கட்சியும் என்ன நிலைப்பாடு எடுக்கிறது... வெறும் கோஷம் போடுவதுடன் முடித்துக்கொள்கிறார்களா அல்லது விவசாயிகளிடம் தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்கிறார்களா என்பதையெல்லாம் உளவுத்துறை மூலமாக விசாரித்திருக்கிறது மத்திய அரசு.

அண்ணாமலை
அண்ணாமலை

இதைத் தொடர்ந்து பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலையை வைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் மசோதா தொடர்பான பாசிட்டிவ் விஷயங்களைச் சொல்லி, விளக்கக் கூட்டங்களை நடத்தும்படி டெல்லி உத்தரவிட்டிருக்கிறதாம். மேலும், `இந்த மசோதா விவசாயிகளுக்கு எப்படியெல்லாம் பயனளிக்கும் என்பதை பிட் நோட்டீஸ் அடித்து கிராமம்தோறும் வழங்குங்கள்’ என்று ஜே.பி.நட்டா உத்தரவிட்டிருக்கிறாராம்.

அங்கலட்சணங்களுடன் பசுமாடு தானம்...
தேடுதல் வேட்டையில் டெல்டா அமைச்சர்!

தமிழகத்தின் டெல்டா மாவட்ட அமைச்சர் அவர். `தென்னையை வெச்சா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு’ என்ற பழமொழிக்கு ஏற்ப, அவ்வப்போது மகனால் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுகிறார். இது போதாதென்று அவரது துறையில் சமீபத்தில் பூதாகரமாகக் கிளம்பிய ஊழல் விவகாரம் ஒன்று, டெல்லி வரை கோபத்தைக் கிளப்பயிருக்கிறது. இதனால், சீர்காழியைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவரை அமைச்சர் தரப்பு சந்தித்து, ``மாந்திரீக பூஜையால் பிரச்னையைச் சரிசெய்ய முடியுமா?’’ என்று விவாதித்திருக்கிறது. ஜோதிடரோ,``ராகு, கேது பெயர்ச்சியால் அமைச்சருக்கு நேரம் சரியில்லை.

கோ பூஜை
கோ பூஜை
Representational Image

இப்போது என்ன செய்தாலும் சரியாகாது. கோயில்களுக்குப் பசு மாடுகளைத் தானம் செய்யுங்கள். குறிப்பாக, அதிகாலை நேரத்தில் அமைச்சரே மாடுகளைப் பிடித்துக்கொண்டு கோயில் வளாகத்துக்குள் வலது காலெடுத்துவைக்க வேண்டும். அப்போதுதான் பிரச்னையின் வீரியம் குறையும்’’ என்றதுடன், எப்படிப்பட்ட பசுமாடுகளை தானம் செய்ய வேண்டும் என்பது குறித்தும், மாட்டின் அங்க லட்சணங்களுடன் சில சுழிகளையும் சொல்லியிருக்கிறாராம். இதைத் தொடர்ந்து டெல்டாவில் பசு மாடுகளைத் தேடிவருகிறது அமைச்சர் தரப்பு.

பசு மாடுகள் ஜாக்கிரதை!

எட்டு மாவட்ட அதிகாரி
கொட்டுது டாஸ்மாக் வசூல்!

டாஸ்மாக் நிறுவனத்தில், தென் மாவட்டத்திலிருக்கும் உயரதிகாரி ஒருவர்மீது ஏகப்பட்ட புகார்கள் வரிசைகட்டுகின்றன. மதுரை, தேனி, தூத்துக்குடி உட்பட எட்டு மாவட்டங்களுக்கு இவர்தான் உயரதிகாரியாம். மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் இருக்கும் இவரது கட்டுப்பாட்டில் ஆயிரம் டாஸ்மாக் கடைகளுக்கு மேல் இருப்பதால், மாதம்தோறும் மாமூல் வசூல் கோடிகளைத் தாண்டுகிறது. இது இல்லாமல் வாரம்தோறும் ஏதாவது ஒரு மாவட்டத்தில் `திடீர் ஆய்வு’ என்கிற பெயரில் திகிலைக் கிளப்பி, ஒவ்வொரு கடையிலும் இருபதாயிரம் ரூபாயைச் சுளையாகக் கறந்துவிடுகிறாராம்!

டாஸ்மாக் மது
டாஸ்மாக் மது

சமீபத்தில் இவர் தன் நண்பர்களுடன் திண்டுக்கல் மாவட்டத்துக்கு விசிட் அடித்திருக்கிறார். பகலிலேயே அனைவரும் `உற்சாக’ போதையுடன் பிரபலமான பிரியாணிக்கடையில் ஒரு பிடி பிடித்திருக்கிறார்கள். அத்துடன் கிலோ கணக்கில் திண்டுக்கல் ஜிலேபி, தார் கணக்கில் சிறுமலை வாழைப்பழம் என காரில் ஏற்றிக்கொண்டு, பில்லை ஏரியா டாஸ்மாக் மேலாளரிடம் கொடுத்திருக்கிறார். கிளம்புவதற்கு முன்னதாக ஒவ்வொரு கடையிலும் வசூலித்த மாமூல் பணத்தை எண்ணினாராம். ஒரு கடையில் கொடுத்த கவரில் மட்டும் ஐந்தாயிரம் ரூபாய் குறைவாக இருந்திருக்கிறது. வண்டியை திருப்பிக்கொண்டுவந்து அந்தக் கடையில் சண்டையிட்டிருக்கிறார். அவர்களோ மொத்தப் பணத்தையும் கொடுத்துவிட்டதாகச் சத்தியம் செய்திருக்கிறார்கள். பிறகுதான் தன்னுடன் வந்த `மப்பு’ நண்பர் ஒருவரே தொகையை ஆட்டையைப் போட்டது தெரிந்திருக்கிறது. தலையில் அடித்துக்கொண்டு புலம்புகிறது டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பு.

`போதை ஏறிப்போச்சு... புத்தி மாறிப்போச்சு’னு நண்பர் சமாளித்திருப்பாரோ!

சிவகங்கையில் சீட்டு வசூல் ஜோர்
அமைச்சர் உறவினர்கள் அட்டகாசம்!

சிவகங்கையில் சீட்டுப் பணம் கட்டி, பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை இருக்கிறது. குறிப்பாக, ஆவணி மாதத்துக்குப் பிறகு இந்தச் சீட்டு வசூல் தூள்பறக்கும். ஏரியா `மணல்’ அமைச்சருக்கு நெருக்கமான உறவுக்காரர்கள்தான் இந்த வசூலில் பெரும்பாலும் ஈடுபடுகிறார்கள். நல்ல பொருள்களுக்கு பதிலாக கொரியாவிலிருந்து இறக்குமதியாகும் `டம்மி’ பொருள்களைக் கொடுத்துவிடுகிறதாம் இந்தக் கும்பல்.

முட்டிமோதும் எடப்பாடி, சசி முதல் தூக்கமிழந்த சீமான் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

பாதிக்கப்படுபவர்கள் யாராவது புகாரளித்தால், அமைச்சரின் பெயரைச் சொல்லி தப்பிவிடுகிறார்களாம். போலீஸாரும் கண்டுகொள்வதில்லை. இதில் அதிகம் பணம் கட்டி ஏமாறுவது அப்பாவி தினக்கூலிகள்தான் என்பதால், பெரிய அளவில் இந்த விவகாரம் வெடித்துக் கிளம்புவதில்லை என்கிறார்கள்.

சீட்டு வசூலுக்கு வேட்டுவைக்குமா சிவகங்கை காக்கி?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு