Published:Updated:

ஜிஎஸ்டி பற்றாக்குறை ரூ.40,000 கோடியை சமாளிக்குமா மத்திய அரசு?

நடப்பு நிதியாண்டில், மாதந்தோறும் ஜிஎஸ்டி வசூல் ரூ.8,000 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.7,272 கோடிதான் வந்துள்ளது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி ( vikatan )

பொருளாதார மந்தநிலையைப் போக்கும் முயற்சிகளில் ஒன்றாக, கடந்த வாரம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் வரியைக் குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி கார்ப்பரேட் வரிவிகிதம் 34 சதவிகிதத்திலிருந்து 25.17 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. ரூ.400 கோடிக்கும் குறைவாக டர்னோவர் செய்யும் நிறுவனங்களுக்கான வரியும் 29.15 சதவிகிதத்திலிருந்து 25.2 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் பல்வேறு ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைத்து அறிவித்தார்.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி
vikatan

மத்திய அரசு எதிர்பார்த்ததுபோலவே பங்குச்சந்தை புத்துயிர் பெற்றது. ஒரே வர்த்தக நாளில் வரலாற்று ஏற்றம் கண்டது. ஆனால் இந்த அறிவிப்பு, மத்திய அரசுக்குக் கூடுதல் இழப்பாக இருக்குமென்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தார்கள். ஏற்கெனவே, ரிசர்வ் வங்கியின் கையிருப்பான உபரித்தொகையையும் மத்திய அரசு கையகப்படுத்திய நிலையில், இதை ரிஸ்க்கான அறிவிப்பாகப் பார்த்தார்கள். அதேபோல தற்போது, இந்த வரிக்குறைப்பால் இந்த நிதியாண்டின் ஜிஎஸ்டி வரி வசூலில் ரூ.40,000 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி வசூலைப் பொறுத்தவரை, மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய், ஒவ்வொரு நிதியாண்டும் 14 சதவிகிதத்துக்குமேல் அதிகரிக்க வேண்டும். அதைவிட குறையும்பட்சத்தில் ஈடுசெய்வதற்காக மத்திய அரசு நிதிஉதவி செய்யும். நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், மாநிலங்களுக்கான இழப்பீடாக மட்டும் ரூ.45,784 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி
vikatan

நடப்பு நிதியாண்டில், மாதந்தோறும் ஜிஎஸ்டி வசூல் ரூ.8,000 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.7,272 கோடிதான் வந்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் பற்றாக்குறையாக இருக்கும்போது, மாநிலங்களுக்கும் இழப்பீடு வழங்கவேண்டியிருப்பதால், கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது. இதை மத்திய அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்பது கேள்விக்குறி!