Published:Updated:

வசூல் வேட்டையில் மூவரணி முதல் ஹேண்ட்பேக்கில் தங்கக்காசு வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

கழுகாரிடமிருந்து அழைப்பு. ``போயஸ் கார்டன் செல்கிறேன். ரஜினி தரப்பு நண்பர்கள் சிலருடன் ஒரு சந்திப்பு. உமக்கான தகவல்களை வாட்ஸ்அப்பில் அனுப்புகிறேன்’’ என்று சொல்லிவிட்டு, தொடர்பைத் துண்டித்தார். சிறிது நேரத்தில் கழுகார் அனுப்பிய தகவல்கள் நம் வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தன.

வசூல் வேட்டையில் மூவரணி!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் சுமார் 1,000 சமையல் பணியாளர்களுக்கான நியமனம் நடக்கிறது. வழக்கமாக, மாவட்ட அளவில் இதற்கான நேர்காணல் நடத்தி, பணி நியமனம் செய்வார்கள். ஆனால் இப்போதோ, சென்னை தலைமைச் செயலகத்தில் லிஸ்ட் ரெடியாகிறதாம்.

பணம்
பணம்
Representational Image

புது நியமனங்களில் கரன்ஸி விளையாடுவதாகக் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. எட்டு முதல் பத்து லகரம் வரை பேரம் நடப்பதாகக் கூறுகிறார்கள். திருச்சியிலுள்ள ஓர் அதிகாரி, எழிலகத்திலிருக்கும் மற்றோர் அதிகாரி, துறை மேலிடத்தின் உதவியாளர் ஒருவர் என்று மூன்று சேனல்கள் படு பிஸியாக வசூல் வேட்டையை நடத்துகின்றனவாம். ஓரிரு மாவட்டங்களில் புது நியமனம் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

`சமையல்’ படுஜோரா நடக்குதுபோல..!

‘‘ `முந்தானை முடிச்சு’ படம் பாத்திருக்கீங்களா?’’
முகம் சுளிக்கவைத்த உயரதிகாரி

அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள், கல்வித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற இந்தத் திட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு பெண் அலுவலர், ``படிக்க வர்றவங்களுக்கு ஏஜ் லிமிட் எதுவும் உண்டா... எந்த வயசு வரைக்கும் உள்ளவங்களை இந்தத் திட்டத்துல சேர்க்கணும்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். உடனே ஜாலி மூடுக்குப்போன மாவட்ட உயர்கல்வி அதிகாரி ஒருவர், ``இங்கே வந்திருக்குற எல்லாரும் `முந்தானை முடிச்சு’ படம் பார்த்திருக்கீங்களா... அந்தப் படத்துல வர்ற மாதிரிதான்... ஏஜ் லிமிட்டே கிடையாது.

வசூல் வேட்டையில் மூவரணி முதல் ஹேண்ட்பேக்கில் தங்கக்காசு வரை! - கழுகார் அப்டேட்ஸ்
மாதிரி படம்

படிப்பு சொல்லிக் கொடுக்குற தன்னார்வலர்கள், முடிஞ்சவரைக்கும் பெண்களாக இருந்தால் ரொம்ப நல்லது. அப்போதான் நிறைய பேர் ஆர்வமா படிக்க வருவாங்க’’ என்று உற்சாகமாகச் சொல்லியிருக்கிறார். `முந்தானை முடிச்சு’ படத்தில் வரும் பட்டு டீச்சரைப்போல, வெறும் கவர்ச்சியால்தான் திட்டத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க முடியும் என்கிற அர்த்தத்தில் உயரதிகாரி கமென்ட் அடித்தது, கூட்டத்தில் கலந்துகொண்ட பெண் அலுவலர்களை முகம் சுளிக்கவைத்திருக்கிறது.

அட ராமா, இப்படியெல்லாமா அதிகாரி பேசுவாரு?

ஹேண்ட் பேக்கில் குலுங்கும் தங்கக்காசு!

வேலூர் மாவட்டச் சமூக நலத்துறையில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி, வசூல் வேட்டையில் அதிக கவனம் செலுத்துகிறாராம். குழந்தைத் திருமணம் குறித்துத் தகவல் கிடைத்ததும், விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பார்ட்டிகளிடம் பேரம் பேசி, வழக்கு எதுவும் பதியாமல் அமுக்கிவிடுகிறாராம். பணமாக வாங்குவதற்கு பதில் தங்கக் காசுகளாக வேண்டும் என்றும் கேட்டு வாங்குகிறாராம்.

தங்கக் காசு
தங்கக் காசு

இதனால், பெண் அதிகாரியின் ஹேண்ட் பேக்கில் தங்கக்காசுகள் குலுங்குவதாகக் கூறுகிறார்கள். இவரால், நேர்மையான சில அலுவலர்களும் தங்களின் பணியைச் செய்ய முடியாமல் குழந்தைத் திருமணங்களை வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்களாம்.

மைனர் திருமணங்கள்ல வேலூர் ஏன் முன்னணியில இருக்குன்னு இப்பதானே புரியுது!

ஒரு மணி நேரத்தில் மாற்றப்பட்ட ஆணையர்!

குன்னூர் நகராட்சி கமிஷனராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பாலு, தன் செயல்பாடுகளால் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுவந்தார். இந்தநிலையில், கடந்த வாரம் குன்னூர் பெட்ஃபோர்டு பகுதியில் விதிமீறிக் கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டடத்துக்கு சீல்வைக்கச் சென்றிருக்கிறார். அந்தக் கட்டடம், அ.தி.மு.க-வின் குன்னூர் முக்கியப் பிரமுகர் ஒருவருக்குத் தொடர்புடையது என்பதால், சீல் வைக்கவிடாமல் ஆளும்கட்சியினர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். அதையும் மீறி அந்தக் கட்டடத்துக்கு பாலு சீல் வைத்திருக்கிறார்.

மேட்டுப்பாளையம் குன்னூர் சாலை
மேட்டுப்பாளையம் குன்னூர் சாலை

கடுப்பான அந்த முக்கியப் பிரமுகர், கொங்கு அமைச்சர் ஒருவரிடம் பஞ்சாயத்துக்குச் செல்ல... ஒரு மணி நேரத்தில் ஆணையர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார் பாலு. இதற்கு முன்னர் குன்னூர் நகராட்சி ஆணையராக இருந்த சரஸ்வதியும் வீதிமீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். அவரையும் இதுபோலத்தான் குன்னூரிலிருந்து தூக்கியடித்தனர். இப்போது பாலுவும் தூக்கியடிக்கப்பட்டிருப்பது, நகராட்சி அதிகாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகாரிகளைத் தூக்கியடிக்கும் வேகத்தை மக்கள் நலப் பணிகள்ல காட்டலாமே!

குயில் வேட்டையாடியவர்களிடம் பண வேட்டை!

நாகை மாவட்ட வனத்துறையில், தமிழ்க்கடவுள் பெயர்கொண்ட அதிகாரியொருவர் பணியிலிருக்கிறார். சமீபத்தில் குயில் வேட்டையாடிய சிலர் இவரிடம் வசமாகச் சிக்க, ``ஓராண்டுக்குச் சிறையில் அடைத்துவிடுவேன்’’ என்று மிரட்டியிருக்கிறார். மிரண்டுபோன அவர்கள், ``விட்டுடுங்க... இனி, இந்தப் பக்கமே வர மாட்டோம்’’ என்று கெஞ்சியிருக்கிறார்கள்.

ஆசிய குயில் (பெண்)
ஆசிய குயில் (பெண்)
Pixabay

இதற்கிடையில் வேட்டை நபர்களின் உறவினர்களும் அதிகாரியைத் தொடர்புகொள்ள, அவர்களிடம் பேரம் பேசி பெரும் தொகையைக் கறந்துவிட்டாராம் அந்த அதிகாரி.

பெரிய வேட்டைக்காரரா இருப்பார்போலருக்கே!

சிபாரிசு வேண்டுமா... முதல்ல பிரைஸ் லிஸ்ட்டைப் பாருங்க!

தமிழகத்தின் உயர் அமைச்சர் ஒருவர், எந்த விஷயத்துக்கு, எவ்வளவு தட்சணை என்று பிரைஸ் லிஸ்ட் போட்டுத் தயாராக எழுதியே வைத்திருக்கிறாராம்.

ரஜினியுடன் ராம மோகன ராவ் முதல் பா.ஜ.க-வில் வனிதா விஜயகுமார் வரை! கழுகார் அப்டேட்ஸ்

அவரிடம் யாராவது சிபாரிசுக்குப் போனால், அமைச்சர் தரப்பினர் அந்த லிஸ்ட்டைத்தான் முதலில் அவர்களிடம் காட்டுகிறார்களாம். தட்சணையைத் தர அவர்கள் ஒப்புக்கொண்டால்தான் அமைச்சரைப் பார்க்கவே அப்பாயின்மென்ட் கிடைக்கிறதாம்.

ஃபெஸ்டிவெல் ஆஃபர் ஏதும் உண்டா?

தோப்பு வீடுகளில் பாயத் தயாராகும் ரெய்டு!

சமீபத்தில் கொங்கு மண்டலத்தை மையப்படுத்தி வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்தன. அந்த ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு ரத்தத்தின் ரத்தம் ஒருவர் ரகசியத் தகவல் கொடுத்தாராம். `கொங்கு அமைச்சர்கள் சிலர் தங்களிடம் குவிந்திருக்கும் கோடிகளை வட்டிக்குவிடும் தொழிலையும் சைலைன்ட்டாக நடத்துகிறார்கள்.

பத்திரம்
பத்திரம்
Representational Image

பணத்துக்கு ஈடாக அவர்கள் வாங்கி வைத்திருக்கும் சொத்துப் பத்திரங்கள் சில தோப்பு வீடுகளில் வைக்கப்பட்டிருக்கின்றன’ என்று இடங்களின் பட்டியலோடு போட்டுக் கொடுத்திருக்கிறாராம். அவற்றை கிராஸ் செக் செய்யும் பணிகள் வருமான வரித்துறை வட்டாரத்தில் நடக்கிறது. விரைவில் அந்தத் தோப்பு வீடுகளில் ரெய்டுகள் நடக்கலாம்.

பத்தவெச்சுட்டியே பரட்ட...!

பத்திரப்படுத்தப்படும் சிசிடிவி காட்சிகள்!

கொரோனா ஊரடங்கு கடுமையாக அமலிலிருந்த காலத்தில், பத்திரப் பதிவுத்துறை அலுவலக சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்கும்படி அரசின் உயரதிகாரி ஒருவர் வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறாராம். ஆளும்கட்சிப் புள்ளிகள், பிசினஸ் பிரமுகர்கள் பலரும் ஆள் நடமாட்டமில்லாத அந்தக் காலகட்டத்தில், பினாமி பெயரிலிருந்த சொத்துகளைப் பெயர் மாற்றம் செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வந்து சென்றார்களாம்.

சிசிடிவி
சிசிடிவி

சிசிடிவி காட்சிகளைவைத்து பினாமிகளையும் உரிமையாளர்களையும் கண்டறியவே அவற்றை பத்திரப்படுத்தச் சொல்லியிருக்கிறாராம் அந்த அதிகாரி. சிசிடிவி காட்சிகளை யாருக்காக அவர் பத்திரப்படுத்தச் சொல்கிறார் என்பதுதான் பத்திரப் பதிவுத்துறை வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது.

என்னவோ திட்டமிருக்கு!

அடுத்த கட்டுரைக்கு