Published:Updated:

சட்டமேலவை உறுப்பினர் நியமனம்: மகாராஷ்டிரா ஆளுநர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை?!

மகாராஷ்டிராவில் 12 சட்டமேலவை உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக மாநில ஆளுநர் கோஷ்யாரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிரா சட்டமேலவை நியமன உறுப்பினர்கள் 12 பேரை நியமிக்கக் கோரி, மாநில அரசு கடந்த நவம்பர் மாதம் 12 பேர் கொண்ட பட்டியலை ஆளுநர் கோஷ்யாரிக்கு அனுப்பிவைத்துள்ளது. ஆனால், அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் தொடர்ந்து இழுத்தடித்துவருகிறார். இது தொடர்பாக ஆளுங்கட்சி பல முறை கேட்டுக்கொண்டும் ஆளுநர் 12 பேரை நியமித்து உத்தரவிடவில்லை. எப்படியும் சிவசேனா கூட்டணி அரசு சில மாதங்களில் கவிழ்ந்துவிடும். அதன் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்தால் பாஜக-வைச் சேர்ந்தவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்கலாம் என்ற எண்ணத்தில் ஆளுநர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்துவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஆளுநர் இந்த விவகாரத்தில் உடனே முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஆளுநர் கோஷ்யாரி-அமித் ஷா
ஆளுநர் கோஷ்யாரி-அமித் ஷா

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், `ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றாலும், மாநில அமைச்சரவையின் பரிந்துரை மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். முடியும் அல்லது முடியாது என்பதைத் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநர் தனது அரசியல் சாசன கடமையாற்றுவதைத் தவிர்க்கக் கூடாது’ என்று தெரிவித்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவு ஆளுநருக்கு மேலும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. 12 சட்டமேலவை உறுப்பினர்கள் நியமனத்தில் முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சரின் கருத்தைத் தெரிந்துகொள்வதற்காக சனிக்கிழமை காலையிலேயே ஆளுநர் கோஷ்யாரி டெல்லி புறப்பட்டுச் சென்றார் என்ற தகவல் வெளியானது. அவர் மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்டிரா: வெள்ளத்தால் பாதித்த மக்கள்; ஒரு லட்சம் லிட்டர் பால் பாக்கெட் அனுப்பும் சோனு சூட்!

இந்தச் சந்திப்பின்போது 12 நியமன உறுப்பினர்கள் விவகாரம் மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா வெள்ளச்சேதம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்தும் அமித் ஷாவுடன் கோஷ்யாரி ஆலோசனை நடத்தினார் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் பிப்ரவரி மாதம் மும்பை உட்பட மாநகராட்சிகளுக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று பாஜக எதிர்பார்த்தது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமலிருப்பதால் பாஜக அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு