Published:Updated:

`ராகுலின் 143 பயணங்கள்!' - எஸ்.பி.ஜி பாதுகாப்புக்குச் செக் வைத்த உள்துறை அமைச்சகம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது

சோனியா, ராகுல், பிரியங்கா
சோனியா, ராகுல், பிரியங்கா

எஸ்பிஜி என்றழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவானது பிரமரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, பிரதமரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 1985-ம் ஆண்டு சிறப்பு பாதுகாப்புக் குழுவானது உருவாக்கப்பட்டது. 1988-ம் ஆண்டு இதற்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது. இந்தச் சிறப்புப்படை பாதுகாப்புப் பிரிவில் சுமார் 3,000 வீரர்கள் உள்ளனர். அவர்கள் வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர்.

வாஜ்பாய்
வாஜ்பாய்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், இந்தச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதன்படி முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகள் வரை இந்தப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று விதிகள் கொண்டுவரப்பட்டன. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சகத்துடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், ஐ.கே.குஜ்ரால் மற்றும் தேவகவுடா ஆகியோருக்கு வழங்கி வந்த எஸ்பிஜி பாதுகாப்பைத் திரும்பப்பெற்றார்.

`காங்கிரஸ் வலுவாக இருக்கும்வரை தைரியமாக இருப்பேன்!’ - சோனியா சந்திப்புக்குப்பின் சிதம்பரம்

2003-ம் ஆண்டு வாஜ்பாய் அரசு மீண்டும் பதவியேற்றபோது முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகள் வரை பாதுகாப்பு வழங்கப்படும் என்ற விதிகளில் மாற்றம் கொண்டுவந்தார். பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பொறுத்து பாதுகாப்பு காலத்தை நீட்டிக்கும் வண்ணம் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது, பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு மட்டுமே இந்தச் சிறப்புப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குடும்பத்தினர் என்பதாலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்த காரணத்தால் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், இந்த மூவருக்கான எஸ்.பி.ஜி பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் விலக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு மறுஆய்வு கூட்டத்தில் இந்த மூவருக்குமான பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இனி இவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு சமீபத்தில் திரும்பப்பெறப்பட்டது. எஸ்பிஜிக்குப் பதிலாக அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ராகுல் காந்திக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட 156 பயணங்களில் 143 பயணங்களின்போது, எஸ்பிஜியை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.