Published:Updated:

`பரிசீலனையில் இருக்கிறது; விரைவில் மயிலாடுதுறை தனி மாவட்டம்!' - நாகை விழாவில் முதல்வர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நாகையில் ரூ.367 கோடியில் கட்டப்பட உள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் கலந்துகொள்வதற்காகத் திருச்சி விமான நிலையத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி கார் மூலம் நாகைக்கு வருகை தந்தார். முதல் நிகழ்ச்சியாக நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பேசினார். அதன்பின் நாகை ஒன்றியம் ஒரத்தூர் பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையேற்க, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். விழாவுக்காக ஒரத்தூரில் பிரம்மாண்ட மேடையும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் நாற்காலிகளும் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. பல மாவட்டங்களிலிருந்து அரசுப் பேருந்துகளில் அ.தி.மு.க தொண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க ஒரத்தூரில் 60.04 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.376 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, மருத்துவப் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட 21 கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.

அடிக்கல் நாட்டு விழா
அடிக்கல் நாட்டு விழா

விழாவில் பேசிய முதல்வர், அரசின் ஒங்வொரு திட்டத்தையும் சொல்லி, ``என்னுடைய அரசு சிறப்பாகச் செய்து சாதனைப் படைத்து வருகிறது" என்றார். மேலும், ``அடிக்கடி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள், `இந்த அரசால் யாருக்கும் எந்த பயனும் இல்லை' என்று காழ்ப்புணர்ச்சியால் கூறிவருகிறார். சிறப்பாகச் செயல்படும் அரசைப் பாராட்ட மனமில்லை என்றாலும்கூட வசை பாடாமல் இருக்கலாம். விவசாயம் செழிக்க வேண்டும். விவசாயிகள் வாழ்க்கை வளமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நானும் ஒரு விவசாயி என்ற காரணத்தால், இந்த டெல்டாவை, புண்ணிய பூமியைப் பாதுகாக்க 'பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக' என்னுடைய அரசு அறிவித்திருக்கிறது.

அது மட்டுமா... இங்கு நடைபெறவிருந்த ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற அனைத்துத் திட்டங்களையும் தடை செய்து இருக்கிறோம். விவசாயிகளுக்காக நீர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை எளியவர்களுக்குக்கூட மருத்துவ வசதிகள் முறையாகக் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் அம்மாவின் கனவுத் திட்டமான புதிய மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தை இந்த மாவட்டத்தில் என்னுடைய அரசு இன்று நனவாக்கி இருக்கிறது. இந்தியாவிலேயே சாதனைப் படைத்து முதன்மை அரசாக திகழ்கிறது.

விரைவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடலோரப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும். மீனவர்கள் நலன் காக்க மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் எம்.எல்.ஏ-க்கள் வேண்டுகோளின்படி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேண்டுகோளின்படி, நாகை மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அமைக்கப்பதற்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது. விரைவில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு