Published:Updated:

`வேளாண் சட்டங்களை ஆதரித்து தமிழக முதல்வர் மக்களுக்கு துரோகம் செய்கிறார்!’ - ஜி.ராமகிருஷ்ணன்

ஜி.ராமகிருஷ்ணன்
ஜி.ராமகிருஷ்ணன்

'எங்கள் கூட்டணியில் தி.மு.க பெரிய கட்சி. அவர்கள்தான் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வார்கள். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க நாடகம் ஆடுகின்றன' என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``டெல்லியில் போராடக்கூடிய விவசாய சங்கத் தலைவர்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அடுத்த பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று விவசாயச் சட்டங்களையும் வாபஸ் பெறாமல் இருந்தால் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்திருக்கின்றனர். அதற்கு ஆதரவாக நாளை சென்னையில் விவசாய சங்கங்கள் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடத்துகிறோம். மூன்று வேளாண் சட்டங்களையும் முன்பு ஆதரித்த கட்சிகளும், மாநிலங்களும் இப்போது எதிர்க்கின்றன. முன்பு ஆதரித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இப்போது அந்தச் சட்டங்களை எதிர்க்கிறார். விவசாயச் சட்டங்களுகு எதிரான அகில இந்திய பந்த் போராட்டத்தை ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஆதரித்தன. பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மூன்று சட்டங்களை எதிர்க்கின்றன. மூன்று வேளாண் சட்டங்களும் அமலானால், இந்தியாவில் விவசாயத்தின் அனைத்து அம்சங்களும் கார்பரேட்டுகளின் கட்டுப்பாட்டுக்குப் போய்விடும். இப்படிப்பட்ட சட்டத்தை தமிழக முதல்வர் ஆதரித்துப் பேசுகிறார். தமிழக முதல்வர் மக்களுக்கு துரோகம் செய்கிறார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன்
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன்

ஆக்ஸ்போர்டு தயாரிததிருக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி அமலாக்கப்பட்ட பிறகு அதிலிருந்து ரிப்போர்ட் வந்திருக்கிறது. அந்த ரிப்போர்ட்டை மத்திய அரசு வெளியிட வேண்டும். கோவாக்ஸின் தடுப்பு மருந்தை எப்படிச் செயல்படுத்துவது என்று விஞ்ஞானிகள் கருத்தின்படி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி விஷயத்தில் அரசியல் செய்யக் கூடாது. கொரோனா சமயத்தில் மாநில அரசுகள் நிதி திரட்டக் கூடாது என மத்திய அரசு தடுத்தது. அதேசமயம், மத்திய அரசு பிஎம் கேர்ஸ் வழியாக ஃபண்ட் திரட்டினார்கள். அந்தப் பணத்தை இப்போது ரிலீஸ் செய்யவில்லை. 120 கோடி மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், தனியார் வனச்சட்டம் மற்றும் சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலத்தை செயல்படுத்தக் கூடாது. அதைச் செயல்படுத்துவதற்கு முன்பு அப்பகுதி மக்களின் கருத்தறிய வேண்டும். மக்கள் கருத்தறியாமல் இந்தச் சட்டத்தை அமலாக்கத் தொடங்கிவிட்டனர். எனவே, அமலாக்கத்தைத் தடுத்து நிறுத்திவிட்டு, கலெக்டர் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அம்மா மினி கிளினிக்கைத் தொடங்க வேண்டும். 2012-ம் ஆண்டு பூத்துறை கிராமத்து மீனவர்களை இத்தாலி கப்பலில் இருந்தவர்கள் சுட்டதால் இரண்டு பேர் மரணம் அடைந்தனர். அந்தப் படகில் இருந்த காயமடைந்த மற்ற ஒன்பது பேருக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன்
ஜி.ராமகிருஷ்ணன்

தமிழக தேர்தல் ஆணையம், சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியபோது, தமிழகத்தில் ஏற்கெனவே ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது, அது போன்று இந்தத் தேர்தலையும் நடத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். தேர்தல் ஆணையமும் ஒரேகட்டமாக தேர்தல் நடத்துவதாகக் கூறியிருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் தொடரும். தேர்தல் தேதி அறிவித்த பிறகு தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். எங்கள் கூட்டணியில் தி.மு.க பெரிய கட்சி. அவர்கள்தான் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வார்கள். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க நாடகம் ஆடுகின்றன. அமித் ஷாவின் தமிழக வருகையால் பெரிய மாற்றம் ஏற்படாது. ரஜினிகாந்த் பா.ஜ.க நிர்பந்தத்தால் கட்சி அறிவித்தார். இப்போது கொரோனா மற்றும் அரசியல் காரணங்களால் கட்சி தொடங்குவதிலிருந்து ரஜினி பின்வாங்கிவிட்டார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு