Published:Updated:

சசிகலாவைக் கைதுசெய்யப் பச்சைக்கொடி முதல் ஜெயலலிதா பாணியில் எடப்பாடி வரை... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்...
கழுகார் அப்டேட்ஸ்...

``அவசர வேலையாக அந்தமான் வரை செல்கிறேன். உமக்கான செய்திகளை வாட்ஸ்அப்பில் அனுப்பிவைக்கிறேன்’’ என்றபடி ஜூட் விட்டார் கழுகார். சற்று நேரத்தில் பிட்டு பிட்டாக வந்து விழுந்தன செய்திகள்!

சசிகலாவைக் கைதுசெய்ய பச்சைக்கொடி!

பிப்ரவரி 8-ம் தேதி தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க அவரின் ஆதரவாளர்கள் தயாராகிவருகிறார்கள். இதற்கிடையே, `அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்திய சசிகலாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று டி.ஜி.பி-யிடம் அமைச்சர்கள் புகாரளித்திருக்கிறார்கள். இந்தப் புகாரின் அடிப்படையில், பிப்ரவரி 8-ம் தேதி, ஓசூர் வழியாக சசிகலா என்ட்ரி ஆகும்போது, அவர் வாகனத்தில் அ.தி.மு.க கொடி இருந்தால், அதை அகற்றுவதற்கு காவல்துறை தயாராகிறதாம்.

சசிகலா காரில் அ.தி.மு.க கொடி
சசிகலா காரில் அ.தி.மு.க கொடி

சில இடங்களில் அ.தி.மு.க கொடியை சசிகலா ஏற்றிவைக்கவும் கொடிக்கம்பங்கள் தயாராகின்றன. `இது மாதிரி நிகழ்வுகளை அனுமதிக்கக் கூடாது’ என்று முதல்வர் அலுவலகத்திலிருந்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவுகள் பறந்திருக்கின்றன. இதையும் மீறி சசிகலா கொடியேற்றினால், அதைத் தடுத்து நிறுத்தும்படி கட்சிப் பிரமுகர்களுக்கும் தனியாகத் தகவல்கள் போயிருக்கின்றன. இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை வந்தால், அதைவைத்து சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவரைக் கைதுசெய்யவும் பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறதாம்.

#ரணகளக் காட்சிகள் உண்டுனு சொல்லுங்க!

மெரினா ட்ரிப் சர்ச்சை!

வாகனமொன்றை அடைமொழியாகக்கொண்ட, மலை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகி, ஜெயலலிதா நினைவிடத் திறப்புவிழாவில் பங்கேற்கும் மகளிரணிப் பட்டியலை தானே தயாரித்து, தனக்குத் தோதான சில பெண்களை மட்டும் வரச் சொன்னதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இப்படி அழைத்துச் செல்லப்பட்ட பெண்களுக்கு, தான் தங்கியிருந்த அறைக்கு அருகிலேயே ரூம் போட்டுக் கொடுத்தாராம். சில பெண்களுடன் ஷாப்பிங் மால் சென்றதுடன், இரவில் சீட்டாட்டம், மது விருந்து என்று எல்லைமீறி நடந்ததாகக் கூறப்படுகிறது.

Representational Image
Representational Image

இதில் கடுப்பான அ.தி.மு.க-வினர் சிலர், சென்னை சென்ற பெண்களிடம் பேசி அவரின் லீலைகளை ஆடியோவாகப் பதிவுசெய்துவிட்டனர். அவை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி மலை மாவட்டத்தையே கதிகலங்கச் செய்துவிட்டது. `மெரினாவுக்கு ட்ரிப் அழைத்துச் சென்ற நிர்வாகி, கட்சியையே அவமானப்படுத்திவிட்டார்’ என்று தலைமைக்கும் புகார் அனுப்பப்பட்டிருக்கிறதாம்.

#உங்களையெல்லாம் நம்பி...

பச்சைமாலுக்கு திடீர் பதவி!
பின்னணி என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பச்சைமாலுக்கு அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர் அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து வெளியேறி, அ.தி.மு.க-வில் இணைந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது.

சசிகலா என்ட்ரியால் குழப்பத்தில் குமரி அதிமுக... ஓபிஎஸ் மகனுக்கு மோடியின் பரிசு! - கழுகார் அப்டேட்ஸ்

இதுவரை பதவி எதுவும் வழங்காததால் விரக்தியிலிருந்த பச்சைமால், சசிகலா அணிக்குத் தாவும் நிர்வாகிகளின் பட்டியலில் இருந்தாராம்.

பச்சைமால்
பச்சைமால்

இதன் தொடர்ச்சியாகத்தான், பச்சைமாலைச் சமாதானப்படுத்துவதற்காக பிப்ரவரி 3-ம் தேதி திடீரென அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்திருக்கிறதாம் அ.தி.மு.க தலைமை.

#அப்ப... இனி நிறைய பேருக்குப் புதுப்பதவி கிடைக்கும்போலயே?!

நிர்வாகிகளை வறுத்தெடுத்த விஜயபாஸ்கர்!

சமீபத்தில் கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில் அ.தி.மு.க தலைமையிலிருந்து ஒரு சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. அதில், `ஒரே ஒரு தொகுதிதான் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது’ என்று ரிப்போர்ட் வந்திருக்கிறதாம். அதனடிப்படையில், மாவட்ட அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம்,`கிருஷ்ணராயபுரம் தொகுதியைத் தவிர மத்ததெல்லாமே வீக். நீங்க என்னதான் செய்யுறீங்க?’ என்று கட்சித் தலைமை கடிந்ததாகக் கூறப்படுகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

இதனால், கோபத்திலிருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகளை அழைத்து கூட்டம் போட்டு, வறுத்தெடுத்துவிட்டாராம். ``என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. நான்கு தொகுதிகள்லேயும் அ.தி.மு.க ஜெயிக்கணும். கடுமையா வேலை பாருங்க’’ என்று கடுகடுப்புடன் கூறி அனுப்பிவைத்தாராம்.

#ஒரே பாட்டுல சினிமாவுல ஜெயிப்பாங்களே... அப்படித்தானே!

யோகா மையத்திடம் சீறும் அமைச்சர்!

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவருக்குப் பக்கபலமாக இருந்தவர் பிரபல யோகா மைய நிறுவனர். சமீபகாலமாக அவருக்கும் அமைச்சருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறதாம். கடுப்பான அந்த அமைச்சர், பல கூட்டங்களில் யோகா நிறுவனரை ஓப்பனாகவே விமர்சித்துவருகிறாராம். முக்கியமாக, அந்த யோகா மையத்தினர் அமைச்சரைப் பல வருடங்களுக்கு முன்னர் மரியாதைக் குறைவாக நடத்தியிருக்கிறார்கள். பழைய கதையையெல்லாம் குறிப்பிட்டுப் பேசி, `நேரம் வரும்போது நான் யாரென்று காட்டுகிறேன்’ என்று சீறிவருகிறாராம் அந்த அமைச்சர்.

#பாக்கத்தானே போறீங்க... இந்தக் காளியோட ஆட்டத்தை’ என்கிறாரோ அமைச்சர்?

ஜெயலலிதா பாணியில் எடப்பாடி!

முதல்வர் பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில், உளவுத்துறை மற்றும் அ.தி.மு.க ஐடி விங் மூலமாக சமீபத்தில் இரண்டு சர்வேக்கள் எடுக்கப்பட்டனவாம். இரண்டிலுமே பழனிசாமி சிரமப்பட்டுத்தான் தேற வேண்டும் என ரிப்போர்ட் வந்திருக்கிறதாம். இதில் அப்செட்டான பழனிசாமி, சீனியர் அமைச்சர்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதற்கு அவர்கள், `ஜெயலலிதா அம்மா போட்டியிட்ட மாதிரி இரண்டு தொகுதிகள்ல போட்டியிடுங்க. ஒண்ணு க்ளிக் ஆகாட்டியும், இன்னொண்ணு க்ளிக் ஆகிவிடும்’ என்றார்களாம். இதற்காக இரண்டாவது தொகுதியைத் தேட ஆரம்பித்திருக்கிறது எடப்பாடி தரப்பு. கரூர், திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஏதாவது ஓர் தொகுதியில் எடப்பாடி தன் இரண்டாவது வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

#`பயப்படுறியா குமாரு?’ வசனம்தான் நினைவுக்கு வருது!

``நாங்களே பந்தல் போட்டாகூட இவ்வளவு செலவு ஆகாதே!’’
விழிபிதுங்கும் தி.மு.க மா.செ-க்கள்...

`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டம் போட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்துவருகிறார். கூட்டத்துக்கான மேடை அமைப்பு, பந்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஐபேக் நிறுவனமே பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறதாம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதற்காக 25 லட்சம் ரூபாய் கட்டணமாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களிடம் வசூலித்துவிடுகிறார்களாம். இந்தக் கூட்டங்களுக்கு பத்தாயிரம் பேரைத் திரட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதால், அதற்காகும் செலவு 50 லட்சம் ரூபாயைத் தாண்டிவிடுகிறதாம். `நாங்களே மேடை, நாற்காலி, பந்தல் போட்டால் செலவு 15 லட்சம் ரூபாயைத் தாண்டாது. இப்படி பில் எழுதி எங்க கழுத்தை நெரிக்குறாங்களே...’ என்று ஐபேக் மீது குற்றம்சாட்டுகிறது மாவட்டச் செயலாளர்கள் தரப்பு. ஒவ்வொரு கூட்டத்துக்கும் குறைந்தது 75 லட்சம் ரூபாய் செலவு பிடிப்பதால், மா.செ-க்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

#ஒரு கோடிப்பே... நீ பாத்த..? ஆமா... ஒரு கோடிப்பே!

அடுத்த கட்டுரைக்கு