Election bannerElection banner
Published:Updated:

விழுப்புரம்: முன்னாள் அதிமுக மா.செ Vs இன்னாள் அதிமுக மா.செ... முந்துவது யார்?

ஆர்.லட்சுமணன், சி.வி.சண்முகம்
ஆர்.லட்சுமணன், சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டத்தில், திமுக போட்டியிடும் ஆறு தொகுதிகளில் விழுப்புரத்தை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் பழைய வேட்பாளர்களையே மீண்டும் மாற்றமின்றி அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிவிலூர் உட்பட ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நேற்று (12.03.2021) திமுக தலைமை, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் வானூர் (தனி) தொகுதியைத் தன் கூட்டணிக் கட்சியான விசிக-வுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது திமுக. மீதமுள்ள ஆறு தொகுதிகளிலும் தன் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களே போட்டியிடுவார்கள் என அறிவித்துள்ளது. விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியை தவிர மீதமுள்ள ஐந்து தொகுதிகளிலும் புதிய நபர் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சிறிதும் மாற்றமின்றி கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அதே வேட்பாளர்களை மீண்டும் அறிவித்துள்ளது.

திமுக Vs அதிமுக
திமுக Vs அதிமுக

2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களான, செஞ்சி தொகுதியின் கே.எஸ்.மஸ்தான், மயிலம் தொகுதியின் Dr.ரா.மாசிலாமணி, திண்டிவனம் (தனி) தொகுதியின் பி.சீத்தாபதி சொக்கலிங்கம், திருக்கோவிலூர் தொகுதியில் க.பொன்முடி ஆகியோருக்கு மீண்டும் அதே தொகுதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2019-ல் நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய நா.புகழேந்திக்கும் அதே தொகுதியில் மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடைத்தேர்தலில் இவருக்கு போட்டியாகக் களம்கண்ட அதிமுக வேட்பாளர் R.முத்தமிழ்செல்வன் இந்தத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளராக அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மயிலத்தில் ரா.மாசிலாமணிக்குப் போட்டியாக பாமக வேட்பாளர் சி.சிவக்குமார், செஞ்சியில் கே.எஸ்.மஸ்தானுக்கு போட்டியாக பாமக வேட்பாளர் MPS.ராஜேந்திரன், திண்டிவனத்தில் பி.சீத்தாபதி சொக்கலிங்கத்துக்குப் போட்டியாக அதிமுக வேட்பாளர் P.அர்ஜீனன் ஆகியோர் களம் காண்கின்றனர். திருக்கோவிலூரில் க.பொன்முடிக்குப் போட்டியாக பாஜக வேட்பாளர் VAT.கலிவரதன் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே புதிய வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளது திமுக. திமுக-வில் அவர் புதியது என்றாலும் அதிமுக- வின் முன்னாள் எம்.பி- யாக இருந்திருக்கிறார். 2011 சட்டமன்றத் தேர்தலில் சி.வி.சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற க.பொன்முடி, 2016 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சியை விழுப்புரத்தில் போட்டியிட பரிந்துரை செய்துவிட்டு திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் ஐக்கியமானார். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் விழுப்புரத்தில் தோல்வியை தழுவியது திமுக கூட்டணி. இதனால் விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்தின் கை ஓங்கியிருந்தது.

இந்நிலையில்தான் அதிமுக-வில் விழுப்புரம் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்துவந்த மருத்துவர் ஆர்.லட்சுமணன் தடாலடியாக திமுக -வில் இணைந்தார். ஜெயலலிதா மரணத்துக்கு முன் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் ஆர்.லட்சுமணன். ஜெ. மறைவுக்குப் பின் அவரிடமிருந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டு சி.வி.சண்முகத்திடம் கொடுக்கப்பட்டது. சி.வி.சண்முகம் வகித்துவந்த அமைப்புச் செயலாளர் பொறுப்பு ஆர்.லட்சுமணனிடம் கொடுக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிபோன விரக்தியில் இருந்த லட்சுமணன் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திமுக-வில் இணைந்தார். அவருடன் சேர்ந்து அவருக்கு இணக்கமாக இருந்த அதிமுக-வின் 14 மாவட்ட பொறுப்பாளர்களும் திமுக-வில் இணைந்தனர்.

ஆர்.லட்சுமணன், சி.வி.சண்முகம்
ஆர்.லட்சுமணன், சி.வி.சண்முகம்

திமுக- வில் இணைந்த அவருக்கு மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் சி.வி.சண்முகத்துக்கு எதிராக நிற்கும் வெற்றி வேட்பாளருக்காகத் தவித்துவந்த திமுக, விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்து, தற்போது திமுக-வில் பொறுப்பிலிருக்கும் Dr.ஆர்.லட்சுமணனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

இப்போது, முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளருக்கும் இப்போதைய அதிமுக மாவட்ட செயலாளருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளரான ஆர்.லட்சுமணன், திமுக மற்றும் கூட்டணி வாக்குகளைப் பெறுவார் என்றாலும், தனக்கு இணக்கமாகவர்கள் மூலம் அதிமுக-வின் குறிப்பிட்ட வாக்குகளைப் பெறுவார் எனவும் கூறப்படுகிறது. அதிமுக மற்றும் திமுக கூட்டணி மட்டுமன்றி இன்னும் சில கூட்டணிக் கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் களம் காண்பார்கள் என்பதால் வாக்குகள் சிதறும் சூழலும் உள்ளது. விறுவிறுப்பான இந்தத் தேர்தல் களத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகத்தில் திமுக ஒன்பது மருத்துவர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. அதில் இரண்டு பேர் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறார்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு