Published:Updated:

`ராகுல், பிரியங்கா ஹத்ராஸ் பயணம்; 5 பேருக்கு அனுமதி!'- போலீஸ் குவிப்பு... பரபரப்பான உ.பி எல்லை

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க, ராகுல் காந்தியுடன் மேலும் நான்கு பேர் செல்ல அனுமதித்திருப்பதாக நொய்டா போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

ஹத்ராஸ் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கும் நிலையில், கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு நீதி கோரி போராட்டங்களும் வலுத்துவருகின்றன. அந்த இளம்பெண்ணின் பெற்றோரைச் சந்திக்க, அரசியல் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி ஹத்ராஸ் செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், அவருடைய சகோதரி பிரியங்கா காந்தியும் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தியை போலீஸார் கீழே தள்ளியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, அவர்களைக் கைதுசெய்த போலீஸார் சில மணி நேரத்துக்குப் பின்னர் விடுவித்தனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஹத்ராஸில் மாவட்ட எல்லை மூடப்பட்ட நிலையில், இரண்டு நாள்களாக அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவையும் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்திருந்தது. இந்தநிலையில், ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை ஊடகத்தினர் சந்திக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் இரண்டு நாள்களுக்குப் பின்னர் இன்று அனுமதியளிக்கப்பட்டது. அதேநேரம், அரசியல் கட்சியினர் உட்பட வெளியாட்கள் யாருக்கும் அனுமதியில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உ.பி பாலியல் வன்கொடுமை: `என்னை போலீஸார் தரையில் தள்ளினர்...!’ - ஹத்ராஸ் செல்லும் வழியில் ராகுல் கைது    #NowAtVikatan

இந்தச்சூழலில், இரண்டாவது முறையாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் இன்று டெல்லியிலிருந்து ஹத்ராஸ்-க்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன் காங்கிரஸ் எம்.பி-க்களும் பேருந்து ஒன்றில் புறப்பட்டனர். அவர்களுடன் காங்கிரஸ் தொண்டர்களும் இணைந்துகொண்டனர்.

உ.பி எல்லையில் போலீஸ் குவிப்பு
உ.பி எல்லையில் போலீஸ் குவிப்பு

காங்கிரஸ் தலைவர்கள் வருகையை ஒட்டி டெல்லி எல்லையிலுள்ள டெல்லி - நொய்டா விரைவுச் சாலையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். போலீஸார் சாலை முழுவதையும் மறைத்து, மனித சங்கிலி போன்று தடுப்பை ஏற்படுத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறது. `விதிமுறைகளை மீறி, கூட்டமாக காங்கிரஸ் தொண்டர்கள் கூடுவது சட்டப்படி தவறு’ என நொய்டா போலீஸார் தெரிவித்தனர்.

ஹத்ராஸ் சம்பவம்: `செய்தியாளரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதா?' - ஆடியோவால் புதிய சர்ச்சை

இது குறித்துப் பேசிய நொய்டா காவல்துறையின் ஏ.டி.சி.பி ரன்விஜய் சிங், ``144 தடை உத்தரவை அவர்கள் மீறியிருக்கிறார்கள். சட்டவிரோதமாக மக்கள் கூடுவதைத் தடுக்கவே நாங்கள் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். பொதுநலன் கருதி பெரிய அளவில் கூட்டமாகக் கூடாமல் அவர்கள் கலைந்து செல்ல வேண்டும்'' என்றார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதற்கிடையே, ராகுல்காந்தி உட்பட ஐந்து பேர்கொண்ட குழுவினருக்கு ஹத்ராஸ் செல்வதற்கு அனுமதி அளிப்பதாக உ.பி போலீஸார் தெரிவித்தனர். உத்தரப்பிரதேச எல்லைக்குத் தொண்டர்கள் புடைசூழ வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால், தங்களுடன் வந்த தலைவர்களையும் அனுமதிக்கக் கோரி ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் உ.பி எல்லையில் போராட்டம் நடத்தினர். காரில் உ.பி எல்லை வந்த ராகுல், பிரியங்கா இருவரையும் போலீஸார் தடுத்தநிலையில், காரிலிருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

மம்தா பேரணி
மம்தா பேரணி

`எந்த சக்தியாலும் ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தை நான் சந்திப்பதைத் தடுக்க முடியாது. அநீதிக்கு எதிராக நாம் வலுவாகக் குரல் எழுப்ப வேண்டும்' என உ.பி எல்லையில் கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். இந்தச் சூழலில், ஹத்ராஸ் கொடுமைக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் பேரணி நடத்தப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு