Published:Updated:

தர்மயுத்தம் முதல் தண்ணீர் பாட்டில் வீச்சு வரை... அதிமுக-வில் பன்னீரின் வளர்ச்சியும் சறுக்கலும்!

ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தர்மயுத்தம்

புடைசூழ ஒற்றைத் தலைமை என்ற தேரை எடப்பாடி தரப்பு வடம் பிடித்து இழுத்துச் சென்றது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு என்னும் சின்ன சணல் கயிற்றைவைத்து தேரைப் பின்னுக்கு இழுத்துவிட்டார் பன்னீர் என்பதே உண்மை.

தர்மயுத்தம் முதல் தண்ணீர் பாட்டில் வீச்சு வரை... அதிமுக-வில் பன்னீரின் வளர்ச்சியும் சறுக்கலும்!

புடைசூழ ஒற்றைத் தலைமை என்ற தேரை எடப்பாடி தரப்பு வடம் பிடித்து இழுத்துச் சென்றது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு என்னும் சின்ன சணல் கயிற்றைவைத்து தேரைப் பின்னுக்கு இழுத்துவிட்டார் பன்னீர் என்பதே உண்மை.

Published:Updated:
ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தர்மயுத்தம்

அ.தி.மு.க-வில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஒற்றைத் தலைமை விவகாரம் கொளுந்துவிட்டு எரியும் நிலையில் நடைபெற்ற பொதுக்குழு, ஓ.பன்னீர்செல்வத்தின் வெளிநடப்பில் முடிந்தது. ஆனால், இந்த முறை பன்னீர் ரொம்பவே தளர்ந்துபோய்விட்டார். ஏனென்றால், பன்னீர் ஏற்கனவே தர்மயுத்தம் மூலம் எடப்பாடி தரப்பை தன்னை நோக்கிச் சமாதான கொடியை காட்டவைத்திருக்கிறார். ஆனால், இம்முறை, பன்னீர் தரப்புதான் எடப்பாடி தரப்பிடம் வெள்ளைக்கொடியைக் காட்டிவருகிறது. தர்மயுத்தம் முதல் தற்போது பொதுக்குழுவில் தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதுவரை, பன்னீரின் பயணம் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

2016-ம் ஆண்டு, டிசம்பர் 5-ம் தேதி... முதல்வராக இருந்த ஜெயலலிதா, 75 நாள்கள் மருத்துவமனையில் இருந்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒட்டுமொத்த தமிழ்நாடே இரங்கல் தெரிவித்தது. அதற்கு மறுநாள் அதிகாலையில் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார் பன்னீர். முதல்வர் நாற்காலி அவருக்குப் புதிதல்ல. ஏனென்றால், 15 ஆண்டுகளுக்குப் பின்னால் சென்று பார்த்தால் தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1999-ம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் தினகரன். அப்போது பன்னீர், பெரியகுளம் நகராட்சி சேர்மன். கடன் வாங்கி தினகரனுக்குத் தேர்தல் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர் பன்னீரும், அவரின் தம்பி ராஜாவும். அந்தத் தேர்தலில் தினகரன் வெற்றியும்பெற்றார். அ.தி.மு.க-வின் அதிகார மட்டத்தின் முக்கியப்புள்ளி தினகரன் என்பதை அறிந்துகொண்ட பன்னீர், எல்லாவகையிலும் அவரை நன்றாக கவனித்துக்கொண்டார்.

ஜெயலலிதாவுடன் பன்னீர்செல்வம்
ஜெயலலிதாவுடன் பன்னீர்செல்வம்
விகடன்

இந்நிலையில்தான், 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. டான்சி வழக்கால், ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இதற்கிடையே, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் பன்னீருக்கு சீட் கிடைத்தது. பன்னீரும் வெற்றிபெற்றார். அ.தி.மு.க-வும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில் யார் முதல்வர் என்று எதிர்க்கட்சி உட்பட அனைவரும் திகைத்திருந்த நிலையில், பன்னீர் உட்பட யாருமே எதிர்பார்க்காத நிலையில், ஜெயலலிதாவுடன் அவர் அறிமுகமாகிறார். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னால், 2001-ம் ஆண்டு, செப்டம்பரில் முதன்முறையாகத் தமிழ்நாட்டின் முதல்வரானார் பன்னீர்.

2001-ம் ஆண்டு, செப்டம்பர் முதல் 2002-ம் ஆண்டு மார்ச் வரை ஆறு மாதங்கள் முதல்வராக இருந்த காலகட்டத்தில், சசிகலா தரப்பிலிருந்து பல நெருக்கடிகளைச் சந்தித்த பன்னீர், அது குறித்து ஜெயலலிதாவிடமே வாய் திறக்காமல் இருந்திருக்கிறார். இதனால், விசுவாசம் என்றால் அது பன்னீர்தான் என்று ஜெ. உட்பட அனைவரும் நம்பினர். வழக்கை முடித்துவிட்டு வந்த ஜெ.-வுக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த பன்னீருக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, சிறைத்துறை என ஏகப்பட்ட துறைகள் வழங்கப்பட்டன. இதனால், கட்சிக்குள் ஏகப்பட்ட செல்வாக்கு பன்னீருக்கு.

ஜெயலலிதாவுடன் பன்னீர்செல்வம்
ஜெயலலிதாவுடன் பன்னீர்செல்வம்

இதற்கு அடுத்தபடியாக, சொத்துக்குவிப்பு வழக்கில், 2014-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி கைதான ஜெயலலிதா பெங்களூருவிலுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அந்த இரவில் அடுத்த முதல்வர் யார் என்கிற பேச்சு வந்தபோது, ஜெயலலிதா பன்னீரை மீண்டும் அறியணையேற்றினார். பின்னர் வெளியே வந்ததும், முதல்வர் நாற்காலியை ஜெ.-விடமே ஒப்படைத்தார் பன்னீர்.

அதைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 6-ம் தேதி அதிகாலையில் முதல்வராகப் பதவியேற்றுக்கொள்கிறார் பன்னீர். ஆனால், இம்முறை ஜெயலலிதா இல்லை. இதனால், முழுதாக நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்துவிடலாம் என்று பன்னீர் நினைத்தாரோ என்னவோ... அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்ட சசிகலா அந்தக் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 5-ல் தேர்வுசெய்யப்பட்டதும், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து, தர்மயுத்தத்தைத் தொடங்கினார்.

ஓபிஎஸ். - இபிஎஸ்
ஓபிஎஸ். - இபிஎஸ்

இதைத் தொடர்ந்து, அதிமுக-வின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதால், பன்னீர் அணி, சசி அணியாக அ.தி.மு.க பிரிந்தது. அப்போது, பன்னீர் அணியில் ஓர் அமைச்சர் உள்ளிட்ட ஏழு எம்.எல்.ஏ-க்களும், 10 எம்.பி-க்களும் இருந்தனர். மேலும், நாளுக்கு நாள் பன்னீரின் பலம் அதிகரிக்கும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றார். அப்போது முதல்வராக இருந்த எடப்பாடியின் கை ஓங்கியது. மேலும், அதிகார பலமிக்க தினகரன் ஓரங்கட்டப்பட்டார்.

இச்சூழ்நிலையில், ஆட்சி கவிழும் தறுவாயில், பல்வேறுகட்ட பேச்சுவார்த்தையிலும் சில டீல்களாலும் இரு அணியும் 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் 21-ல் இணைந்தது. ஆட்சியில் துணை முதல்வராகவும், நிதியமைச்சராகவும் ஆன பன்னீர், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஆனார். ஆட்சிக்காலம் முடிவடைந்த, மீண்டும் தேர்தலைச் சந்தித்தபோது, முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஏற்பட்ட குழப்பம், தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், யார் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையில் தொடர்ந்தது. ஆனால், இந்த இரண்டிலும் எடப்பாடியின் கைதான் ஓங்கியது. இதையடுத்து நடைபெற்ற உட்கட்சித் தேர்தல் ரேஸிலும் எடப்பாடி தரப்பே முந்தியது.

ஓபிஎஸ் தர்மர்
ஓபிஎஸ் தர்மர்

ஆனால், இந்த விவகாரங்களிலெல்லாம் பன்னீர் முரண்டு பிடிக்கவில்லை. இந்நிலையில்தான், இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு அ,தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தனது தரப்புக்கு ஒரு சீட் வேண்டும் என்று பன்னீர் மிகக் கறாராக இருந்தார். முதன்முறையாக அதில் வெற்றியும்பெற்று, நீண்ட நாள் விசுவாசியாக இருந்த பரமக்குடி தர்மருக்கு சீட் வாங்கிக் கொடுத்தார் பன்னீர். இந்த இடம்தான் பன்னீரைக் கட்டம்கட்ட எடப்பாடி தரப்பு முடிவுசெய்ய முக்கியக் காரணம் என்கிறார்கள்.

இதையடுத்து, கட்சியின் பொதுக்குழுவை ஜூன் 23-ல் நடத்த அ.தி.மு.க தலைமை முடிவுசெய்தது. அதற்கான தீர்மானங்கள் தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்துப் பேசப்பட்ட விவகாரம் பூதாகரமானது.

இந்த விவகாரம் போஸ்டர் போரில் தொடங்கி, நீதிமன்றத்தில் முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேல் நடைபெற்ற விவகாரத்தில், அ.தி.மு.க-வுக்கு எடப்பாடி ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பெருவாரியான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

ஆனால், இந்த முறை பன்னீர் தரப்பு ரொம்பவே வீக்காக இருந்தது. 75-ல் ஆறு மாவட்டச் செயலாளர்கள்தான் பன்னீர் தரப்பு நபர்கள். தர்மயுத்தம் காலகட்டத்தில் தன்னுடன் இருந்த கே.பி.முனுசாமி, பாண்டியராஜன், பொன்னையா, செம்மலை உள்ளிட்ட பலரும் தற்போது எடப்பாடி பக்கம்.

ஆனால், அப்போதிருந்து தற்போது வரை, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட சிலர் பன்னீர் பக்கமே இருக்கிறார்கள். குறிப்பாக எடப்பாடி பக்கமிருந்த வைத்திலிங்கம் பன்னீர் பக்கம் வந்துவிட்டார். இருந்தபோதிலும், பன்னீர் பக்கம் நிர்வாகிகள் குவியவில்லை என்பதால்தான், நீதிமன்றத்தை அணுகவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார். எடப்பாடி பக்கம் நிர்வாகிகள் குவிவதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அவரின் தடாலடி அரசியல் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இது குறித்து ஒற்றைத் தலைமை பிரச்னையின்போது, ஜூ.வி பேட்டியில் அவரிடம் கேட்டபோதுகூட, " எனது மேனரிஸம் அது இல்லை" என்று அவரின் டிரேட் மார்க் சிரிப்போடு தெரிவித்திருந்தார். மேலும், " அப்படியெல்லாம் இல்லை. எனது அனுபவத்தில் அரசின் பல தவறுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். பிரச்னையின் முக்கியத்துவத்தைக் கருதி, களத்தில் இறக்கிறோம்" என்றார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

புடைசூழ ஒற்றைத் தலைமை என்ற தேரை எடப்பாடி தரப்பு வடம்பிடித்து இழுத்துச் சென்றது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு என்னும் சின்ன சணல் கயிற்றைவைத்து தேரைப் பின்னுக்கு இழுத்துவிட்டார் பன்னீர் என்பதே உண்மை. இதனால்தான், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆக்ரோஷத்துக்கு ஆளான பன்னீர் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன. அடுத்தடுத்த கூட்டத்தில் அது பூவாகக்கூட மாறலாம்... அரசியல் அப்படித்தான்!