Published:Updated:

ஒன்பதாவது முயற்சியில் எம்.எல்.ஏ... `குடியாத்தம்' எம்.எல்.ஏ காத்தவராயனின் கதை!

குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ காத்தவராயன்
குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ காத்தவராயன்

குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன், கடைசிவரை தன்னை கட்சிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்.

தமிழகத்தின் 15-வது சட்டசபை பதவியேற்று நான்கு வருடங்களில் 8 எம்.எல்.ஏ-க்களை இழந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு இந்த சட்டசபை தன் முதல் உறுப்பினரை இழந்தது. திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட, எம்.எஸ். சீனிவேலுக்கு வாக்கு எண்ணும் தினத்தில் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் சீனிவேல் இறந்துபோனார். அ.தி.மு.க 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க தயாராக இருந்த போது, சீனிவேலின் இறப்பு அப்போதையை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடும் வேதனையைத் தந்தது. சீனிவேல், தான் வெற்றி பெற்ற விஷயம் கூட தெரியாமல் இறந்து போனது குறித்து அ.தி.மு.க தொண்டர்கள் கடும் வேதனையடைந்தனர்.

ஸ்டாலின்: கடந்து வந்த அரசியல் பாதையும்... எஞ்சி நிற்கும் முதல்வர் பதவியும்! #Stalin68

அடுத்து, ஜெயலலிதாவை இந்தச் சட்டமன்றம் இழந்தது. சீனிவேல் இறப்பைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஆனால், இவரும் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். திருப்பரங்குன்றம் அடுத்தடுத்து இரண்டு எம்.எல்.ஏ-க்களை இழந்தது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியும் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். சூலூர், விக்கிரவாண்டி, திருவொற்றியூர் , குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ-க்களையும் இந்தச் சட்டமன்றம் இழந்தது. இப்படி தமிழகத்தின் 15-வது சட்டசபை இதுவரை 8 எம்.எல்.ஏ-க்களை இழந்துள்ளது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் அதிக எம்.எல்.ஏ-க்களை இழந்திருப்பது இந்தச் சட்டசபைதான்.

திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான கே.பி.பி. சாமி மரணமடைந்த மறுநாளே குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ காத்தவராயன் இறந்தது தி.மு.க-வுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், சட்டமன்றத்தில் தி.மு. க எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது.

` நெல்லை கண்ணன் பாணியில் சேலம் பெண்!' - ஃபேஸ்புக் பதிவால் கொந்தளித்த பா.ஜ.க நிர்வாகிகள்

தனக்கென்று வாழாமல் கட்சிக்காக வாழ்ந்த அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் அடிக்கடி நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தார். திருமணம் செய்துகொள்ளாமல், கட்சிக்காக உழைத்த அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் தாமதமாகவே கிடைத்தது.

காத்தவராயன் எம்.எல்.ஏ
காத்தவராயன் எம்.எல்.ஏ

1980-ம் ஆண்டு தி.மு.க-வில் சேர்ந்த காத்தவராயன் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அரசியலமைப்புச் சட்ட நகலை எரித்து சிறை சென்றவர். பேரணாம்பட்டு நகராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். தி.மு.க சார்பாக எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட, 9 முறை சீட் கேட்டார். முதல் 8 முறையும் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. குடியாத்தம் இடைதேர்தலில் நிற்க 9-வது முறையாக சீட் கேட்டபோதுதான், அவருக்கு தி.மு.க தலைமை சீட் ஒதுக்கியது. வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன அவரால், பதவி காலத்தை முழுமையாக நிறைவுசெய்ய முடியவில்லை..

தி.மு.க தொண்டர்கள் தரப்பில் கூறப்படுவதாவது, ``திருமணமாகாதவர் என்பதால் முழு நேர மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவர் உடல் நிலையில் அக்கறை காட்டவில்லை. ஏற்கெனவே, அவருக்கு இதய நோய் இருந்தது. அதற்காக, கடந்த ஜனவரி 4-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். அதற்குப் பிறகு, தொடர்ந்து அவருக்கு உடல்நிலை மோசமடைந்துகொண்டிருந்தது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், மீண்டு வந்துவிடுவார் என்றுதான் நம்பினோம். ஆனால், எங்களை மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்றுவிட்டார்.'' என்கின்றனர்.

குடியாத்தம்
குடியாத்தம்

அடுத்தடுத்த எம்.எல்.ஏ-க்களின் மறைவால் தி.மு.க தலைவர் ஸ்டாலின், `தனக்கு யாரும் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வர வேண்டாம் ' என்று அறிவித்துள்ளார். தி.மு.க-வின் பொதுக் கூட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு